அரசியல், மத, தனிப்பட்ட நோக்கங்களுக்கு இடமில்லை | தினகரன்

அரசியல், மத, தனிப்பட்ட நோக்கங்களுக்கு இடமில்லை

நிபுணர் குழுவின் பரிந்துரையே நடைமுறையில் − பவித்ரா

கொரோனா தொற்றால் மரணிப்பவர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டுமென்றே விசேட நிபுணர்கள் குழுவின் பரிந்துரையாக உள்ளது.

அரசியல், மத மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக இந்தத் தீர்மானம் மாற்றப்படாதென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை சுகாதார அமைச்சின் அறிவிப்பை வெளியிட்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது கொவிட் 19 தொற்றால் இறப்பவர்களின் உடல்களை தகனம் செய்வதா? அடக்கம் செய்வதா? என்பது தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரையை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரையாக இருப்பது கொரோனா தொற்றால் இறப்பவர்களின் உடல்களை எரிக்க வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது.

இதனால் அந்தத் தெளிவான பரிந்துரைகளை நாங்கள் செயற்படுத்துவோம் என்பதுடன், இவ்வாறான பயங்கர தொற்றுக்கு முகம்கொடுக்கும் போது, அவ்வாறான விசேட நிபுணர்களின் பரிந்துரைகள் மத, அரசியல் மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காகவும் மாற்றப்படமாட்டாது என்பதனையும் கூறிக்கொள்கின்றேன்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி குறிப்பிடுகையில், நான்தான் டிசம்பர் 10 ஆம் திகதி இது தொடர்பாக கேள்வியெழுப்பியிருந்தேன். இதன்பின்னர் டிசம்பர் 24 ஆம் திகதி இது தொடர்பாக நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டது. அதன்படி வைரஸ் தொடர்பான நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் உடல்களை அடக்கம் செய்ய முடியுமென்று கூறப்பட்டுள்ளது. அதில் எப்படி அடக்கம் செய்வது, இறுதிக் கிரியையை எப்படி செய்வது என்பது தொடர்பான விபரங்கள் உள்ளன.

இதனால் இதற்கு முன்னரான குழுவின் பரிந்துரை காலாவதியானதாகியுள்ளது. இதனால் உங்களின் பதில் திருப்பதியானதாக இல்லை. தயவு செய்து அந்த அறிக்கையை வழங்க முடியுமா? என்றார்.

இதனை தொடர்ந்து பதிலளித்த சுகாதார அமைச்சர் குறிப்பிடுகையில்,

இக் குழுவில் வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்கள் உள்ளனர். இந்நிலையில் வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்கள் இராஜாங்க அமைச்சர்கள் சுதர்ஷனி பெர்ணாண்டோ புள்ளேயை சந்தித்துள்ளனர்.

இதன்படி அந்த குழுவின் தீர்மானம் அமைச்சினால் அமைக்கப்பட்டுள்ள பிரதான நிபுணர்கள் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதான குழுவிடம் இருந்து பதில் வரவில்ல.

அந்தக் குழுவின் தீர்மானம் வந்த பின்னர் அது தொடர்பாக செயற்படுவோம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...