திசர பெரேராவின் அதிரடியால் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெற்றி

தம்புள்ள வைகிங் மற்றும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிகளுக்கு இடையிலான லங்கா ப்ரீமியர் லீக்

தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 66 ஓட்டங்கள் அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ள வைகிங் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு வழங்கியது. வைகிங் அணியிலிருந்து ஓசத பெர்னாண்டோ மற்றும் சுதீப் தியாகி ஆகியோர் நீக்கப்பட்டு, அப்தாப் அலாம் மற்றும் போல் ஸ்ட்ரேலிங் ஆகியோர் உள்வாங்கப்பட்டனர்.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியிலிருந்து கைல் அபோட் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக உஸ்மான் ஷின்வாரி இணைக்கப்பட்டார். இவ்வாறான மாற்றங்களுக்கு மத்தியில், இரண்டு அணிகளும் தங்களுடைய முதல் வெற்றியை நினைவில் வைத்து இரண்டாவது வெற்றிக்காக பலமான அணிகளாக களமிறங்கின.

தம்புள்ள வைகிங் – உபுல் தரங்க, போல் ஸ்ட்ரேலிங், தசுன் ஷானக (தலைவர்), நிரோஷன் டிக்வெல்ல, ரமேஷ் மெண்டிஸ், சமித் பட்டேல், மலிந்த புஷ்பகுமார, லஹிரு மதுசங்க, அன்வர் அலி, லஹிரு குமார, அப்தாப் அலாம்

ஜப்னா ஸ்டாலியன்ஸ் – அவிஷ்க பெர்னாண்டோ, மினோத் பானுக, டொம் மூர்ஸ், தனன்ஜய டி சில்வா, சொஹைப் மலிக், சதுரங்க டி சில்வா, திசர பெரேரா (தலைவர்), வனிந்து ஹசரங்க, பினுர பெர்னாண்டோ, உஸ்மான் ஷின்வாரி, டுவானே ஒலிவியர்

துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதும், திசர பெரேராவின் அதிரடி துடுப்பாட்டம் மற்றும் சதுரங்க டி சில்வா, வனிந்து ஹசரங்க மற்றும் சொஹைப் மலிக் ஆகியோரின் பங்களிப்புடன், 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டகளை இழந்து 218 ஓட்டங்களை குவித்தது.

திசர பெரேரா 44 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 97 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்த நிலையில், சதுரங்க டி சில்வா 29 ஓட்டங்களையும், சொஹைப் மலிக் 23 ஓட்டங்களையும், வனிந்து ஹசரங்க 10 பந்துகளில் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். திசர பெரேரா T20 போட்டிகளில் 3500 ஓட்டங்களை கடந்தவர் என்ற மைல்கல்லையும் இன்று தாண்டியிருந்தார்.

தம்புள்ள வைகிங் அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, சமித் பட்டேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்ற, லஹிரு குமார, ரமேஷ் மெண்டிஸ், அன்வர் அலி மற்றும் அப்தாப் அலாம் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ள வைகிங் அணியும் ஆரம்பத்தில் தடுமாற்றமான முறையில் ஓட்டங்களை குவித்த போதும், சமித் பட்டேல் மற்றும் தசுன் ஷானக ஆகியோர் அணிக்கு சற்று நம்பிக்கை கொடுத்தனர்.

எவ்வாறாயினும், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி சரியான நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தியதால், வைகிங் அணியால் 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 152 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.

தம்புள்ள வைகிங் அணிசார்பில் சமித் பட்டேல் 41 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்த நிலையில், தசுன் ஷானக 35 ஓட்டங்களையும், அன்வர் அலி 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் உஸ்மான் ஷின்வாரி 3 விக்கெட்டுகளை வீழ்த்த, பினுர பெர்னாண்டோ மற்றும் திசர பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி தங்களுடைய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்று மொத்தமாக 4 புள்ளிளுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. தம்புள்ள வைகிங் அணி இந்த போட்டியில் தோல்வியடைந்து, 2 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.


Add new comment

Or log in with...