கொரோனா தொற்றை துரும்பாக வைத்து அரசியல் செய்யாதீர்கள்! | தினகரன்

கொரோனா தொற்றை துரும்பாக வைத்து அரசியல் செய்யாதீர்கள்!

நாம் ஆட்சிக்கு வந்தது பொதுமக்களின்சொத்துகளைப்பாதுகாப்பதற்காகும் என்றுகூறுகின்றார் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர.

கே: கடந்த காலங்களில் மீன்பிடித்துறை பெரும் பாதிப்புக்கு உள்ளானது. மீண்டும் அதனை பழைய நிலைமைக்கு கொண்டு வர எவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?  

பதில்: ஆம், நாம் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட கொவிட்19தொற்று காரணமாக மீன்பிடித் துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் இழுவைப் படகுகளை கொண்டு பெரிய அளவில் மீன்பிடிப்பவர்கள் தொடக்கம் சிறிய அளவில் மீன்பிடிக்கும் அனைத்து தரப்பினரும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளார்கள். இவ்வாறான பாதிப்பு யுத்த காலத்தில் கூட இருக்கவில்லை. அரசாங்கம் என்ற வகையில் இதில் நாம் தலையிட்டு உள்ளோம். நாம் கொழும்பிலுள்ள அமைச்சில் இருந்தல்ல, அச்சமூகத்திடம் நேரில் சென்றுதான் நிலைமையை ஆராய்ந்தோம். அதனால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புஎன்ன? அதை எப்படி நிவர்த்தி செய்வது என்ற விடயங்களை சரியான முறையில் அறிய முடிந்துள்ளது.முதலில் நாம் கொவிட்19தொற்றுக்கு ஆளானவர்களை அறிந்து அவர்களிடையே எவ்வாறு அது பரவுகிறது என்பதை ஆராய்ந்தோம். அதன் மூலம் அவர்களிடையே நோய் பரவுவதை கட்டுப்படுத்தினோம். உண்மையில் பேலியகொட கொரோனா கொத்தணியானது மீனவர்களுடன் தொடர்புடையதல்ல. வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டவர்களாலேயே அது ஏற்பட்டது. அதனால் உடனடியாக அவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தினோம். இரண்டு வாரங்களுக்குள் மீன்பிடித்துறையை பழைய நிலைமைக்கு கொண்டு வர முடிந்தது. மீன்பிடிக் கூட்டுத்தாபன விற்பனை வலையமைப்பு மிகச் சிறப்பாக செய்யப்பட்டது. அதன் மூலம் பாவனையாளர்கள் பாதுகாக்கப்பட்டு சாதாரண விலைக்கு மீன் விற்பனை மேற்கொள்ளப்பட்டது.

கே: தற்போது மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை வலையமைப்பின் நிலைமை எவ்வாறு உள்ளது?  

பதில்: மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில் நல்ல நிலைமையில் இருந்த கூட்டுத்தாபன விற்பனை வலையமைப்பு நல்லாட்சிக் காலத்தில் பெரும் சரிவைச் சந்தித்தது. அக்காலத்தில் அதிகளவிலான விற்பனை நிலையங்கள் பாதிக்கப்பட்டன. இறுதியில் பாதையோரத்தில் வைத்து விற்பனை செய்யும் கடை போலானது. மீனவர்களுக்கும் பாவனையாளர்களுக்கும் நியாயத்தை நிலைநாட்டுவது அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்கான திட்டம் ஒன்றை நாம் செயற்படுத்தி வருகின்றோம்.  

கே: புதிய அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை இருந்தாலும், அரசாங்கம் மக்களின் அபிலாசைகளை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சி குற்றம் சாட்டுகிறது அல்லவா?  

பதில்: நாம் மக்களின் எண்ணங்களை சரியாகப் புரிந்து கொண்டவர்கள். ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் நாட்டை மேம்படுத்துவதற்கான நல்ல திட்டங்கள் உள்ளன. ஆனால் தொற்று நிலைமை காரணமாக அதனை செயல்படுத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இது அரசாங்கத்தின் பலவீனம் அல்ல. உலகளாவிய நிலைமையாகும். இன்று எதிர்க்கட்சியினர் அரசாங்கம் 'ஃபெயில்' என்று கூறுகின்றார்கள். அவ்வாறு கூறும் அவர்களே 2015தொடக்கம் நாட்டை 'ஃபெயில்' ஆக்கியவர்கள். எங்களுக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன. நாம் செய்யும் வேலைகளை பார்த்து சரியா, பிழையா என மக்கள் முடிவு செய்வார்கள். இன்று சிலர் போலியாக கூச்சலிட்டாலும் அவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை. அதனை மூடிமறைக்கவே அவர்கள் முயல்கின்றார்கள்.  

கே: கிழக்கு முனையம் போன்ற பிரச்சினைகளை உருவாக்கி இந்த அரசாங்கம் தனியார்மயம் என்னும் மோசமான மாற்றுவழியை தேடுவதாக குற்றச்சாட்டு உண்டல்லவா?  

