மத்திய கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்குக்கு சவாலாகிய ஈரான்

கல்வியில் மேலோங்கி இருந்தால் எந்தசக்திக்கும் அடிமையாக வாழ வேண்டிய அவசியமில்லை, தலைநிமிர்ந்து நிற்கலாம்என்பதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு ஈரான் இஸ்லாமியகுடியரசாகும். இஸ்லாமிய உலகில் அணு விஞ்ஞானம், நனோ தொழில்நுட்பம், மருத்துவம், பாதுகாப்புத்துறை என்று பல துறைகளில், பல தடைகளையும் தாண்டி அந்நாடு தலைசிறந்து விளங்குகிறது.

இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னரான கடந்த 42ஆண்டுகளில் ஈரானின் பொது இராஜதந்திரம் எப்போதும் அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு கடுமையான சவாலாக இருந்து வருகிறது. ஈரானிய விவகாரமானது அமெரிக்க திட்டமிடல் மற்றும் பட்ஜெட் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.  

எவ்வாறாயினும், கடந்த நான்கு தசாப்தங்களாக அமெரிக்காவின் முக்கிய நலன்கள், ஈரானின் அரசியல் மற்றும் இராணுவ வலிமையால் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.  

சர்வதேச சியோனிசத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான புனித போராட்டம், ஜெருசலமை ஆக்கிரமித்துள்ள ஆட்சியை அங்கீகரிக்க மறுக்கும் அமைப்புகளை வழிநடத்துதல், முஸ்லிம் நாடுகளை துண்டாடி, சிறிய சக்தியற்ற மற்றும் அடிபணியும் நாடுகளை உருவாக்குவதற்கான சியோனிச முயற்சிகளை ஈரான் எதிர்கொள்வதும் அமெரிக்கா தலைமையிலான உலகிற்கு மிக முக்கியமான சவால்களில் ஒன்றாகும். பல்வேறு வெளிப்படையான மற்றும் இரகசிய தகவல்களின்படி, ஈரானுடனான மிகத் தீவிரமான அமெரிக்கப் பிரச்சினை இது என அறிய முடிகிறது.  

மறுபுறம், கடந்த தசாப்தத்தில், பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அதிகரித்து வரும் ஈரானின் செல்வாக்கு இராணுவ ரீதியில் அதனது வியக்கத்தக்க வளர்ச்சி இதுவரை ஆதிக்கம் செலுத்தி வந்த சக்திகளுக்கு பெரும் தலைவலியாக மாறி வருகிறது. பஹ்லவி மன்னர் ஆட்சிக் காலத்தில் அதிகார சக்திகளின் கைப்பாவையாக செயற்பட்ட ஈரான் இன்று பிராந்தியத்தில் தவிர்த்து செயற்பட முடியாத, தவிர்க்க முடியாத ஒரு முக்கிய சக்தி என்ற நிலையை அடைந்துள்ளது.  

 1943டிசம்பரில், நேச நாடுகளின் தலைவர்கள் (ஸ்டாலின், வின்சன்ட் சேர்ச்சில் மற்றும் ரூஸ்வெல்ட்) ஈரானின் மன்னராக இருந்த ஷாவுக்கு தகவல் தெரிவிக்காமல், தெஹ்ரானுக்கு வருகை தந்து போரை நிர்வகிக்கும் நோக்கத்துடன் தெஹ்ரானில் மாநாடொன்றையே நடத்தி விட்டு சென்றனர். அவ்வாறு அக்காலத்தில், விருந்தினர்கள் போல் அவர்களின் இஷ்டப்படி வருவதற்கும், உண்பதற்கும், தீர்மானங்கள் எடுப்பதற்கும் அவர்களால் முடிந்தது. அதற்கான சேவைகளை வழங்குவதற்கு மட்டுமே ஈரானால் முடிந்தது. ஆனால் இன்று, அவ்வாறான ஒன்றை அவர்களால் நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு ஈரான் வளர்ந்துள்ளது.  

இன்று மத்திய கிழக்கில் ஈரானை மீறி எதுவும் செய்ய முடியாது என்ற ஒரு நிலைமை உருவாகியுள்ளது. இந்நிலையை உருவாக்கியதில் ஷஹீத் ஜெனரல் சுலைமானியின் பங்கு மகத்தானது. 2003இல் இருந்து தொடர்ந்த ஈராக் பிரச்சினை தீர்வில் ஈரானின் பங்கு பிராந்திய நிர்வாகத்தில் ஈரானின் பங்களிப்பு அதன் சக்தியின் மற்றொரு பகுதியை நிரூபித்துள்ளது.  

ஈராக்கை ஆக்கிரமிப்பதில் அமெரிக்கா டிரில்லியன் கணக்கான டொலர்களை செலவுசெய்தது, ஆயினும் ஈரானின் இராஜதந்திர செயல்பாடு அதனை பயனற்றதாக ஆக்கியது. அதுமட்டுமல்லாமல் ஈரானிய பேரம் பேசும் சக்தியும் பல்வேறு துறைகளில் அதன் வளர்ச்சியும் ஈரானின் செல்வாக்கையும் அதிகரித்துள்ளது. இது ஈரானின் எதிரிகளால் கணிப்பிட்டு புரிந்து கொள்ள முடியாத ஒன்று.  

