இலங்கை பாடசாலை கிரிக்கெட் மார்ச் மாதம் ஆரம்பம்

பாடசாலை கிரிக்கெட்டை எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஆரம்பிப்பதற்கான திட்டங்களை இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கம் வகுத்து வருகின்றது.

இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கம் இந்த முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், கல்வியமைச்சு இதுவரையில் தங்களுடைய அனுமதியை வழங்கவில்லை என இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் திலக் வதுஹெவ தெரிவித்தார்.

இந்தவிடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட திலக் வதுஹெவ, “எமது இந்த தீர்மானத்துக்கான அனுமதியை கல்வியமைசு இதுவரை வழங்கவில்லை. இந்த நிலையில், கல்வியமைச்சின் எழுத்துமூலமான அனுமதி அடுத்தவாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

கல்வியமைச்சின் அனுமதி கிடைப்பதுடன், அனைத்துவிடயங்களும் சரியாக இடம்பெறும் பட்சத்தில் சாதாரண தர பரீட்சையின் பின்னர், மார்ச் மாத இறுதியில் தொடரை நடத்த முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

காலம் போதாத காரணத்தால், இம்முறை தொடரை ஒருநாள் போட்டிகள் அடங்கியதாக நடத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுமாத்திரமின்றி, டியர் ஏ மற்றும் டியர் பி என்ற பிரிவுகளில், தலா 18 அணிகள் மோதவுள்ளன.

“தொடர் நடைபெறும் பட்சத்தில் கல்வியமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு அறிவிக்கும் அனைத்து கொவிட்-19 வைரஸ், வழிமுறைகளும் சரியாக கடைபிடிக்கப்படும். அத்துடன், விளையாட்டு நிகழ்வுகள் மீண்டும் ஆரம்பிக்கும் என்ற எண்ணத்துடன் காத்திருக்கும் இளம் சமுதாயத்துக்கு, வழிசமைத்துக்கொடுப்பதே எமது அனைவரதும் நோக்கமாக உள்ளது” என திலக் வதுஹெவ மேலும் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் மே மாதத்தில், 17 வயதுக்குட்பட்டோர் மற்றும் 15 வயதுக்குட்பட்டோருக்கான போட்டித்தொடர்களையும் ஆரம்பிப்பதற்கு, இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கம் எதிர்பார்த்துள்ளது.


Add new comment

Or log in with...