பதில்: எமது மாற்றுத் திட்டம் தனியார் மயப்படுத்தல் அல்லது விற்பனை செய்வது அல்ல. மக்களின் சொத்தை பாதுகாப்பதாகும். நாம் மக்களின் சொத்தை பாதுகாத்து தேசிய பொருளாதார திட்டங்கள் மூலம் நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லவே ஆட்சிக்கு வந்தோம். பிரதமர் அண்மையில் பாராளுமன்றத்தில் கிழக்குமுனையத்தை ஒருபோதும் தனியார் மயப்படுத்தவோ , விற்கவோ மாட்டோம் எனக் கூறினார். இன்று அரசியல் அநாதைகளாக இருப்பவர்கள், போலியாக கோஷமிட்டு பொய் வதந்திகளைப் பரப்புகிறார்கள்.கொரோனா தொற்று நிலைமைக்கு மார்ச் மாதத்தில் எடுத்த நடவடிக்கைக்கும், இரண்டாவது அலையின் போது எடுத்த நடவடிக்கைக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. 

கே: முதலாவது அலையை அன்று வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினாலும் இரண்டாவது அலை இன்னும் பரவி வருகின்றது. இதற்கும் அரசாங்கத்தின் மீது குற்றம் கூறுகிறார்கள் அல்லவா?  

பதில்: கொவிட்19போன்ற தொற்றுநோயை உடனடியாக கட்டுப்படுத்த முடியாது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் கூட அதனை கட்டுப்படுத்த முடியாது தடுமாறுகின்றன. நாம் இன்னும் தொற்றை கட்டுப்படுத்தக் கூடிய நிலைமையிலேயே உள்ளோம். நோய்த் தொற்றிலும் அரசியல் நடத்த, இனவாதத்தைத் தூண்ட சிலர் முயற்சி செய்கிறார்கள். அவர்களிடம் நான் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று மனிதாபிமான ரீதியில் கேட்கிறேன். நாம் அரசியல் செய்வோம் ஆனால் தொற்றை துரும்பாக வைத்து அரசியல் செய்யாதீர்கள். அரசாங்கம் தொற்று நிலைமையை அரசியலுக்கு உபயோகப்படுத்தவில்லை. அதன் அனைத்து பொறுப்புகளையும் சுகாதாரப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளது. நாம் தேவையான வசதிகளை மாத்திரமே அளித்து வருகிறோம்.

கே: தடுப்பு மருந்து போன்ற ஏற்றுக் கொள்ளப்பட்ட முறைகளைத் தவிர்த்து பாணி மருந்தை பிரபலப்படுத்துவதான கருத்து சமூகத்தில் நிலவுகிறது அல்லவா?  

பதில்: அந்தக் கருத்து தவறாகும். ஏற்கனவே தடுப்புமருந்தை இலங்கைக்கு பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. வெகுவிரைவில் எமக்கு அந்த தடுப்பு மருந்து கிடைக்கும். பாணி போன்ற தேசிய மருத்துவ முறைகளை பற்றி ஆராய்வது தவறில்லை. ஒரு விடயத்தைப் பற்றி ஆராய்வு செய்கிறோம் என்றால் அதை ஏற்றுக் கொண்டோம் என்று கூறுவதாகாது.  

கே: புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவது அரசின் நோக்கம் என்று தேர்தல் காலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் தற்போது புதிய அரசியலமைப்பு என்ற விடயம் அரசுக்கு மறந்து விட்டதா?  

பதில்: மக்கள் புதியஅரசியல் அமைப்பு தேவை என ஏற்றுக் கொண்டுள்ளார்கள். புதிய அரசியல் அமைப்புக்குத் தேவையான விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றது. அதனால் அரசாங்கத்துக்கு புதிய அரசியலமைப்பு என்ற விடயம் மறந்துவி டவில்லை என்றே கூற வேண்டும். 

கே: உயர் பதவிகளுக்கு நியமனங்கள் மேற்கொள்ளப்படும் போது சிவில் ஆட்களுக்குப் பதிலாக பாதுகாப்புப் பிரிவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்படுவதாக எதிர்க்கட்சி அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துகிறது அல்லவா?  

பதில்: அரசாங்கம் நியமனங்களை வழங்கும் போது கருத்தில் கொள்வது என்னவென்றால் பதவியை வகிப்பதற்கு உள்ள தகுதி மற்றும் திறமை ஆகும். அதை விடுத்து அவர்கள் முன்னர் என்ன பதவி வகித்தார்கள்? அவரின் தனிப்பட்ட அரசியல் கொள்கை என்ன என கருதுவதில்லை. நாம் அரசாங்கம்என்ற ரீதியில் உயர் பதவிகளுக்கு மிகவும் கவனமாக அனைத்தையும் ஆராய்ந்தே நியமனங்களை வழங்குகின்றோம். அதனாலேயே இந்த ஒரு வருட காலத்துக்குள் நாம் நியமனம் செய்த அதிகாரிகள் மிக நன்றாக தமது பணிகளை மேற்கொண்டு உள்ளார்கள். எமக்குத் தேவை ஒழுக்கக் கட்டுப்பாடுடன் கூடிய நேர்மையாகப் பணியாற்றுபவர்களே ஆவர். உதாரணமாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை எடுத்துக் கொண்டால் கடந்த அரசாங்கத்தில் அவ்வேளையில் திறமையான பொறுப்பு கூறக் கூடிய அதிகாரிகள் இருந்திருந்தால் அவ்வாறான துரதிர்ஷ்டமான நிகழ்வு இடம்பெற்றிருக்காது அல்லவா?

உதித்த குணவர்தன
தமிழில்: வீ.ஆர்.வயலட்


Add new comment

Or log in with...