தமிழர்களை புலிகள் கொலை செய்தபோது தமிழ் அரசியல்வாதிகள் எங்கிருந்தார்கள்?

'தமிழ் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான பணிகளை எமது இராணுவத்தினர் மேற்கொண்டபோது ஒரு குவளை தேநீர் கூட தமிழ் அரசியல்வாதிகள் கொடுத்து உதவவில்லை. நாங்கள் எங்களது பணத்திலேயே தமிழ் மக்களுக்கு எட்டாயிரம் வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்துள்ளோம். அவ்வீடுகளுக்கு ஒரு கூரையோட்டினையேனும் வாங்கிக் கொடுக்க எந்த தமிழ் அரசியல்வாதியும் முன்வரவில்லை' என்று பொதுமக்கள் பாதுகாப்பு, உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே ரியர் அட்மிரல் சரத் வீரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

"இந்த வரவு செலவுத்திட்டத்தில் ஒரு இலக்கை எதிர்பார்த்துள்ளோம். அந்த இலக்கு சௌபாக்கிய தொலைநோக்கை உண்மையாக நிலைநிறுத்துவதாகும். ஜனாதிபதி இந்த நாட்டைப் பொறுப்பேற்கும் போது நாடு அராஜக நிலையிலே இருந்தது என்பதனை அனைவரும் ஏற்றுக் கொண்டோம். எமது நாட்டை சௌபாக்கிய நாடாக மாற்றுவதற்கு சில நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கே இவ்வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாட்டை ஜனாதிபதி பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் செல்வதற்குள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தது. முழுநாடும் லொக்டவுன் செய்யப்பட்டது. சுற்றுலாத்துறை முற்றாக பாதிப்படைந்தது. வருமானம், ஏற்றுமதி இல்லாமல் போனது. வெளிநாட்டில் பணிபுரியும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட நம்நாட்டவர்கள் நாட்டுக்கு திரும்பினர். அதனால் அந்த வருமானம் இல்லாமலானது. வியாபாரம் மூடப்பட்டது. உற்பத்தி குறைந்தது. இலட்சக்கணக்கான மக்களுக்கு ஐயாயிரம் ரூபா பணம் வழங்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபா வழங்கப்பட்டது. இந்த நிலையில்தான் இப்படியான ஒரு வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டது என்பதனை நினைவில் கொள்ளுதல் அவசியம்.

கொவிட் என்பது அரசாங்கத்தினதோ, ஜனாதிபதியினதோ பிழை அல்ல. இந்நிலையில் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, கடந்த வருட வருமானத்தை இவ்வருட வருமானத்துடன் ஒப்பீடு செய்து, இவ்வருட வருமானம் வீழ்ச்சியடைந்தள்ளது என்கின்றார். கடந்த வருட உற்பத்தியுடன் இவ்வருட உற்பத்தியை ஒப்பீடு செய்து இவ்வருட உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது என்கின்றார். இந்த சந்தர்ப்பத்தில் அவர் கொவிட்-19 தொடர்பாக எந்த வசனமும் உச்சரிக்கவில்லை. அதன் பிறகு 'இரண்டு மணித்தியாலங்களில் ஓட்டை விழுந்து மூழ்கிய ரைற்றானிக் கப்பல் போன்றே இந்த அரசாங்கமும் என்கின்றார். நல்லாட்சி அரசாங்கமும் ஜே.வி.பியும் சேர்ந்து மூழ்கடித்த கப்பலை, மூழ்கும் போது பார்த்துக் கொண்டிருந்த அநுரகுமரா திசாநாயக்காவின் கூற்று ஆச்சரியம் அளிக்கின்றது.

