அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை விரைவில் | தினகரன்

அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை விரைவில்

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை;

அதிகாரிகள் மட்ட பேச்சையடுத்து தீர்மானம் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்

இலங்கை -- -இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நான்காவது பேச்சுவார்த்தை காணொளி தொழில் நுட்பம் ஊடாக இடம்பெற்றதுடன் பேச்சுவார்த்தை சுமுகமாகவும் முன்னேற்ற கரமானதாகவும் அமைந்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இரு நாடுகளினதும் அமைச்சர் மட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறுமெனத் தெரிவித்த அமைச்சர், அந்த பேச்சுவார்த்தை சாத்தியமானதாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இலங்கை இந்திய மீனவ சங்கங்களின் செயற்பாட்டு குழுக்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் காணொளி செய்மதி ஊடாக நடைபெற்றுள்ளது.

கடற்றொழில் அமைச்சின் செயலாளர் ஆர். எம். ஐ. ரத்நாயக்கவின் தலைமையில் இலங்கை தூதுக்குழு மேற்படி பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளது.

கடற்றொழில் அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் மேற்படி பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றுள்ளனர்.

இந்திய மீனவர்கள் சார்பில் அந்நாட்டின் கால்நடை மற்றும் பால் உற்பத்தி அமைச்சின் கீழ் இயங்கும்

கடற்றொழில் திணைக்களத்தின் செயலாளர் கலாநிதி ரஜீவ் ரஞ்சன் தலைமையில் இந்திய தூதுக்குழுவினர் பங்கேற்றுள்ளனர்.

இந்தியாவின் கடற்தொழில்,கால்நடை மற்றும் பால் உற்பத்தி அமைச்சு,வெளிவிவகார அமைச்சு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் பிரதிநிதிகள், புதுச்சேரி மாநில பிரதிநிதிகள், இந்திய கடற்படை மற்றும் சமுத்திரவியல் பாதுகாப்பு செயலணியினர் ஆகியோரும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர்.

மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் இரு தரப்பிலிருந்தும் விடயங்கள் இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்புக்குள் பிரவேசித்து கடல் வளங்களை அழிப்பது மற்றும் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு அவசியமென இதன்போது இலங்கை தூதுக்குழுவினர் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அதேவேளை இதன்போது தமிழ்நாட்டு மீனவர்கள் தமது ஜீவனோபாயத்தை பாதுகாப்பது உள்ளிட்ட தமது தரப்பு பிரச்சினைகளையும் விரிவாக முன்வைத்தனர்.

இரு நாடுகளினதும் நடைமுறையிலுள்ள சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துதல் இணைந்த ரோந்து காவல் நடவடிக்கைகளை முன்னெடுத்தல் ஆகியவற்றை மேலும் அதிகரிப்பதன் அவசியம் தொடர்பில் இலங்கைத் தூதுக்குழுவினர் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.

அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விரைவில் விடுதலை செய்வதை உறுதிப்படுத்துமாறு இந்திய தூதுக்குழுவினர் இலங்கை அரசாங்கத்தை கேட்டுக் கொண்டனர்.

அதற்குப்பதிலளித்த இலங்கைத் தூதுக்குழுவினர்,....

சட்டபூர்வமான நடவடிக்கைகள் முடிவுற்றதும் அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென தெரிவித்துள்ளனர்.

இலங்கை மீனவர்கள் அரபிக் கடலில் பிரவேசித்து மீன்பிடி தொழிலை மேற்கொள்ளும் வகையில் பயண பாதுகாப்பு தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை மேற்படி கலந்துரையாடல்களை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பிலும் முதலில் அமைச்சர் மட்ட பேச்சுவார்த்தை தொடர்பிலும் இங்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

மேற்படி இருதரப்பு குழுக்களினதும் முதலாவது பேச்சுவார்த்தை 2016 டிசம்பர் 31ஆம் திகதி புதுடில்லியிலும் இரண்டாவது இணைந்த செயற்பாடு 2017ஏப்ரல் 7ம் திகதியன்று கொழும்பிலும் மூன்றாவது பேச்சுவார்த்தை புதுடில்லியில் 2017 ஒக்டோபர் 13 ஆம் திகதியும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...