கமல் குணரத்ன, ஷவேந்திர சில்வா ஜெனரலாக தரம் உயர்வு

கமல் குணரத்ன, ஷவேந்திர சில்வா ஜெனரலாக தரம் உயர்வு-Major General Kamal Gunaratne-Lieutenant General Shavendra Silva Promoted to General Rank

பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, ஜெனரல் தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.

இதேவேளை, இராணுவத் தளபதி, பாதுகாப்பு படைகளின் பிரதானி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவும் ஜெனரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சுக்கு பொறுப்பு எனும் வகையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் (28) ஜனாதிபதியினால் இவ்வாறு தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.


இலங்கை இராணுவத்தின் முக்கிய படைப் பிரிவான கஜபா படைப் பிரிவின் உயர் அதிகாரிகளான இருவரும் தாய் நாட்டிற்காக பல்வேறு சேவையாற்றியவர்கள்.

இலங்கை இராணுவத்தில் 35ஆண்டுகள் சேவையாற்றிய ஜெனரல் கமல் குணரத்ன, புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது 53ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி, வன்னி பாதுகாப்பு படைகளின் தளபதி உட்பட இராணுவத்தில் பல உயர் பதவிகளை வகித்து வந்தார். பிரேசிலுக்கான இலங்கையின் பிரதித் தூதுவராக சேவையாற்றி இவர், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் 2019 நவம்பர் 20ஆம் திகதி முதல் நாட்டின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் இதற்கு மேலதிகமாக தேசிய பாதுகாப்பு. உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளராகவும் இரு ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.

இதேவேளை, இலங்கை இராணுவத்தில் 37ஆண்டுகள் சேவையாற்றி வரும் ஜெனரல் ஷவேந்திர சில்வா, புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது 58ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி, இராணுவத்தின் பிரதம அதிகாரி, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிட பிரதிநிதி உட்பட பல்வேறு உயர் பதவிகளை வகித்து வந்த இவர், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் 2020 ஜனவரி 02ஆம் திகதி முதல் பாதுகாப்பு படைகளின் பதில் பிரதம அதிகாரியாகவும், கொவிட் - 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.

ஸாதிக் ஷிஹான்


Add new comment

Or log in with...