அம்பனை மண்ணின் வாழ்வும் வளமுமே கெங்காவின் சுவாசம் | தினகரன்

அம்பனை மண்ணின் வாழ்வும் வளமுமே கெங்காவின் சுவாசம்

கெங்கா என்றழைக்கப்படும் நாக. சிறிகெங்காதரன் லண்டனில் 40 ஆண்டு காலமாக வாழ்ந்து வருகின்றார் என்றாலும், 'அம்பனைக்கு முன்னால் அடிக்கும் வயற்காற்றை' இன்றும் சுகித்து, சுவாசித்து வரும் மனிதர் அவர். அந்த மண்ணின் வாழ்வும் வளமுமே கெங்காவின் உணர்வுகளில் செறிந்திருக்கின்றன.

'கொம்புலுப்பிப் பூக்களினைக் கொட்டுகின்ற குடைவாகை' நீழலில் 'கனவு உலகு' கண்ட இளைஞன் கெங்கா, நாளெல்லாம் தான் பிறந்த அம்பனைத்தாயின் மேனியில் வகைவகையாய் பொன்னாய், மணியாய், வைரமாய் ஆபரணங்கள் அணிவித்து அழகு பார்த்து மகிழ்பவன். அந்த அழகுப் பொசிப்பின் அரிய அறுவடையாய் சிறந்திருப்பது கெங்காவின்'வயற்காற்று' என்ற நூல்.

கூகுளில் தேடி இம்மாதிரி நூல்களை ஆக்க முடியாது. அம்பனையின் கதை சொல்லவல்ல ஆலமரம் இவன். யாழ்ப்பாண இலக்கிய வளத்தின் களத்துமேடாகத் திகழ்ந்த தெல்லிப்பழையின் நீரூற்று கெங்காவிடம் 'வயற்காற்று' ஆக பொங்கியதில் வியப்பில்லை.

தெல்லிப்பழை சூழ்ந்த கிராமங்களில் இந்த மனிதரின் காலடிச் சுவடுகள் பதியாத இடமே இல்லை. அந்த ஊரின் வயல் வெளியின் பசுமையில்,அருள் சுரக்கும் ஆலயங்களின் ஆராதனையில், கல்விச் சுடர் கொளுத்தும் மகாஜனாவின் மாண்பில், யூனியன் கல்லூரியின் நீண்ட பாரம்பரியத்தின் பெருமிதத்தில், அந்த மண்ணில் வாழ்ந்த சான்றோரின் இலட்சிய வாழ்வினைப் பொன்னே போல் போற்றி , இலக்கியப் பெருமக்களின் சிருஷ்டிகளில் திளைத்து மகிழும் சொப்பன உலகு கெங்காவினுடையது.

அம்பனைக்கலைபெருமன்றத்தின் தூணாகவிருந்தவர் கெங்கா என்று நினைவு மீட்கிறார் ஆ.சிவநேசச்செல்வன். அம்பனையில் உழவர் விழாக்களை விமரிசையாக நடத்தி, அந்த விழாக்களில் இலக்கியப் பெருமக்களை வாழ்த்தி, செழுமையான நூல்களை வெளியிட்டு, இயற்கையை வணங்கி, இலக்கியவாணர்களைத் துதிக்கும் கடந்து போன ஒருதலைமுறையின் சாட்சியமாகத் திகழ்பவர் கெங்கா. அம்பனை என்ற அந்தச் சிறு கிராமத்தின் மான்மியத்தை வாழ்நாளெல்லாம் பாடித் திரியும் பண்பு போற்றத்தக்கது.இம்மாதிரி மனிதர்கள்தான் தாங்கள் வாழ்ந்த மண்ணிற்கு பெருமை சேர்க்கிறார்கள்.

'கெங்காவிற்கு நாளொன்றில் எத்தனை மணி உள்ளது என்றால் தெரியாது. அப்படிப்பட்ட உழைப்பாளி. எங்கெங்கு நல்லன நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் இருப்பார்.இருக்கிறார் என்பதிலும் உழைப்பார் என்பதே பொருத்தம்' என்று அமரர் பொ .கனகசபாபதி என்ற வசிஷ்டரால் வாழ்த்தப் பெற்ற புண்ணியன் இவர். கெங்காவின் இந்த சமூக, அரசியல் பேருழைப்பிற்கு சாட்சியம் தருபவர் அரசியல் செயற்பாட்டாளர் வி. சிவலிங்கம் அவர்கள்.

குடும்பம், தொழில் மேன்மை என்று தம்மைச் சுற்றியே கோடு போட்டு வாழும் சாமானியர்களின் மத்தியில் சமூகம் குறித்து சிந்தித்து செயற்படும் சமூகமனிதன் இவர். எந்த சமூகத்திலும் இம்மாதிரி மனிதர்கள் அபூ ர்வமாகவே வந்து சேர்கிறார்கள்.லண்டனிலும் இந்த சமூகப்பணியில் சிற்றெறும்பாய் உழைக்கும் பாங்கினை அறிந்தோர் அறிவர். துர்க்கை அம்மன் ஆலயத்திலும் கொல்லங்கலட்டியிலும் மண் சுமந்த மேனியன் இவன்.

