நிந்தவூரில் கொள்ளை; கணவனும் மனைவியும் வைத்தியசாலைகளில் அனுமதி | தினகரன்

நிந்தவூரில் கொள்ளை; கணவனும் மனைவியும் வைத்தியசாலைகளில் அனுமதி

நிந்தவூர் 01 மீராநகர் வீதியில் உள்ள சில்லறைக் கடை கூரையை உடைத்து உட்புகுந்த திருடர்கள் உரிமையாளரையும், அவரது மனைவியையும் தாக்கிவிட்டு கொள்ளையடித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (30) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வயோதிபர்களான அலியார் லெவ்வை ராவியா உம்மா எனப்படும் பெண் தலையில் படுகாயமடைந்த நிலையில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த பெண்ணின் கணவரான எம். முனாப் என்பவர் தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

நிந்தவூர் பிரதேசத்தில் அண்மைக்காலமாக திருடர்களின் அட்டகாசங்கள் அதிகரித்து வருவதுடன் பல திருட்டு சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன் குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ள சில்லறைக்கடை அமைந்துள்ள வீட்டில் ஏற்கனவே திருட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்துடன், இதுபற்றி பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்த நிலையில் இரண்டாவது முறையாகவும் இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்த திருட்டு சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நிந்தவூர் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...