முள்ளிவாய்க்கால் தூபி அழிப்புக்கும் அரசுக்கும் எந்தவித தொடர்புமில்லை | தினகரன்

முள்ளிவாய்க்கால் தூபி அழிப்புக்கும் அரசுக்கும் எந்தவித தொடர்புமில்லை

- அரசு எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்கிறார் உதய கம்மன்பில
- பல்கலை மானியங்கள்  ஆணைக்குழுவே  ஆதரித்தது

யாழ்.பல்கலைக்கழக நினைவுத் தூபி உடைக்கப்பட்டதற்கும் அரசாங்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அதுதொடர்பில் அரசாங்கம் எந்தவித தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லையென்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்கள் மாநாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தில் அகற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இவ்வாறான நினைவு தூபிகள் வடக்கில் மாத்திரமின்றி நாட்டில் ஏனைய பல்கலைக்கழகங்களிலும் உண்டு. இவ்வாறான நினைவு தூபிகளை உடைப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளித்ததா? என்றும் இதன் போது வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர் , யாழ். பல்கலைக்கழக நினைவு தூபியை உடைப்பதற்கு பல்கலைக்கழக துணைவேந்தரும், பல்கலைக்கழக நிர்வாகமும் தான் தீர்மானத்தை மேற்கொண்டது . அதனை மீள அமைப்பதற்கு துணைவேந்தரும், நிர்வாகமுமே தீர்மானித்தனரென்றும் அமைச்சர் கூறினார்.

பல்கலைக்கழங்களில் இருக்க வேண்டியதை துணைவேந்தரும் அதன் நிர்வாகமுமே தீர்மானிக்க வேண்டும். இதன் அடிப்படையில் அதனை மீள அமைப்பதற்கு தீர்மானித்துள்ளனரென்றும் அமைச்சர் குறிப்பிட்டார். யாழ். பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த 8ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.இதற்கு எதிராக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதோடு வடக்கு கிழக்கில் ஹர்தாலும் அனுஷ்டிக்கப்பட்டது.இதனையடுத்து நேற்று முன்தினம் மீண்டும் நினைவு தூபி அமைக்க உப வேந்தர் அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.

ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...