தமது கட்டுப்பாட்டுக்குள் இருந்த பிராந்தியத்தில் ஜெனரல் சுலைமானியை பாதுகாப்பு மையமாகக் கொண்ட பாரிய ஈரானிய பங்கை குறைப்பதற்கு அவரை அழித்தொழிப்பதைத் தவிர வேறு வழியில்லை என அமெரிக்கா கருதியது.  

அவரது வேகம், விவேகம், போர்த் தந்திரம், தமது மேலாதிக்கத்துக்கு சவாலாக மாறி வருவதை அறிந்து, அவர் மீது கொண்ட அச்சத்தின் காரணமாகவே சுலைமானியை அமெரிக்கா படுகொலை செய்தது எனலாம். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளையும், பாதிப்பின் அனைத்து பக்கங்களையும் விரிவாக ஆராய்ந்து மதிப்பிட அவர்கள் தவறினர். தம் விருப்பப்படி சிக்கல் தீர்க்கும் மேற்கத்திய முறையின்படி அவர்களுக்கு அத்தகைய மதிப்பீடு அவசியப்பட்டிருக்காது. இச்செயலுக்கான பொறுப்பை ட்ரம்ப் ஏற்றதே இதற்கு போதுமான சாட்சியாகும். ட்ரம்ப் பதவியேற்றவுடன், அமெரிக்க நிர்வாகம் சர்வதேச அரங்கில் தன்னிஷ்டப்படி நடக்கத் தொடங்கியது.  

ட்ரம்ப் அனைவரையும் அச்சுறுத்தி காரியம் சாதிக்க முனைந்தார், அவர் உலகின் அனைத்து நாடுகளுக்கும் அச்சுறுத்தலாகக் கருதப்பட்டார். வெளியில் ஈரானுடனான நட்பையும், உள்ளே பகைமையையும் அவர் எடுக்கவில்லை. அவர் தன்னை ஒரு உண்மையான எதிரி என்று காட்டினார்.  

ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவை துவம்சம் செய்ததில் சுலைமானியின் பங்களிப்பு அளப்பரியது. இதனால் அவர் ஈரானுக்கு மட்டுமல்ல முழு பிராந்தியத்துக்கும் ஒரு ஹீரோவாக கருதப்பட்டார். ஜெனரல் சுலைமானி பிராந்தியத்தில் பயங்கவாத எதிர்ப்பு முன்னணியை ஒன்றிணைப்பதன் மூலம் வெற்றியின் அடையாளமானார். அதனால் அவரை ஒழித்துக் கட்டினால் ஈரான் பலவீனமடைந்து விடும், பிராந்தியத்தில் நிலைமை முன்பிருந்தது போல் தமக்கு சாதகமாக மாறி விடும் என்று அவர்கள் தப்புக்கணக்கு போட்டனர்.  

சுலைமானியின் படுகொலையுடன், நாட்டினுள் ஐந்தாம் படை உதவியுடனும் பொருளாதார தடை பிரச்சினைகள் மற்றும் ஊடகப் போருடனும் ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்து, பிராந்தியமெங்கும் அமெரிக்க எதிர்ப்பு சக்திகளிடையே கருத்தியல் சந்தேகம் ஏற்படுத்திடுவதன் மூலம் நிறுவன சரிவை ஏற்படுத்தலாம் என்று ட்ரம்ப் நினைத்தார். ஆனால் அமெரிக்காவின் அதிநவீன, மிகவும் மேம்பட்ட உளவு ட்ரோனான 'குளோபல் ஹாக்' கை ஈரான் தனது வான்பரப்பில் ஊடுருவியதற்காக ஏற்கனவே சுட்டு வீழ்த்தியது. அது அமெரிக்காவுக்கு எச்சரிக்கையான போதிலும், ஈரானிய ஜெனரலை படுகொலை செய்தது.  

இங்குதான் உலகம் எதிர்பாராத ஒன்று நடந்தது. ஈரானியர்கள் திருப்பித் தாக்கினார்கள். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி) ஜனவரி 8, 2020அன்று, மேற்கு ஈராக்கின் அல் அன்பர் பிரதேசத்தில் உள்ள அமெரிக்காவின் அய்ன் அல்-அசாத் இராணுவ தளத்தை தனது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்கி அழித்தது.  

அமெரிக்கா தமது ஆட்சியினை பாதுகாக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்த அரபு ஆட்சியாளர்களின் கனவில் இடி விழுந்தது. தாமே பிராந்தியத்தின் பாதுகாவலர் என்று கடந்த நான்கு தசாப்தத்துக்கும் மேலாக கட்டியெழுப்பி வந்த அமெரிக்காவின் 'இமேஜ்' ஓரிரவில் தவிடுபொடியானது. அரசியல் விமர்சகர்களின் பார்வையில் அமெரிக்கா சுலைமானியை கொலை செய்ததன் மூலம் தற்கொலை செய்து கொண்டுள்ளது.

தாஹா முஸம்மில்


Add new comment

Or log in with...