பிரதான பெருந்தோட்ட பயிராக கித்துள் பெயரீடு

இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட 17 தீர்மானங்கள்

- தாதிக் கல்லூரி, ஆசிரியர் கலாசாலைகளை பல்கலைக்கழகமாக மாற்ற சட்ட திருத்தம்
- பல்வேறு சட்ட திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி
- மடகஸ்காரில் கொன்சியூலர் பணியகம்

1. ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டப்பின்படிப்பு கற்கைகள் பீடம் அமைந்துள்ள காணிக்குரிய விடுவிப்புக் கொடுப்பனவு அனுமதிப்பத்திரம் வழங்கல்
ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டப்பின்படிப்பு கற்கைகள் பீடம் இரத்மலானை, கந்தவல இல் அமைந்துள்ள 01 றூட் 37.2 பேர்ச்சர்ஸ் காணியில் நடாத்தப்பட்டு வருகின்றது. குறித்த காணித்துண்டு காணி எடுத்தல் சட்டத்தின் 38(அ) ஏற்பாட்டின் பிரகாரம் அரசாங்கத்திற்கு கையகப்படுத்தப்பட்டது. குறித்த காணித்துண்டை அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் 6(1) உறுப்புரையின் விடுவிப்புக் கொடுப்பனவு அனுமதிப்பத்திரத்தின் மூலம் ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு வழங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சரான மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. 'விருசுமித்துரு வீட்டுத்திட்டம்' இன் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீட்டு அலகுகள் மற்றும் திட்டத்தின் காலவரையறையை திருத்தம் செய்தல்
2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானத்திற்கமைய, தேசிய வீடமைப்பு அதிகார சபையும் இராணுவ சேவைகள் அதிகார சபையும் ஒன்றிணைந்து இராணுவச் செயற்பாடுகளில் உயிர்நீத்த மற்றும் காயமடைந்த இராணுவக் குடும்பங்களுக்காக 'விருசுமித்துரு வீட்டுத்திட்டம்' நடைமுறைப்படுத்தப்பட்டது. இக்கருத்திட்டத்தின் கால எல்லை 04 வருடங்களாவதுடன், 2020 ஆம் ஆண்டு கருத்திட்டம் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனாலும், கருத்திட்டத்தின் கீழ் புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்காக 346 பயனாளிகளும், பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளைப் பூர்த்தி செய்வதற்காக 2,454 பயனாளிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இக்கருத்திட்டத்தின் கீழ் பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளைப் பூர்த்தி செய்வதற்கு அதிக கேள்வி இருப்பதன் காரணத்தால், அவ்வாறான வீடுகள் 4000 உம், புதிய வீடுகள் 450 உம் அமைப்பதற்கு இயலுமான வகையில் கருத்திட்டத்தைத் திருத்தியமைப்பதற்கும், கருத்திட்டத்தின் காலவரையறையை 2022 ஆம் ஆண்டு இறுதி வரை நீடிப்பதற்கும் பாதுகாப்பு அமைச்சராக மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்களும் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. மடகஸ்கார் அன்ரனாரிவோ இல் இலங்கை கொன்சியூலர் ஜெனரல் பணியகம் அமைத்தல்
இலங்கைக்கும் மடகஸ்கருக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகள் 2001 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், தற்போது சிஷேல் விக்டோரியாவில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் மடகஸ்கருக்காக இணைப்புச் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு பொருளாதார ரீதியாக அந்நாட்டிலுள்ள வாய்ப்புக்கள் மற்றும் மடகஸ்காரிலுள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் தேவைகளுக்காக அந்நாட்டில் கொன்சியூலர் ஜெனரல் பணியகத்தை அமைப்பது சிறந்தது என தெரியவந்துள்ளது. அதற்கமைய, மடகஸ்கரில் இலங்கை கொன்சியூலர் ஜெனரல் பணியகத்தை திறப்பதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. பிம்ஸ்டெக் (BIMSTEC) சமவாயத்தை ஏற்றுக்கொள்வதற்கான அனுமதியைப் பெறல்
