இரு கொரில்லாக்களுக்கு கொரோனா தொற்றியது

கலிபோர்னியாவின் சான் டியாகோ மிருகக்காட்சி சாலையில் உள்ள இரண்டு கொரில்லாக்களிடம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த இரண்டு கொரில்லாக்களுக்கும் கடந்த மாதம் இறுமல் ஏற்பட்டது. வேறொரு கொரில்லாவுக்கும் இலேசான அறிகுறி தென்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் இரண்டு கொரில்லாக்களுக்குத் தொற்று இருந்தது தெரியவந்ததாக கலிபோர்னிய ஆளுநர் கெவின் நியுஸ்கம் கூறினார்.

நோய்த்தொற்று அறிகுறி தென்படாத ஊழியரிடமிருந்து கொரில்லாக்களுக்கு வைரஸ் தொற்றியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

மனித மரபணுவில் 98 வீதத்தைக் கொரில்லாக்கள் கொண்டிருக்கின்றன.

தென் கலிபோர்னியாவில் வைரஸ் பரவல் அதிகரித்ததால், சான் டியாகோ மிருகக்காட்சி சாலை கொரில்லாக்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை கடந்த ஆண்டு டிசம்பரில் மூடியது.

கொரில்லாக்களுக்கு அருகே செல்லும் ஊழியர்கள் முகக்கவசம் உள்ளிட்ட தனிநபர் பாதுகாப்பு ஆடை அணிந்திருக்க வேண்டும் என்று மிருகக்காட்சி சாலை அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா தொற்றினால் உலகெங்கும் 90 மில்லியனுக்கும் அதிகமான மனிதர்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு சுமார் இரண்டு மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் இந்தத் தொற்று கொரில்லாக்களை தீவிரமாகத் தாக்குமா என்பது பற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.


Add new comment

Or log in with...