தாமாகவே தங்களை சுயதனிமைப்படுத்தி வீட்டுக்குள் முடங்கிக் கொள்ளும் மக்கள்

- கல்முனை பிரதேசத்தில் முன்மாதிரியாக செயற்படும் சில கிராமங்கள்

- தனிமைப்படுத்தப்படாத பிரதேச விற்பனை  நிலையங்களில் சமூக இடைவெளி அலட்சியம்

அம்பாறை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இதனையடுத்து சில பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தத்தமது பிரதேசங்களை தாமாகவே முன்வந்து சுயதனிமைப்படுத்தல் பிரதேசமாக பிரகடனப்படுத்தியுள்ளனர். அவர்கள் தமது அத்தியாவசிய தேவைகளைத் தவிர தேவையற்ற நடமாற்றங்களையும் கட்டுப்படுத்தியிருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது.

குறிப்பாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட கொவிட்19 பரம்பல் தகவலின் அடிப்படையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 1376 பேர் எனவும், இதுவரை 21,806 பேருக்கு அன்ரிஜன் மற்றும் பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய 917 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கூடுதலான தொற்றாளர்கள் அக்கரைப்பற்று, கல்முனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொலிஸ் பிரிவுகளில் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த பிரதேசங்கள் கொவிட்19 செயலணியின் அங்கீகாரத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டு, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களை மீட்டெடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த சில தினங்களில் வெளியாகிய முடிவுகளின்படி, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 குடும்பங்களும், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 குடும்பங்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக இனங்காணப்பட்டுள்ளன. இதேவேளை கல்முனை சந்தை முடக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய பிரதேசங்களில் வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இதனையடுத்து கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினால் பாண்டிருப்பு பிரதான வீதியில் எழுமாற்றாக 200 பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் சோதனையில் ஒருவர் மட்டுமே கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளார்.இதனை அவதானிக்கும் போது எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செய்றபட வேண்டும் என்பது வெளிப்படையான உண்மையாக காணப்படுகின்றது.

எவ்வாறிருப்பினும் ஒவ்வொருவரும் தாமும் தனது குடும்பத்தவர்களும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற விழிப்புணர்வு தோன்றியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இருந்த போதிலும் தம்மை அறியாமலேயே சிலர் கொரோனா வைரஸ் தம்மை தொற்றக் கூடிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அதாவது முகக்கசங்களை சுகாதார வழிகாட்டலுக்கமைவாக அணியாமை, சமூக இடைவெளியை முறையாக பேணாமை மற்றும் சுகாதாரத் திணைக்களம், சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்றாமை போன்ற செயற்பாடுகள் இன்றும் தொடந்து வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

அதாவது ஒரு பிரதேசம் முடக்கப்பட்டிருக்கின்ற போதும், ஏனைய பிரதேசங்களில் வர்த்தகர்கள் வியாபார நடவடிக்கைக்காகவும் மற்றும் பொதுமக்கள் தமக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவும் மரக்கறிச் சந்தை, மீன் சந்தை போன்றவற்றில் முன்டியடித்துக் கொண்டு பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர். இச்செயற்பாடு ஆரோக்கியமாதல்ல என்பதனை அவர்கள் உணர மறுக்கின்றனர். இதனை சுகாதார அதிகாரிகள் கண்காணித்து வருகின்ற போதிலும், பொதுமக்கள் முறையாக சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பதில் தவறு செய்கின்றனர் என்றுதான் கூற வேண்டும்.

இவ்வாறான கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பதை உணர்ந்துள்ள கல்முனை செய்லான் வீதி தொடக்கம் சாஹிறா கல்லூரி வீதி வரையான பிரதேசம் மற்றும் மருதமுனை பிரதேச மக்கள் தமது பிரதேசங்களில் வர்த்தக நோக்கங்களுக்காக பொதுமக்கள் அதிகாமாக கூடுவதை மட்டுப்படுத்தும் நோக்குடன் மாலை 6 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை தாமாகவே முன்வந்து தமது பிரதேசத்தை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.

கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில் ஒரு கிராமத்திலுள்ள பொதுமக்கள் தாமாக முன்வந்து அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வெளியில் சென்று வருவதன் மூலமும், சுகாதார நடைமுறைகளை முறையாக கடைப்பிடிப்பதன் ஊடாகவும் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்வதுடன் முழு சமூகத்தையும் பாதுகாத்து எமது பிரதேசத்தில் இருந்து கொடிய கொரோனா வைரஸ் நோயை முற்றாக விரட்டியடிக்க முடியும் என்பதில் எதுவித ஐயமுமில்லை. ஆகையால் அனைவரும் முடிந்தளவு இச்செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என்பதுதான் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையாகும்.


Add new comment

Or log in with...