கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுவது பாதுகாப்பானதா? | தினகரன்

கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுவது பாதுகாப்பானதா?

* ஆதாரமற்ற அபத்தமான கருத்து  பதிவுகளுக்கு மக்கள் செவிசாய்க்க  வேண்டியதில்லை

கடந்த ஆண்டு தொடக்கத்தில் தோன்றிய கொரோனா தொற்று இன்று வரை தன்னுடைய தாக்கத்தை உலகில் பல நாடுகளில் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் உலகம் முழுவதும் பல இலட்சகணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் வாழ்வாதாரம் முதல் வாழ்க்கை முறை வரை எல்லாவற்றையும் முற்றிலுமாக கொரோனா புரட்டி போட்டு விட்டது. 2021 புத்தாண்டு தொடங்கினாலும், கொரோனா வைரஸின் இருண்ட நிழலை மக்கள் மறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த கவலையைத் தடுக்க தடுப்பு மருந்து வந்திருக்கின்றது.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அவசர சுகாதார நிலைமைகளில் பயன்படுத்த கொவிட்-19 இரண்டு தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. இந்தியாவின் பிரபலமான எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டொக்டர் ரன்தீப் குலேரியா, கொரோனா தடுப்பூசி குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் தடுப்பூசி குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

தடுப்பு மருந்து கட்டாயமா? அது பாதகமான பக்கவிளைவுகளைத் தராதா? இவ்வாறான வினாக்கள் பலரது மனத்திலும் எழுகின்றன. தடுப்பு மருந்து பெற்றுக் கொள்வது தன்னார்வமானது. ஆனால் இந்த தடுப்பூசியை ஏற்றுவதால் நம்மையும், நம் குடும்பத்தாரையும் கொரோனாவிலிருந்து காப்பாற்ற முடியும் என்பது இன்றைய பொதுவான நம்பிக்கை ஆகும். இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கொவிட் -19 தடுப்பு மருந்து மற்றைய நாடுகளில் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்தைப் போலவே பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. தடுப்பு மருந்து, அதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதிப்படுத்த பல்வேறு கட்டங்களில் பரிசோதிக்க நிபுணர்கள் முயற்சி எடுத்துள்ளனர்.

எவ்வளவு அளவு தடுப்பு மருந்து ஏற்ற வேண்டும்? இரண்டு தடவை ஏற்றும் தடுப்பு மருந்து உள்ளது. இரண்டாவது தடுப்பு மருந்து பெற்ற இரண்டு வாரங்களுக்குள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து விடும். ஆனால் இதன் பக்க விளைவுகள் தொடர்பாக விஷமத்தனமான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அனைத்து தடுப்பு மருந்துகளும் சிறிய பக்கவிளைவுகளைக் கொண்டுள்ளன. இந்த தடுப்பூசியை ஒருவர் எடுத்துக் கொள்ளும் போது ஒரு சிறிய காய்ச்சல், வலி, அசாதாரண நிலைமை வரக் கூடும். தடுப்பூசி கண்டறியப்பட்டவுடன், விளைவுகள் மற்றும் பக்கவிளைவுகள் சோதிக்கப்படுவது வழமை. அதன் பின்னரே அம்மருந்து மக்களுக்கு வழங்கப்படுகின்றது.

ஏதேனும் கொரோனா அறிகுறிகள் இருக்கும் போது தடுப்பூசி போட முடியுமா என்பது முக்கிய கேள்வி.கொரோனா அறிகுறி தணிந்த 14 நாட்களுக்குப் பிறகு தடுப்பூசி ஏற்றிக்கொள்வது நல்லது.

கொரோனா தடுப்பு மருந்து தொடர்பாக சமூகவலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் அபத்தமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் நம்ப வேண்டியதில்லை. அரசாங்கம் பலவிதமான ஆய்வுகளின் பின்னர், தடுப்பு மருந்தின் நம்பகத்தன்மை, பக்கவிளைவுகள் தொடர்பாக அனைத்தையும் உறுதிப்படுத்திய பின்னரே அதனை தனது மக்களுக்கு வழங்கும். வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டியதில்லை. தடுப்பு மருந்து வரும் வரை கொவிட்19 தொற்றில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியபடி வாழ்வோம்.


Add new comment

Or log in with...