இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட்; இலங்கைக்கு சாதகத் தன்மை அதிகம்

 - நிரோஷன் திக்வெல்ல

இங்கிலாந்துக்கு எதிராக வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சொந்த மண்ணில் நடைபெறுவதால் இலங்கைக்கு சாதகத் தன்மை அதிகமாக இருப்பதாக விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான நிரோஷன் திக்வெல்ல தெரிவித்தார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது சதத்தைக் குவிக்க வேண்டுமென்ற நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்ற திடசங்கல்பம் பூண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சூம் இணையவழியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்து அணியினர் இங்கு வருகைதந்தபோது இருந்த வாய்ப்புகளைவிட நடப்பு தொடருக்கான வாய்ப்புகள், சாதகத்தன்மை இலங்கைக்கு அதிகமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

2018இல் இங்கிலாந்திடம் 0 - 3 என்ற ஆட்டக்கணக்கில் தொடரை இலங்கை முழுமையாக இழந்திருந்தது. அதற்காக இம்முறை அப்படியான நிலை ஏற்படாது என்பது திக்வெல்லவின் கருத்தாகும்.

'2018ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரைவிட இம்முறை இலங்கைக்கு நல்ல வாய்ப்பு இருக்கின்றது. ஏனெனில் ஜொப்ரா ஆச்சர், பென் ஸ்டோக்ஸ், உட்பட இன்னும் சில பிரதான வீரர்கள் இங்கிலாந்து அணியில் இல்லை. எமது இயல்பான விளையாட்டு நுட்பங்களைப் பயன்படுத்தி எப்போதும்போல் காலியில் வழமையாக விளையாடவேண்டும்' என்றார் அவர்.

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராவதற்கு போதிய அவகாசம் கிடைக்கவில்லை எனவும் இங்கு நடைபெற்ற லங்கா பிறீமியர் லீக் இருபது 20 போட்டியில் விளையாடிய சூட்டுடனேயே தென் ஆபிரிக்கா பயணமானதாகவும் திக்வெல்ல தெரிவித்தார்.

'தென் ஆபிரிக்க சூழ்நிலைகளுக்கு எங்களை மாற்றிக்கொள்வதில் சிரமத்தை எதிர்கொண்டோம். ஏனெனில் தயாராவதற்கு போதிய அவகாசம் கிடைக்கவில்லை. இந்தத் தொடருக்கு தயாராவதற்கும் எமக்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்பே கிடைத்தது. 2018இல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விட்ட குறைகளைத் திருத்தி இம்முறை திறமையான கிரிக்கெட் ஆற்றல்களை வெளிப்படுத்த முயற்சிப்போம்' என திக்வெல்ல மேலும் கூறினார்.

இது இவ்வாறிருக்க, தனது தனிப்பட்ட துடுப்பாட்டத்தை முன்னேற்றுவது குறித்து திக்வெல்ல கவனம் செலுத்திவருகின்றார்.

'நான் பல சந்தர்ப்பங்களில் 30 அல்லது 40 ஓட்டங்களைப் பெறுவதுடன் இன்னும் சில சந்தர்ப்பங்களில் 60 அல்லது 70 ஓட்டங்களைப் பெற்றிருக்கின்றேன். ஆனால், என்னால் ஒரு சதத்தைப் பூர்த்தி செய்ய முடியாமல் போயுள்ளது.

பெரும்பாலும் பின்வரிசை வீரர்களுடனேயே எனக்கு துடுப்பெடுத்தாட வேண்டிவருகின்றது. ஆனால், கடந்த தொடரில் அதில் மாற்றம் ஏற்பட்டது. தசுன் ஷானக்க, வனிந்து ஹசரங்க ஆகியோர் பின்வரிசையில் துடுப்பெடுத்தாடினர். ஆனால், என்னால் அதிகளவான ஓட்டங்களைப் பெற முடியாமல்போனது.

இம்முறை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப சிறப்பாக துடுப்பெடுத்தாடி முதலாவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்ய திடசங்கற்பம் பூண்டுள்ளேன்' என்றார்


Add new comment

Or log in with...