"எனது விதி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரிகளின் கைகளில்" | தினகரன்

"எனது விதி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரிகளின் கைகளில்"

தனது விதி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரிகளின் கைகளில் தங்கியிருப்பதாக பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்றுநர் மிஸ்பா உல்- ஹக் தெரிவித்தார்.

நியூஸிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் அடைந்த படு தோல்வியைத் தொடர்ந்து மிஸ்பாவின் எதிர்காலப் பதவி குறித்து பல்வேறு அபிப்பிராங்கள் எழுப்பப்பட்ட நிலையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த 15 மாதங்களில் அந்நிய மண்ணில் நடைபெற்ற மூன்று டெஸ்ட் தொடர்களிலும் மிஸ்பாவின் பயிற்றுவிப்பிலான பாகிஸ்தான் தோல்வி அடைந்திருந்தது.

கொரோனா தொற்றுநோய் காரணமாக தனிமைப்படுத்தலுக்காக நீண்டகாலம் நியூஸிலாந்தில் தங்கியிருக்க நேரிட்டமை அங்கு அடைந்த தோல்விக்கு காரணம் என மிஸ்பா குறிப்பிட்டார்.

'கிரிக்கெட் குழுவிடம் எனது கருத்துக்களை செவ்வாய்க்கிழமை வெளியிடுவேன். கிரிக்கெட் சபையிடம் பரிந்துரைப்பதற்கான உரிமை அவர்களுக்கே இருக்கின்றது' என செய்தியாளர்களிடம் மிஸ்பா கூறினார்.

நியூஸிலாந்துடனான இரண்டு போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் 2 -−1 என்ற ஆட்டக் கணக்கில் தோல்வி அடைந்த பாகிஸ்தான், டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்திருந்தது.

அவுஸ்திரேலியா, இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடர்களிலும் மிஸ்பாவின் பயிற்றுவிப்பில் பாகிஸ்தான் தோல்வி அடைந்திருந்தது.

நியூஸிலாந்துக்கான கிரிக்கெட் விஜயத்தின் ஆரம்பத்தில் பாகிஸ்தானின் 6 வீரர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர்கள் ஹோட்டலிலேயே தங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஆனால், அவர்களில் சிலர் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக எச்சரிக்கப்பட்டனர்.

'நாங்கள் 18, 19 நாட்கள் அறைகளுக்குள்ளேயே முடங்கியிருக்க நேரிட்டது. எங்களால் எதையும் செய்யமுடியவில்லை. ஓடக்கூட முடியவில்லை. அறைகளுக்குள்ளேயே அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தோம்' என்றார் மிஸ்பா.

'எங்களது நிலைமையை ஒருபுறம் ஒதுக்கிவையுங்கள், சுற்றுப் பயணம் செய்யும் சகல அணிகளையும் அது (கொவிட்) பாதிக்கின்றது. அதனால் ஆற்றல் வெளிபாடுகளில் மேடு பள்ளங்கள் ஏற்படுகின்றது. வீரர்கள் காயமடையவும் செய்கின்றனர்' என அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...