ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் | தினகரன்

ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் கூட்டம் கூடியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவிருப்பதாகவும், அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை டிசம்பர் 31ல் அறிவிப்பதாகவும் 2021 ஜனவரியில் கட்சி தொடங்கவிருப்பதாகவும் கடந்த மாதம் அறிவித்தார். இதனால் பல ஆண்டுகளாக காத்திருந்த ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்களும் நடைபெற்றன.

இந்நிலையில்,உடல்நிலையை காரணமாகக் கூறி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என டிசம்பர் இறுதியில் ரஜினி அறிவித்தார். ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்தது. தொடர்ந்து ரஜினியை அரசியலுக்கு வரவழைக்க அவரது ரசிகர்கள் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தி, அவரது ரசிகர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறவழி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். சனிக்கிழமை இதுதொடர்பாக அறிவிப்பு வெளியான நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல்துறையின் அனுமதியை பெற்று, வள்ளுவர் கோட்டத்தில் நள்ளிரவு முதல் ஏற்பாடுகள் நடைபெற்றன. காலை 8 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கவிருந்த நிலையில் அதிகாலை முதலே ரசிகர்கள் வரத் தொடங்கினர். அறிவிப்பு வெளியான ஒருநாளிலேயே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் திரளத் தொடங்கினர்.

நேற்று நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட நிலையில், ரசிகர்களின் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு, தனியார் பேருந்துகள், தனியார் வாகனங்களில் ரசிகர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். பெண்கள் பலரும் திரளாக கலந்துகொண்டுள்ளனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலானோர் எந்த அமைப்பையும் சாராத ரஜினி ரசிகர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் வந்துகொண்டிருப்பதால் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

வள்ளுவர் கோட்டம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பியுள்ள நிலையில் பலர் வள்ளுவர் கோட்டத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...