LTTE தொடர்பில் விஜயகலாவின் கருத்து; வழக்கு மார்ச்சிற்கு

LTTE தொடர்பில் விஜயகலாவின் கருத்து;  வழக்கு மார்ச்சிற்கு-Controversial Statement Regarding-LTTE-Vijayakala Maheswaran-Case on March 19

விடுதலைப் புலிகள் மீள உருவாக வேண்டுமென்ற சர்ச்சைக்குரிய கருத்துப்பட கூட்டமொன்றில் உரையாற்றிய, விஜயகலா மகேஸ்வரன் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக இருந்த விஜயகலா மகேஸ்வரன், கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை 02ஆஅம் திகதி யாழ்ப்பாணம், வீரசிங்க மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் இடம்பெற்ற கூட்டத்தில் குறித்த கருத்தை தெரிவித்திருந்ததாக, அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (01) கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் நிஹார் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதவான் குறித்த வழக்கை மார்ச் 19ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் விடுதலைப்புலிகள் காலத்தில் இடம்பெறவில்லை என்றும், பெண்கள் நிம்மதியாக வாழ வேண்டுமாயின் விடுதலைப் புலிகள் மீள உருவாக வேண்டுமென்ற கருத்துப்படவும் உரையாற்றியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு அவரிடம் வாக்குமூலம் பெற்றதோடு, 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 08ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டு பின்னர் அன்றையதினமே பிணையிலும் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அவர் தெரிவித்த குறித்த கருத்து தொடர்பில் திட்டமிட்ட குற்றத் தடுப்புப் பிரிவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த சந்தர்ப்பத்தில் பல சர்ச்சைகள், எதிர்ப்புகள் கிளம்பியதால், விஜயகலா மகேஸ்வரன் தனது பதவியை இராஜினாமா செய்திருந்ததோடு, ஐக்கிய தேசிய கட்சியும் விசாரணைக்குழுவை நியமித்து விசாரணை நடாத்தியிருந்தது.

அதன் பின்னர் விஜயகலா மகேஸ்வரன் கல்வி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...