பல்துறை தொழிநுட்பவியல் மற்றும் பொருளாதாரப் பங்களிப்பு தொடர்பான வங்காள வளைகுடாவை அண்மித்த நாடுகளின் அமைப்பு (BIMSTEC), குறித்த வலயத்தில் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான கூட்டாக 1997 ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது. அது பங்களாதேசம், பூட்டான், நேபாளம், மியன்மார், இந்தியா, இலங்கை மற்றும் தாய்லாந்து போன்ற அங்கத்துவ நாடுகளைக் கொண்டதாகும். 2018 ஆம் ஆண்டு கத்மண்டுவில் நடைபெற்ற நான்காவது மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டதற்கமைய, 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் (BIMSTEC) சிரேஷ்ட அலுவலர்களின் கூட்டத்தின் 21 ஆவது கூட்டத்தில் குறித்த சமவாயத்தின் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய, 2021 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இலங்கையில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள பிம்ஸ்டெக் அமைப்பின் 5 ஆவது மாநாட்டில் அங்கத்துவ நாடாக குறித்த சமவாயத்தை ஏற்றுக்கொள்வதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. மாகாணக் குறியீட்டு எழுத்துக்களை அகற்றுவதன் மூலம் பயனாளிகளுக்கு இலகுவான முறையில் வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பொறிமுறையை தயாரித்தல்
வாகனங்களைப் பதிவு செய்யும் போது வாகன இலக்கத் தகடுகளுக்கு மாகாணத்தை இனங்கண்டு கொள்வதற்கான குறியீட்டு எழுத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளதுடன், அதனால் புகைப்பரிசோதனை மற்றும் வருடாந்த வருமானவரிப் பத்திரம் வழங்குவதற்கு இலகுவாக அமைந்தாலும் மாகாணங்களுக்கிடையிலான வாகன உரித்தை மாற்றும் ஒவ்வொரு தடவையும் வாகன இலக்கத்தகட்டை மாற்ற வேண்டியுள்ளதால், சேவை பெறுநர்களும் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களமும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்யும் போது ஒவ்வொரு வாகனத்திற்கும் தனித்துவமான வாகன இலக்கம் வழங்கப்படுவதால், திணைக்களத்தின் தரவுக் களஞ்சியத்தின் மூலம் சரியான வகையில் தனித்துவத்தை அடையாளங் காணக்கூடிய வசதிகள் உண்டு. குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, வாகன இலக்கத் தகடுகள் வழங்கும் போது மாகாணக் குறியீட்டு எழுத்துக்களை நீக்குவதற்காக போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. 'நீர்ப்பாசன சுபீட்சம்' துரித நீர்ப்பாசன மீள்கட்டமைப்பு வேலைத்திட்டம்
நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 50,000 வரையிலான கிராமிய சிறு குளங்கள், அணைக்கட்டு, நீர்ப்பாசனக் கால்வாய்த்தொகுதி, குளத்தொகுதிக் கட்டமைப்பு போன்றவற்றின் பராமரிப்புக்காக நிரந்தர நிதி இல்லாததால் அவற்றைப் பராமரித்தலில் பிரச்சினைகள் காணப்படுகின்றது. அதனால் ஒவ்வொரு வருடமும் பருவமழைக்காலம் முடிவடையும் போது 1000 கிராமிய நீர்ப்பாசனத் தொகுதிகள் வரை சேதமடைந்து போவதால், நாடளாவிய ரீதியில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளக் கூடிய 150,000 ஏக்கர்கள் தற்போது தரிசு வயல்களாக மாறியுள்ளமையையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இந்நிலைமைக்குத் தீர்வுகாணும் வகையிலும், தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமையொழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் வழிகாட்டலின் கீழ் 5000 கிராமிய சிறு நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் தொகுதிகளை மீள் நிலைக்குக் கொண்டு வருவதற்காக 'நீர்ப்பாசன சுபீட்சம்' எனும் பெயரில் இரண்டு வருட துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை ஒப்பந்த அடிப்படையில் இல்லாமல், அரசாங்கத்திடமுள்ள மனித வளம் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தி, கிராமிய மட்டத்திலுள்ள சமயத் தலைவர்களின் தலைமையில், விவசாயிகள், பாடசாலைகள், இளைஞர்கள் மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன் இயன்றவரை கிராமிய விவசாயிகளிடம் நாளாந்தக் கொடுப்பனவு அடிப்படையில் தேவையான உழைப்பைப் பெற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி 1000 குளங்களை அண்டிய குறித்த வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. ருவன்புர அதிவேக நெடுஞ்சாலைக் கருத்திட்டம் மற்றும் தூண்களில் அமைக்கப்படும் துறைமுக நகர அதிவேக நெடுஞ்சாலைக்கான 2013 காணி எடுத்தல் (இழப்பீடு வழங்கல்) கட்டளையை ஏற்புடையதாக்கிக் கொள்ளல்
நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 18 கருத்திட்டங்களின் கீழ் எடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான 1864/54 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்ட '2013 காணி எடுத்தல் (இழப்பீடு வழங்கல்) கட்டளை' இன் பிரகாரம் இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஏற்பாடுகளின் கீழ் மதிப்பீட்டுத் திணைக்களத்தால் தீர்மானிக்கப்பட்ட மதிப்பீட்டுத் தொகை தொடர்பாக, குறித்த காணிகளை எடுக்கும் போது பாதிக்கப்படும் தரப்பினர்களுக்கு காணி எடுத்தல் மற்றும் மீளமைத்தல் குழுவுக்கு விடயங்களை முன்வைத்து, சட்ட ரீதியான இழப்பீடுகளுக்கு அப்பால் பொருத்தமான சலுகைகளையும் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்புண்டு. அதற்கமைய, நெடுஞ்சாலைகள் அமைச்சால் நடைமுறைப்படுத்தப்படும் தூண்களில் அமைக்கப்படும் கொழும்பு துறைமுக நகர நெடுஞ்சாலை கருத்திட்டம் மற்றும் ருவன்புர அதிவேக நெடுஞ்சாலை கருத்திட்டம் போன்ற வீதிக் கருத்திட்டங்களுக்காக 2013 ஆம் ஆண்டு காணி எடுத்தல் (இழப்பீடு வழங்கல்) கட்டளையை ஏற்புடையதாக்கிக் கொள்வதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. 2020 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் (அனுமதிப்பத்திரம்) கட்டளை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தல்
1993 ஆம் ஆண்டு 50 ஆம் இலக்க தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் 53 ஆம் உறுப்புரையின் பிரகாரம் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரால் தயாரிக்கப்பட்ட அனைத்து வர்த்தமானி அறிவித்தல்களும் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதற்கமைய, குறித்த அதிகாரசபையால் வழங்கப்படும் சேவைகளுக்காக அறிவிடப்படும் கட்டண முறைப்படுத்தலுக்காக அமைச்சரால் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆம் திகதிய வர்;த்தமானி அறிவித்தலின் பிரகாரம் வெளியிடப்பட்டுள்ள '2020 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் (அனுமதிப் பத்திரம்) கட்டளை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கு கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. உயிரியல் வஸ்துகளுக்கான அணுகுதல் மற்றும் பயன்களை நியாயமான முறையில் பகிர்தல் தொடர்பான தேசிய கொள்கை
உயிர்ப்பல்வகைமையில் ஆசியாவில் முன்னணி வகிக்கும் நாடாக இலங்கை கருதப்படுகின்றது. செறிவான சதுப்பு நிலங்கள், கடற்கரைகள் மற்றும் சமுத்திர உயிர்ப்பல்வகைமையுடன் கூடிய செறிந்த நாடாக இலங்கை சர்வதேச ரீதியாகப் பாராட்டுப் பெற்றுள்ளது. இலங்கையின் உயிர்ப்பல்வகைமையைப் பாதுகாப்பதற்காகவும் உயிரியல் வஸ்துகளை களவாடல், சூறையாடல் போன்றவற்றைத் தடுப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவ்வாறான வஸ்துகளை அபகரிக்கும் சந்தர்ப்பங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகத் தெரியவந்துள்ளது. மேலும், வகைப்படுத்தல்களை அடையாளம் காண்பதற்காக நாட்டிற்கு வெளியே அனுப்பப்படும் மாதிரிகள் இலங்கையின் அனுமதியின்றி புதிய உற்பத்திகளுக்காக முன்னேற்றமடைந்த நாடுகள் பயன்படுத்தினாலும் எமது நாட்டிற்குக் கிடைக்கும் பயன்கள் இழக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலைமைக்கு தீர்வாக சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்கும் உயிரியல் வஸ்துகளுக்கான அணுகுதல் மற்றும் பயன்களை நியாயமான முறையில் பகிர்தல் தொடர்பான விசேட குழுவின் வழிகாட்டலுக்கமைய, ஏற்புடைய அனைத்துத் தரப்பினர்களின் ஒத்துழைப்புடன் இலங்கைக்குரிய 'உயிரியல் வஸ்துகளுக்கான அணுகுதலும் பயன்களை நியாயமான முறையில் பகிர்தல் தொடர்பான தேசிய கொள்கை' நடைமுறைப்படுத்தப்படும் பொறிமுறை தொடர்பாக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. இலங்கையில் கித்துள் பயிரை பிரதான பெருந்தோட்டப் பயிராக பெயரிடல் மற்றும் கித்துள் அபிவிருத்தி அதிகாரசபையை நிறுவுதல்
கித்துள் உற்பத்திக் கைத்தொழில் இலங்கையின் தனித்துவமான கைத்தொழிலாகவும் அந்நிய செலாவணியை ஈட்டித்தரக் கூடிய கைத்தொழிலாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. கித்துள் உற்பத்திக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்காக கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமகால அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் மக்கள் மைய பொருளாதாரத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கித்துள் செய்கைக் கைத்தொழிலை விரிவுபடுத்துதல் பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, கித்துள் பயிரை பிரதான பெருந்தோட்டப் பயிராக பெயரிடல் மற்றும் கித்துள் அபிவிருத்தி அதிகாரசபையை நிறுவுவதற்கும், பெருந்தோட்ட அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. ஜெனரல் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
