உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் உலகெங்கும் மக்களை அழித்து விடுமா?

ஒட்டுமொத்த உலகமும் கொரோனா தொற்றினால் நிம்மதி இழந்திருந்த சமயத்தில், புதுவருடத்தில் தடுப்பூசியும் வந்த விட்டதென்ற நிம்மதி பிறந்ததும் மற்றொரு அச்சுறுத்தல் வந்து சேர்ந்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் பரவும் புதுவகை உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் மற்றொரு தலைவலியாக உருவெடுத்துள்ளது.

இங்கிலாந்தில் மீண்டும் தனிமைபடுத்தல் அமுல் செய்யப்பட்டு வருகின்றது. ‘புதிய கொரோனா வைரஸ் வேகமாய் பரவும். நிறைய மக்கள் மடிந்து வீழ்வார்கள், இப்போது கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்துகள் அதை தடுக்காது. பழைய கொரோனாவை விட இது மிகவும் ஆபத்தானது. இவ்வாறெல்லாம் ஏகப்பட்ட செய்திகள், கொரோனாவை விட வேகமாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவி வருவதைப் பார்க்கிறோம்.

‘வைரஸ் உருமாற்றத்தால் மனித இனத்திற்கு மேலும் அழிவு காத்திருக்கிறதா?’ என்ற பயம் கலந்த கேள்விதான் எல்லோர் மனதிலும் இப்போது விருட்சமாய் வளர்ந்து பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறது.

‘ஒரு வைரஸ் உருமாற்றம் அடைவது அவ்வளவு பெரிய ஆபத்தான விடயமா?’ எனக் கேட்டால், நிச்சயமாக “இல்லவே இல்லை” என்பதுதான் அறிவியலாளர்களின் பதில்.

பொதுவாக மரபணு பிறழ்வு என்பது ஒரு இயற்கை செயலாகவே நிகழ்கிறது. இரண்டு வாரத்திற்கு ஒரு முறை கூட சில வகை வைரஸ்களுக்கு மரபணு பிறழ்வு ஏற்படும். ஒரு வைரஸின் மரபணு மாற்றம் அதன் சிறு சிறு செயல்பாடுகளை மாற்றி கொண்டேதான் இருக்கும். இது வரை ‘கொவிட்-19 ஏ’ வைரஸானது முப்பதுக்கும் மேற்பட்ட முறை மரபணு மாற்றத்துக்கு உட்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.

பலருக்கு விரைவில் தொற்றும் குணம் கொண்ட ஒரு வீரியமிக்க வைரஸ், உடலின் எதிர்ப்பையும் மீறி அந்த நபருக்கு பல உடல்நலக் கோளாறை உண்டு பண்ணும். அதே வைரஸ் காலப்போக்கில் அதனுள் ஏற்படும் மரபணு பிறழ்வால் தனது வீரியத்தை வெகுவாக இழக்கும்.

இயற்கையின் நியதிப்படி, ஒவ்வொரு முறையும் வைரஸில் மரபணு மாற்றம் அல்லது பிறழ்வு ஏற்படும் போது, வைரஸ் தன் வீரியத்தை இழப்பதாகவே ஆராய்ச்சிகள் கூறுகின்றன. வெகுசில வைரஸ் வகைகளே அரிதாக மேலும் வீரியம் அடைவதாக அறியப்படுகிறது.

இப்போது கொவிட்19 பற்றி பரவி வரும் செய்தியும் அப்படியே. கொரோனா உருமாற்றம் அடைந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ள ஆராய்ச்சிகள் எவையும் அது மேலும் வீரியமடைந்துள்ளதை இதுவரை அறுதியிட்டு உறுதிப்படுத்தவில்லை. சுமார் ஒரு வருடமாக பீதியைக் கிளப்பிக் கொண்டிருந்த கொரோனா பற்றிய செய்திகள் தற்போது ஒருவாறு குறைந்து, அதைக் குறித்த விழிப்புணர்வு மிக நன்றாக கொண்டு வரப்பட்டு, கொரோனா தாக்குதல் நன்கு நிர்வகிக்கக் கூடிய ஒரு நோயாகவே மாறியுள்ளது என்பது ஆறுதல் தரக் கூடிய மகிழ்ச்சியான செய்தியே ஆகும்.

நிலைமை இவ்வாறு இருக்க, மீண்டும் பூதம் கிளம்புவது போல் புறப்பட்டிருக்கும் உருமாற்ற கொரோனா குறித்து நிச்சயம் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. 1960களில் கொலரா வியாதி உருவான போது, இதே போல்தான் அச்சத்தில் கூட்டம் கூட்டமாய் மக்கள் ஊரை காலி செய்து ஓடினர். காலப் போக்கில் அந்நோய் குறித்த ஆராய்ச்சிகள் வலுப்பெறப்பட்டு தற்போது அவை மிகச் சாதாரண ஒரு நோயாக மாறிப் போனது காலம் நமக்கு உணர்த்திய உண்மைப் பாடம்.

இதனிடையே கொரோனாவின் இரண்டாம் அலை வீசும். அதுவும் மிக வீரியமாக வீசக் கூடும் என்பதெல்லாம் கட்டுக்கதை ஆகும். இங்கிலாந்து மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் பொதுவாகவே மக்கள் தொகை குறைவுதான். அங்கு கொரோனா தொற்று ஆரம்பித்த தொடக்கத்தில் இருந்தே சமூக இடைவெளியை மிக தீவிரமாக கடைப்பிடித்த சிலருக்கு ஒரு முறை கூட கொரோனாவின் தொற்று இல்லாமல் போயிருக்கக் கூடும். அது போன்ற பிரிவினருக்கு புதிதாக தற்போது தொற்று ஏற்படுவதே இரண்டாம் அலையாக கணக்கில் கொள்ளப்படுகிறது.

உலகின் பல நாடுகளில் தற்போது மந்தை நோய் எதிர்ப்பு சக்தி (herd immunity) வந்து விட்டதாகவே தோன்றுகிறது. மூன்றில் ஒருவர் அறிகுறிகள் எதுவும் இல்லாமலே தொற்றுக்கு ஆளாகி எதிர்ப்பு சக்தி கொண்டிருக்கலாம் என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இப்படி இருக்க உலகம் முழுக்க இரண்டாம் அலைக்கெல்லாம் பெரிதாக வாய்ப்பில்லை என்றே கூறலாம்.

ஆனாலுமம், இனியும் அதே கொள்கைதான் எல்லா வகை நோய்த் தொற்றுக்கும் கைகொடுக்கப் போகிறது என்பதென்னவோ நாம் பொறுத்திருந்து அறிந்து கொள்ள வேண்டிய பெரும் உண்மையாகும்.

‘நோய் நாடி நோய் முதல் நாடி’ என்ற குறளுக்கு ஏற்ப நோயின் தன்மையை நன்கு அறிந்து அச்சம் தவிர்த்து, அதற்குண்டான நோய் தீர்க்கும் வழிகளை கண்டறிவதே கொரோனா மட்டுமல்ல இனியும் வரப் போகும் எல்லா நோய்களுக்கும் பெரும் தீர்வாகும். எவ்வகை வைரஸாக இருந்தாலும் சரி நல்ல உணவுப் பழக்கங்களும், உடல் நலம் குறித்த சீரிய விழிப்புணர்வும்தான் அருமருந்தாக இருக்கும் வரப் போகும் நாட்களுக்கு என்பது மட்டும் உண்மை.

மருத்துவ கலாநிதி ரி.ஜி.நித்யா


Add new comment

Or log in with...