வடபுலத்தில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் நிகழ்ந்த அரசியல் செயற்பாடுகளின் உந்துவிசையாக கெங்கா செயற்பட்டிருக்கிறார். 1970 இல் காங்கேசன்துறையில் நடைபெற்ற இடைத்தேர்தல் இலங்கையில் எங்கோ ஒரு மூலையில் உள்ள தொகுதித் தேர்தல் அல்ல. முழு இலங்கையும் மூச்சடக்கிப் பார்த்துக் கொண்டிருந்த தேர்தல்.

சிறிமாவோவின் ஆட்சிக்கு தமிழ் மக்களின் ஆணை கேட்டு யாசித்த தேர்தலாக அது நோக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் வெற்றி என்பது ஏற்கனவே ஊர்ஜிதமாகிய ஒன்றுதான்.

ஆனால்,இந்த மையநீரோட்ட அரசியலுக்கு எதிரான பாதையில், வெற்றி தோல்விகள் குறித்து சிந்தியாமல், தான் வரித்த கொள்கைக்காக முழு உழைப்பையும் சிந்தியவர் அவர். எதற்கும் மசிந்து போகாத வைரம் பாய்ந்த அரசியல் போராளி கெங்கா. அரசியலில் எந்த சமரசத்திற்கும் விலை போகாத போர்வாள் அவர்.

எந்தப் பக்கம் காற்று வீசுகிறது என்று பார்த்து நிற்கும் மதில்மேற் பூனைகளின் மத்தியில் கெங்கா வீரர். இலங்கையிலும் சரி, லண்டனிலும் சரி தான் கொண்ட கொள்கையின் மத்தியில் கெங்கா உறுதியாகவே நின்றிருக்கிறார். இடதுசாரிச் சிந்தனைகளால் தன் உலகநோக்கினை செதுக்கிக் கொண்டவர் கெங்கா.

வி.பொன்னம்பலத்தின் அரசியல் போதத்தில் உருவான முற்போக்கான யாழ்ப்பாண இளைஞர் அணியின் தளமாக கெங்கா செயற்பட்டிருக்கிறார். அக்காலத்தின் தென்னிலங்கை இடதுசாரிகள் என்று பேர் சொல்லப்பட்ட அனைவரின் பேச்சுக்களையும் முன்வரிசையில் இருந்து கேட்டிருக்கிறார்.சென்றொழிந்து போன காலத்தின் சிறப்பு அது.

ஆலயப் பணியா, பாதையை ஒழுங்கு செய்வதா, கல்லூரி விழாக்களை நடத்துவதா, விளையாட்டுக் கழகங்களை நிறுவுவதா, அரசியல் பிரசாரமா, கூட்டங்களை ஏற்பாடு செய்து ஒழுங்குபடுத்துவதா எதுவென்றாலும் சளைக்காமல் பணிபுரியவல்ல வல்லாளன். அதில் சந்தேகமில்லை.

அவர் செயற்பட்ட காலங்கள் வரலாற்றில் கனதிக்குரியவை.

மகாஜனவின் மாணவர்களுக்கு கெங்காவின் இல்லத்து கிணற்று நீர் தாகசாந்தி செய்தது என்பது மட்டுமல்ல, தாகம் கொண்டிருந்தோருக்கெல்லாம் அவரின் செயற்கரங்கள் நீண்டுகொண்டே இருந்திருக்கின்றன. அவரைச் சுற்றி நல்ல மனம் கொண்ட மனிதர்களே என்றும் சூழ்ந்திருந்தனர்.அது அவரின் பாக்கியம்.

உயர்ந்த சமூக விழுமியங்கள் கொண்ட ஒரு குடும்பத்தின் சாரம் அவரைப் போஷித்திருக்கிறது.

அயராத உழைப்பாளியான அவரின் தந்தை, ஊர் போற்றும் பெருமனதுக்காரியான அவரின் அன்னை, காரியம் யாவிலும் கைகொடுத்து வாழும் அவரின் துணைவி ஜெயகெளரி, இளவலாய் -தமையனின் செயலுக்கெல்லாம் தளராது தோள் கொடுக்கும் தம்பி சபேசன் என்று ஓர் இனிய குடும்பம் வாய்த்தது

கெங்காவின் நற்பேறு. இவருக்கு எல்லா ஓடைகளிலும் நீர் சுரந்திருக்கிறது. கெங்கா பயணித்த வாழ்வு பெறுமதி மிக்கது.அந்த வாழ்வு மேலும் இனிய கனிகளைத் தர வேண்டும் என்று எழுபது ஆண்டுகளை நிறைவு செய்யும் கெங்காவை வாழ்த்துகிறோம்.

மு.நித்தியானந்தன்


Add new comment

Or log in with...