இந்திய மீனவரின் ஊடுருவலால் தீவிரமடையும் இருதரப்பு சிக்கல்! | தினகரன்

இந்திய மீனவரின் ஊடுருவலால் தீவிரமடையும் இருதரப்பு சிக்கல்!

இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் ஊடுருவும் விவகாரமானது தற்போது தீவிரமானதொரு கட்டத்துக்குச் சென்றிருக்கின்றது. இலங்கை மீனவர்கள் எதிர்நோக்குகின்ற இப்பிரச்சினையானது இன்று நேற்று உருவானதல்ல. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்திருந்த காலப் பகுதியிலும் இந்திய மீனவர்களின் ஊடுருவல் தொடர்ந்து கொண்டே இருந்தது.

இந்திய மீனவர்கள் தங்களது நாட்டு எல்லையைத் தாண்டி வந்து இலங்கைக் கடற்பரப்புக்குள் மீன்பிடிப்பதை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி வடபகுதியில் கடந்த வாரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கத்தை மாத்திரமன்றி, இந்திய தரப்பையும் வலியுறுத்துவதே எமது மீனவர்களின் நோக்கமாக இருந்தது.

அதுமாத்திரமன்றி, வடக்கு மீன்பிடித் தொழிலாளர்களின் கண்டனப் போராட்டமானது இம்முறை மிகவும் தீவிரத்தன்மை பெற்றிருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதாவது ‘இந்திய மீனவர்களின் ஊடுருவல் இனிமேலும் நிறுத்தப்படவில்லையென்றால், இலங்கை மீனவர்களே அவர்களை கடலில் இருந்து விரட்டியடிப்பார்கள்’ என்ற தோரணையில் வடக்கு மீனவர்கள் தமது போராட்டத்தின் போது ஆக்ரோஷமாக கருத்து வெளியிட்டிருந்ததையும் காண முடிந்தது.

வடக்கு மீனவர்களின் கண்டனப் போராட்டம் ஆரம்பமாகி ஓரிரு தினங்களில் புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி வந்த இந்திய மீனவர்கள் சிலரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து பொலிஸில் ஒப்படைத்திருந்தனர். இச்சம்பவமானது, இந்திய மீனவர்கள் எமது நாட்டின் வடபகுதி கடற்பரப்புக்குள் மாத்திரமன்றி இலங்கையின் வேறு பிரதேச கடல் எல்லைக்குள்ளும் ஊடுருவத் தொடங்கி விட்டதையே வெளிப்படுத்துகின்றது.

சர்வதேச கடல் எல்லை விதிமுறைகளைப் பொறுத்த வரை இந்திய மீனவர்களின் ஊடுருவலானது சர்வதேச குற்றமாகவே கருதப்பட வேண்டும். இந்திய மீனவர்கள் எமது நாட்டின் மீன்வளத்தை அபகரித்துச் செல்வதுடன் மாத்திரம் நின்று விடவில்லை. அதற்கு மேலதிகமான பாதிப்புகள் ஏராளமானவற்றை செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பது பலருக்கும் தெரியாத உண்மையாகும்.

இலங்கையில் தடை செய்யப்பட்டிருக்கும் மீன்பிடி உபகரணங்கள் அத்தனையையும் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கின்றனர். றோலர் எனப்படுகின்ற இழுவைப் படகை அவர்கள் தாராளமாகப் பயன்படுத்துகின்றனர். அப்படகின் அடியில் பொருத்தப்பட்டிருக்கின்ற வலைக்குள் சிறிய மீன்குஞ்சுகள் தொடக்கம் பெரிய மீன்கள் வரை அத்தனையும் அகப்படுகின்றன. சிறிய மீன்குஞ்சுகளை அவர்கள் கடலில் வீசி விட்டுச் செல்கின்றனர். இதனால் மீன்களின் பெருக்கம் பாதிக்கப்படுகின்றது.

இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவைப் படகுகளை மாத்திரமன்றி வேறு சில சட்டவிரோத முறைகளையும் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதனால் எமது நாட்டின் மீன் வளம் அழிகின்றது. அது ஒருபுறமிருக்க, அவர்கள் பயன்படுத்துகின்ற மடிவலை பொருத்தப்பட்ட இழுவைப் படகுகளால் எமது கடற்பரப்பின் கீழேயுள்ள பவளப் பாறைகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன. கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கு பவளப் பாறைகள் மிகவும் அவசியமாகும்.

வடக்கு கடற்பரப்பில் கண்ணுக்கெட்டிய தொலைவில் இந்திய மீன்பிடிப் படகுகளை பெருமளவில் காண முடிவதாக எமது மீனவர்கள் கூறுகின்றனர். அவர்கள் இலங்கைக்குச் சொந்தமான கச்சதீவையும் தாண்டி வந்து எமது கடற்பரப்பில் மீன்பிடிப்பதாக எமது மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை மீனவர்களின் வலைகளையும் இந்திய மீனவர்கள் சேதப்படுத்தி விட்டுச் செல்வது அடிக்கடி இடம்பெறுகின்ற சம்பவமாகும்.

இத்தகைய சூழலில் இந்திய மீனவர்களின் ஊடுருவல் தொடர்பான இருதரப்புப் பேச்சுவார்த்தையொன்று எதிர்வரும் 30ம் திகதி நடைபெறவிருப்பதாக செய்தியொன்று தெரிவிக்கின்றது. இப்பேச்சுவார்த்தைக்கான நல்லெண்ண சமிக்ஞையாக இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்பது இந்தியத் தரப்பின் இப்போதைய கோரிக்கையாக இருக்கின்றது. இக்கோரிக்கை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களே முதலில் தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டுமென கூறியிருக்கின்றார். அமைச்சர் டக்ளஸின் கருத்து உண்மையிலேயே மிகவும் பொருத்தமானதாகும்.

இந்திய மீனவர்களின் சட்டவிரோத ஊடுருவல் தொடர்பாக இலங்கையினால் தொடர்ச்சியாக கண்டனமும், கோரிக்கையும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும், இந்திய மீனவர்கள் அதனையெல்லாம் சற்றேனும் பொருட்படுத்துவது கிடையாது. இவ்விடயத்தில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதும், இந்திய மீனவர்களுக்கு ஆதரவாக அவர்கள் செயற்படுவதுமே இப்பிரச்சினை எல்லை மீறிச் சென்றுள்ளமைக்காக பிரதான காரணமாகும்.

இலங்கை மீனவர்களின் மனஉணர்வுகளையும், சர்வதேச சட்டங்களை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தையும் முதலில் தமிழக அரசியல்வாதிகள் புரிந்து கொள்வது அவசியம். இல்லையேல் இந்திய மீனவர்களின் ஊடுருவலைத் தடுப்பதென்பது இயலாத காரியமாகும். அதேசமயம் ‘தொப்புள் கொடி உறவுகள்’ என்று இலங்கைத் தமிழர்களை அவர்கள் அழைப்பதனால் மட்டும் பயனில்லை. அந்த அக்கறையை செயலில் காண்பிக்கவும் வேண்டும்.

 


Add new comment

Or log in with...