கார்த்திகை தீபத்திற்கு விளக்கேற்றியவர்களை கைது செய்வது ஜனநாயகமா?

- கஜேந்திரன் எம்.பி கேள்வி

இந்துக்களின் பாரம்பரிய மத நிகழ்வான கார்த்திகை தீபத் திருநாளுக்கு விளக்கேற்றியவர்களைக் கூட கைது செய்வதுதான் ஜனநாயகமா? என தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கேள்வி எழுப்பினார்.

வரவு-செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் பேசுகையில்,

தமிழர்களின் உரிமைக்காக உயிர்நீர்த்த மாவீரர்களின் நினைவேந்தல் கடந்த வாரம் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்பட்டது. நீதிமன்றங்களை பயன்படுத்தி தமிழர்களின் நினைவேந்தல் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை உளவியல் ரீதியாக ஆற்றுப்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் மாறிமாறி வந்த அரசாங்கங்கள் எதுவும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் அவரது உறவினர்களை நினைவு கூருவதற்கும் தடை விதித்து ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது.

நினைவு கூர அனுமதியளித்திருந்தால் கூட அவர்களின் மனம் ஆற்றுப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் அந்த மக்களை 07 நாட்களுக்கு வீடுகளுக்குள் சிறைவைத்து மிக மோசமான மன ரீதியான தாக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்து மதத்தவர்களின் மத வழிபாட்டுக்குரிய கார்த்திகை தீபத்திருநாள் ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. கார்த்திகை விளக்கீடு என்பது பாரம்பரியமான மத நிகழ்வு. அந்த நிகழ்வுக்காக விளக்கை ஏற்ற முயற்சித்த வடக்கு, கிழக்கில் பலர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியால் விளக்கேற்ற முயற்சித்த யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஜேந்திரனின் எம்.பியின் உரைக்கு ஆளும் தரப்பில் ஒழுங்குப் பிரச்சினை முன்வைத்து இடையூறு செய்யப்பட்டது.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிசாந்தன்


Add new comment

Or log in with...