ஜாதிக ஹெல உருமயவிலிருந்து விலகினார் சம்பிக்க ரணவக

ஜாதிக ஹெல உருமயவிலிருந்து விலகினார் சம்பிக்க ரணவக-Champika Ranawaka MP Resigns From General Secretary & Membership of JHU Party

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக, ஜாதிக ஹெல உருமய கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

ஜாதிக ஹெல உருமய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள அவர்,  அக்கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் விலகியுள்ளார்.

இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற ஜாதிக ஹெல உருமயவின் விசேட பிரதிநிதிகள் கூட்டத்தில் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

புதிய சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக கட்சியிலிருந்து நீங்குவதாக பாட்டலி சம்பிக்க ரணவக தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஜாதிக ஹெல உருமயவின் மத்திய செயற்குழு உறுப்பினர்களும் தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.

இதனடிப்படையில், கருணாரத்ன பரணவிதான, நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்க, அநுருத்த பிரதீப், மற்றும் நிரோஷா அத்துகோரள ஆகியோர் கட்சியின் செயற்குழுவிலிருந்து விலகியுள்ளனர்.

குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த கட்சியின் ஏனைய உறுப்பினர்களின் அனுமதியுடன், ஜாதிக ஹெல உருமயவிற்கு புதிய உறுப்பினர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஜாதிக ஹெல உருமயவின் தலைவராக ஹெடிகல்லே விமலசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் புதிய பொதுச் செயலாளராக பந்துல சந்திரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

உப தலைவராக தயா பெரேராவும் பிரதிச் செயலாளர் நாயகமாக சட்டத்தரணி டியூடர் பெரேராவும் பொருளாளராக அனில் ஜயவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜாதிக ஹெல உருமயவின் தேசிய அமைப்பாளராக மஹேந்திர ஜயசிங்க பெயரிடப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில், கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு புதிதாக 25 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கடந்த முறை கொழும்பு மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சம்பிக்க ரணவக, பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...