கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு; புதிய சிகிச்சை நிலையங்களை ஸ்தாபிக்க அரசு தீர்மானம்

- சுகாதார அமைச்சர் தலைமையிலான மீளாய்வுக் கூட்டத்தில் ஆராய்வு

கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் தொற்றுத் தடுப்புக்கான புதிய சிகிச்சை நிலையங்களை ஸ்தாபிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கவனம் செலுத்தியுள்ளார்.

அதற்கான நிதி உதவிகளை உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் மூலம் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் நேற்று முன்தினம் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் அமைச்சில் நேற்று முன்தினம் நடைபெற்ற கொரோனா வைரஸ் செயற்பாடு தொடர்பான மீளாய்வுக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் தினமும் புதிதாக 500 க்கும் 600 க்கும் இடைப்பட்ட வைரஸ் தொற்று எண்ணிக்கையாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் புதிதாக சிகிச்சை நிலையங்களை ஸ்தாபிப்பது தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று அதிக எண்ணிக்கையானவர்களுக்கு சிகிச்சை வழங்கும் வகையில் வசதிகள் கொண்ட ஆஸ்பத்திரிகளை உடனடியாக சுகாதார அமைச்சின் கீழ் சுவீகரித்து அந்த ஆஸ்பத்திரிகளை கொரோனா வைரஸ் சிகிச்சை மத்திய நிலையங்களாக மாற்றுவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கான நிதியை சுகாதார அமைச்சின் மூலம் பெற்றுக்கொள்ளவும் தேவையான மேலதிக நிதியை உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிகள் மூலம் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் மேற்படி மீளாய்வு கூட்டத்தில் கலந்துரையாடப் பட்டுள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகளின்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கியதாக தினமும் 14,000 பி.சிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன் 3,000 என்டிஜன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேவேளை ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்கள், தாதிகள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட வர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் உரிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை அவர்களுக்குத் தேவை யான பாதுகாப்பு உபகரணங்களையும் போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சின் செயலாளர் (ஓய்வு பெற்ற) மேஜர் ஜெனரல் டாக்டர் சஞ்சீவ முனசிங்கவுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

அதேவேளை, நாட்டில் தினமும் சுமார் 600 புதிய வைரஸ் தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கையும் தினமும் 500 ஆக அதிகரித்து வருவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய இந்த மீளாய்வுக் குழுக் கூட்டத்தில் அமைச்சின் மேலதிக செயலாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் பலரும் கலந்து கொண்டனர். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...