அழிவுகளை சீர்செய்து கப்பலை இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைக்கு ஏற்றால் போலேவே இந்த வரவு திட்டத்தினை தயாரித்துள்ளோம். சௌபாக்கிய தொலைநோக்கின் இலக்குகளை அடைந்து கொள்ள பத்துக்கும் மேற்பட்ட கொள்கைகள் இருக்கின்றன. அதில் முதலாவது தேசிய பாதுகாப்பு விடயமாகும். அதாவது சிக்கல்கள் இல்லாமல் வாழ்வதாகும். நாட்டில் பொதுவானது தேசிய பாதுகாப்பு. தேசிய பாதுகாப்பு என்பது ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் பள்ளிகளுக்குள் நுழைந்து கத்தி, வாள் தேடுவதோ அல்லது பயங்கரவாதிகளின் தாய், தந்தையர் யார் என்று தேடுவதோ அல்ல. இந்த தாக்குதல் ஏற்படுவதற்கு முன்னர் எதிரி யார், அவர்களது இலக்கு என்ன, நோக்கம் என்ன என்பதனை ஆராய்வதேயாகும். அதனைத்தான் புலனாய்வுத்துறை செய்வது. நாட்டினுடைய பாதுகாப்பின் முதுகெலும்பு புலானாய்வுத்துறை. ஆனால் நல்லாட்சியில் புலனாய்வுத்துறை முற்றாக செயலிழந்தது, துரோகமிழைக்கப்பட்டது. அதனால்தான் ஈஸ்டர் போன்ற தாக்குதல்கள் மிக இலகுவாக நடந்தேறின. எங்களுடைய அரசாங்கம் மீண்டும் புலனாய்வுத்துறையை சக்திமிக்கதாக மாற்றியமைத்துள்ளது.

இராணுவத்தினரை மறந்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். தங்களுக்குரியவற்றை கேட்டு வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம் செய்த அங்கவீனமுற்ற படையினரை விரட்டியடித்தது நாங்கள் அல்ல, நல்லாட்சி அரசாங்கத்திலேயாகும். நாங்கள் இப்போது ஆறுதலாக இருப்பது போர் வீரர்கள் உயிரிழந்து பெற்ற வெற்றியினாலாகும். அதனால் அவ்வீரர்களை நாங்கள் கௌரவிக்க வேண்டும்.

அதேபோல் ஒழுக்கமுள்ள, சட்டத்தை மதிக்கும் மற்றும் பண்புள்ள சமூகத்தை கட்டியெழுப்புவதாகும்.மூன்று தசாப்த காலமாக யுத்த கொடுமையை அனுபவித்தோம். 39 வருட பாதுகாப்பு சேவையில் அந்த அழிவுகளை நேரில் கண்டு கொண்டேன். 29ஆயிரம் பேர் மரணித்தனர். 14ஆயிரம்பேர் அங்கவீனமடைந்தனர். இந்த நிைலமையில் இந்த பாராளுமன்றில் உள்ள தமிழ் உறுப்பினர்கள் சிங்கள மக்களை கோபப்படுத்தும் விதத்திலே நடந்து கொள்கின்றனர். அதுமட்டுமன்றி சிங்கள – தமிழ் மக்கள் மத்தியில் மீண்டுமோர் பிரச்சினையை உருவாக்கும் வித்திலேயே நடந்து கொள்ள முற்படுவதைக் காண முடிகின்றது.

தங்களது பிரதேசத்திலுள்ள அபிவி ருத்திகள் பற்றியோ, அவசியமான விடயங்கள் பற்றியோ கதைப்பதனை விட்டு விட்டு சிங்கள மக்களையும் இராணுவத்தினைரையும் அவமானப்ப டுத்தும் வகையிலே பேசுகின்றனர். அன்று தமிழ் இளைஞர்கள் இந்த நிலைக்கு செல்வதற்கு காரணம் இப்படியான பிரிவினைவாதிகள், தேசத்துரோகிகளின் பிரசாரத்தினாலேயாகும்.

நாங்கள் இளைஞர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட பயங்கரவாதத்தை இல்லாதொழித்தவர்கள். உலகில் எங்கும் பயங்கரவாதம் முறையடிக்கப்படவில்லை. நேட்டோ படையினரால் தலிபானை முறியடிக்க முடியாதுள்ளது. ஆனால் நாங்கள் முறியடித்தோம்.

அதேபோல் பயங்கரவாதிகளில் நடுநிலையானவர்கள் என்கிற ஒன்றில்லை. ஒன்றில் பயங்கரவாதி அல்லது இல்லை. பயங்கரவாதம் மீண்டும் உருவாகுமானால் அதற்காக பொறுப்பினை நீங்கள் எல்லோருமே ஏற்க வேண்டும். இனவாதத்தை பிரசாரம் செய்கின்ற, தமிழ்_சிங்கள மக்களிடையே பிரச்சினைகளை ஏற்படுத்துகின்ற விதத்தில் கருத்துக்களை பகிர்கின்ற நீங்களே பொறுப்புச் சொல்லுதல் வேண்டும்.

