டோக்கியோ ஒலிம்பிக் இரத்து என வெளியான அறிக்கை போலியானது | தினகரன்

டோக்கியோ ஒலிம்பிக் இரத்து என வெளியான அறிக்கை போலியானது

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவை இரத்துச் செய்வது குறித்து அடுத்த மாதம் ஆராயப்படும் என வெளியான அறிக்கை போலியானது என டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிற்போடப்பட்ட டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழா நடைபெறுவதற்கு 200 தினங்களே உள்ளது. இந் நிலையில் கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக டோக்கியோவின் பெரும்பாகத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் உலக நாடுகளும் போராடி வருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் விழாவை இரத்துச் செய்வது தொடர்பாக அடுத்த மாதம் ஆராயப்படும் என அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த அறிக்கை போலியானது என ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழா மீண்டும் பிற்போடப்படவேண்டும் என 45 வீதத்தினர் விரும்புவதுடன் ஒட்டுமொத்தமாக இரத்துச் செய்யப்படவேண்டும் என 35 வீதத்தினர் விருப்பம் கொண்டுள்ளதாக கியோடோ செய்தி நடத்திய கருத்துக்கணிப்பு காட்டுகின்றது.

ஆனால், இதற்கு நேர்மறையான கருத்தை தனது புதுவருட உரையில் டோக்கியோ 2020 பிரதம நிறைவேற்று அதிகாரி டொஷிரோ முட்டோ வெளியிட்டார்.

'டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவை இரத்துச்செய்யுமாறு கொருபவர்களின் எண்ணிக்கை 5 வீதத்தால் மாத்திரமே அதிகரித்துள்ளது' என முட்டோ தெரிவித்தார்.

'பிற்போடுமாறு கோருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதன் அர்த்தம் என்னவென்றால் இவ் விழா நடத்தப்படவேண்டும் என அவர்கள் விரும்புகின்றார்கள் என்பதாகும்' என அவர் மேலும் கூறினார்.

'இவ் விளையாட்டு விழா நடைபெறுவதற்கு, தொற்று தடுப்பு நடவடிக்கைகளுடன் உயிராபத்தற்ற விளையாட்டு விழா நடத்தப்படும் என்தற்கான உத்தரவாதத்தை நாங்கள் நிச்சயமாக அளிக்கவேண்டும். அந்த வகையில் நாம் அவ்வாறு நினைத்தால் மக்கள் அதற்கு பின்னால் வருவார்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன்'. என்றார் அவர்.

இவ் விளையாட்டு விழாவை இரத்துச் செய்துவிட்டு பாரிஸுக்குப் பதிலாக 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவை டோக்கியோ நடத்தவேண்டும் என பிரித்தானியாவின் பிரபல படகோட்ட நட்சத்திரம் மெத்யூ பின்சென்ட் கேட்டுக்கொண்டுள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் குழுவினரும் டோக்கியோ 2020 ஏற்பாட்டுக் குழுவினரும் இவ் விளையாட்டு விழாவின் தலைவிதி குறித்து பெப்ரவரி மாதம் ஆராய்வார்கள் என ஜப்பானிய ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தி போலியானது என முட்டொ தெரிவித்தார்.

இவ்வாறான செய்திகள் வெளிவரும்போது சிலர் அது குறித்து ஆர்வப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.

'நாங்கள் அவ்வாறு சிந்திக்கவே இல்லை என்பதையும் இத்தகைய அறிக்கைகள் தவறானவை என்பதையும் கூற விரும்புகின்றேன்' என முட்டோ மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...