ஜெனரல் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கற்கை நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தி தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகமாக அதன் பணிகளை மேம்படுத்துவதற்காக தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தை வரையறுத்து புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, சட்டமூல வரைஞர் அலுவலகத்தால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தின் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. தாதிக் கல்லூரி மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்காக விசேட பணிகளை குறிக்கோளாகக் கொண்டு நாட்டில் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக 1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தை திருத்தம் செய்தல்
'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' அரச கொள்கை பிரகடனத்தில் மனிதவள அபிவிருத்தி மூலம் அறிவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக தாதித் தொழில் மற்றும் ஆசிரியத் தொழிலின் தரப்பண்பை அதிகரித்து உயர்வான தொழில் அங்கீகாரம் மற்றும் தொழில் திறன்களுடன் கூடிய உலகளாவிய ரீதியில் போட்டித்தன்மையான தொழில்வாண்மையாளர்களை உருவாக்குவதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. சமகாலத்தில் உலகளாவிய ரீதியில் நிலவும் போட்டித்தன்மையான தொழில் சந்தையில் அதிக கேள்வி தாதித் தொழிலுக்கும் ஆசிரியர் தொழிலுக்கும் காணப்படுகின்றது. சுகாதார அமைச்சின் ஒழுங்குபடுத்தல்கள் மற்றும் கண்காணிப்பின் கீழ் இயங்குகின்ற தாதிக் கல்லூரிகள் மற்றும் கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்ற ஆசிரியர்களை உருவாக்கும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளின் தரத்தை அதிகரிப்பதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, சம்பிரதாய பல்கலைக்கழகக் கட்டமைப்பிலிருந்து வேறுபட்ட விசேட பணிகளைக் குறிக்கோளாகக் கொண்டு பல்கலைக்கழகங்களாக முன்மொழியப்பட்ட பல்கலைக்கழஙகங்கள் இரண்டினை நிறுவுவதற்கு இயலுமான வரையில் 1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. 1991 ஆம் ஆண்டு 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டம் திருத்தம் செய்தல்
1991 ஆம் ஆண்டு 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்திலுள்ள சில ஏற்பாடுகள் சமகால போக்குவரத்துக் கட்டமைப்பிலுள்ள சிக்கலான தன்மைக்கு ஏற்புடையதல்ல எனவும், குறித்த சட்டத்தை திருத்தம் செய்தல் பொருத்தமெனவும் அடையாளங்காணப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக சட்டமூல வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. 1994 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க சித்திரவதைகள் மற்றும் ஏனைய அமானித அவமானங்களுடன் கூடிய கவனிப்புக்கள் அல்லாவிட்டால் தண்டனைகளுக்கு ஆளாக்குவதற்கு எதிரான சட்டத்தை திருத்தம் செய்தல்
சித்திரவதைகள் மற்றும் ஏனைய அமானித அவமானங்களுடன் கூடிய கவனிப்புக்கள் அல்லாவிட்டால் தண்டனைகளுக்கு ஆளாக்குதல் அரசியலமைப்புச் சட்டத்தின் 11 ஆவது அரசியலமைப்பின் பிரகாரம் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான செயல்களை மேற்கொள்பவர்களுக்கு கண்டனம் தெரிவித்தலும், அதற்கு இயன்றவரை தண்டனைகளும் வழங்கப்பட வேண்டும். அதனால், அதுதொடர்பாக தற்போது நடைமுறையிலுள்ள 1994 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க சித்திரவதைகள் மற்றும் ஏனைய அமானித அவமானங்களுடன் கூடிய கவனிப்புக்கள் அல்லாவிட்டால் தண்டனைகளுக்கு ஆளாக்குவதற்கு எதிரான சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டப்பணம் சமகாலத்திற்கு ஏற்புடைய வகையில் திருத்தம் செய்வதற்கும், அதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக சட்டமூல வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. ஆவணங்கள் பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்தல் (கேவியட் தடை)
