சம்மாந்துறை கொரோனா தொற்றாளர் மரணம்; கிழக்கில் முதல் மரணம்

சம்மாந்துறை கொரோனா தொற்றாளர் மரணம்; கிழக்கில் முதல் மரணம்-1st COVID19 Death Reported in Eastern Province

- இலங்கையில் 148ஆவது மரணம்
- இரு வைத்தியர்கள் உள்ளிட்ட நால்வருக்கு தொற்று
- மேலும் பலருக்கு PCR

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொவிட்-19 தொற்று நோயாளி ஒருவர், முல்லேரியா ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

சம்மாந்துறையை சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதுவே கிழக்கு மாகாணத்தில் கொவிட் தொற்றினால் ஏற்பட்டுள்ள முதலாவது மரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நோய்வாய்ப்பட்ட நிலையில், இவ்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வியாழனன்று (10) மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின்போது, இவருக்கு கொவிட் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இவர் அன்றைய தினம் இரவு விசேட அம்பியூலன்ஸில் ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில், மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பகுதியில் வைத்து உயிரிழந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து மீளவும் அவரது சடலம் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு, வைத்தியசாலையின் சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.எல்.எப். ரஹ்மான் தெரிவித்தார்.

மேலதிக நடவடிக்கைகள் குறித்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தீர்மானிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வியாழனன்று கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேற்படி சம்மாந்துறை நபரும் பொத்துவில் நோயாளி ஒருவருக்கு உதவியாக தங்கியிருந்த உறவினர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து இவ்வைத்தியசாலையில் இவர்களுக்கு சிகிச்சையளித்த இரண்டு பெண் வைத்தியர்களுக்கும் ஒரு ஆண் தாதி உத்தியோகத்தருக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு, அவர்கள் மருதமுனை மற்றும் பாலமுனை கொவிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவ்வைத்தியசாலையில் பணியாற்றும் இன்னும் சில வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் அறிக்கைகள் வரவேண்டியிருப்பதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் டொக்டர் ஏ.எல்.எப். ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, இவ்வைத்தியசாலையில் கொவிட் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து மிகவும் இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே வெளிநோயாளர் பிரிவு மருத்துவ சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்ற நோயாளிகளை பார்வையிடுவதற்கு பொதுமக்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.

(கல்முனை விசேட நிருபர்- எம்.ஐ. சம்சுதீன், பாறுக் ஷிஹான்)


Add new comment

Or log in with...