கேவியட் தடை உத்தரவுடன் கூடிய காணியொன்று தற்போது எவரும் வாங்குவதில்லை என்பதுடன், அவ்வாறான காணியை கடன் வழங்கும் நிறுவனங்கள் பிணையாக வைத்து கடன் வழங்குவதும் இல்லை. மோசடிக்காரர்களின் கப்பம் பெறும் நோக்கத்துடன் கேவியட் தடை உத்தரவைப் பயன்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளதால், ஏதேனுமொரு காணிக்கு உரிமையோ அல்லது உரித்தோ இல்லாதவர்களால் கேவியட் தடை உத்தரவைப் பெற்று குறித்த உத்தரவை நீக்குவதற்காக பாரிய தொகையைப் பெறுவதன் மூலம் மோசடி இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது. அவ்வாறான நிலைமைகளைத் தடுப்பதற்காக நீதி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய, ஆவணங்களைப் பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக, அதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக சட்டமூல வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. நச்சுப் பதார்த்தங்கள், அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
1984 ஆம் ஆண்டு மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் நச்சுப் பதார்த்தங்கள், அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும், குறித்த சட்டத்தின் ஏற்பாடுகள் சமகால தேவைகளுக்குப் போதுமானதல்ல என்பது சட்டத்துறை சார்ந்த பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக தற்போது வியாபித்து வரும் ஒருசில போதைப்பொருட்கள் இச்சட்டத்திற்கு ஏற்புடையதாக இல்லாதமையால், போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள், அவர்கள் அறியாமலேயே அவ்வாறான நடவடிக்கைகளில் பங்கெடுப்பவர்களுக்கும் பாரியளவில் போதைப்பொருட்களைக் கடத்துபவர்களுக்கும் சமமான முறையில் தண்டனைகளை வழங்குவதற்கு இச்சட்டத்தின் ஏற்பாடுகள் அமைந்துள்ளமையால், மீண்டும் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவையை பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். அதற்கமைய, நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு, சமகாலத் தேவைப்பாடுகளுக்குப் பொருத்தமான வகையில் கட்டளைச்சட்டத்தை திருத்தியமைப்பதற்காக சமயத் தலைவர்கள், சட்டத்துறை நிபுணர்கள், பாதுகாப்புத்துறை அங்கத்தவர்கள், போதைப்பொருள் பாவனைக்கு அடிமைப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொள்பவர்கள் உள்ளிட்ட தரப்பினர்களை உள்ளடக்கியதாக குழுவொன்றை நியமிப்பதற்கும், குறித்த குழு முன்வைக்கும் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு குறித்த கட்டளைச் சட்டத்தை திருத்தியமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. சர்வதேச இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண நிலையத்தை நிர்மாணித்தல் - (விடய இலக்கம் 34)
சர்வதேச இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண விற்பனையில் ஆசியாவின் முன்னணி விற்பனை நிலையமாக திகழும் பாங்க்கொக் மற்றும் ஹொங்கொங் நகரங்களைப் போல விற்பனையாளர்களுக்கும் கொள்வனவாளர்களுக்கும் உரிய வசதிகள், சுயாதீனமான தரவுப் பரிசோதனை சேவைகள், ஆய்வுகூட சேவைகள் வழங்கும் வசதிகள், வங்கிச் சேவைகள் மற்றும் ஏற்றுமதிச் சேவைகள் போன்ற அனைத்துச் சேவைகளும் வசதிகளும் ஒரே கூரையின் கீழ் வழங்குவதற்கான வசதிகளை; பெற்றுக் கொடுப்பதற்காக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் நிதி முதலீட்டில் இரத்தினபுரி தெமுவாவதவில் சர்வதேச இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண நிலையத்தை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, அதன் முதலாம் கட்டமாக இரத்தினபுரி தெமுவாவதவில் அமைந்துள்ள 22 பேர்ச்சஸ் காணித்துண்டில் 05 மாடிகளைக் கொண்ட 17,550 சதுர அடிகளைக் கொண்ட கட்டிடமொன்று 365 மில்லியன் ரூபாய்கள் செலவில் நிர்மாணிப்பதற்கும், இரண்டாம் கட்டமாக அதற்கு அருகாமையில் அமைந்துள்ள காணித்துண்டை கையகப்படுத்தி 14 மாடிகளைக் கொண்ட நவீனமயமான கட்டிடமொன்றை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தின் முதலாம் கட்டமாக முன்மொழியப்பட்டுள்ள கட்டிடத்தை வடிவமைத்து நிர்மாணிக்கும் நிபந்தனையின் கீழ் நேரடி ஒப்பந்தமாக பொறியியல் பணிகள் தொடர்பான ஆலோசனைப் பணியகத்திற்கு வழங்குவதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Add new comment

Or log in with...