இங்கு மனித உரிமைகள் பற்றிப் பேசுகின்றனர். தமிழ் மக்கள் மட்டுமே நல்லவர்கள் என பேசுகின்றனர். ஆனால் 2002இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திடும் போது வடக்கில் கடற்படையின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றினேன். அந்த போர் நிறுத்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் வீடுகளுக்குள் புகுந்து சிறு குழந்தைகளை கடத்திச் சென்றனர். அப்போது நீங்கள் எங்கிருந்தீர்கள்? அதனை முடியுமானவரை நாங்கள் நிறுத்தினோம். கடத்தப்படுகின்ற இளைஞர்களை வான்களில் வன்னிக்கு கொண்டு செல்வதை தாய்மார் பாதை வழியே கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தனர். நாம் அதனை நிறுத்தினோம்.

பாடசாலைகளுக்குச் சென்று பலவந்தமாக மாணவர்களை ஆர்ப்பாட்டங்களுக்கு கொண்டு சென்றனர். அதற்கு எதிரான அதிபர்களை இரவுகளில் கொலை செய்தனர். அதனை நிறுத்தியவர்கள் நாங்கள். அப்போது நீங்கள் எங்கிருந்தீர்கள்? அதேபோல் கப்பம் செலுத்த முடியாத யாழ்ப்பாண வியாபாரிகளை விரட்டியடித்தனர், கடத்தி கொலை செய்தனர். யுத்த காலத்தில் நீங்கள் எங்கிருந்தீர்கள்?

தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி பேசுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான உங்களை யுத்த காலத்தில் நாங்கள் காணவில்லை. நீங்கள் எல்லோரும் கொழும்பிலுள்ள சுகபோக வீடுகளில் உள்ள மெத்தைகளில் படுத்துறங்கினீர்கள். பிரபாகரன் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்களை பணயக் கைதியாக வைத்திருந்தார், உயிர் தப்ப முனைந்தவர்களை கொலை செய்யும் போது நீங்கள் எங்கிருந்தீர்கள்?

நாங்கள் யுத்தத்தினை வெற்றி கொண்டது இரண்டு இலட்சத்து தொண்ணூற்று ஐயாயிரம் அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்றிக் கொண்டே ஆகும். இது வரலாற்று நிகழ்வு. இப்படியான பெருந்தொகை மக்களை மீட்டெடுத்து எந்தப் போரும் வெற்றி கொள்ளப்படவில்லை என்கின்றனர் யுத்த நிபுணர்கள்.

மேலும் இன்னுமொரு சாதனையையும் நிகழ்த்தினோம். குறுகிய காலத்திற்குள் அம்மக்களை மீளக்குடியமர்த்தினோம். தமிழ் இளைஞர்களுக்கு ஒரு யோக்கட் கப்பையேனும் வழங்க இங்குள்ள எந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வரவில்லை என்பதனை பொறுப்புடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பில் பேசுவதற்கு தமிழ் அரசியல்வாதிகளுக்கு எந்த உரிமையும் இல்லை. நாங்கள் உங்களை விட அதிகமாக தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பில் கரிசனை செலுத்தியுள்ளோம்.

தமிழ் டயஸ்போராக்களின் பணத்தைப் பெற்றுக் கொள்ளவும், தமிழ் மக்களை தொடர்ந்து துயருடன் வைத்துக் கொள்ளவுமே மனித உரிமைகள் பற்றி பேசிக் கொள்கின்றீர்கள். தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், முன்னாள் போராளிகள் பதினோராயிரத்து அறுநூறு பேருக்கு புனர்வாழ்வளித்துள்ளோம். சிறுவர் போராளிகள் ஐநூறுபேரை புனர்வாழ்வளித்து கல்வி கற்பதற்கான வழிகளை ஏற்படுத்தி குடும்ப வாழ்க்கைக்குள் இணைத்துள்ளோம். இந்தப் பணிகளை எதனையும் நீங்கள் கண்டு கொள்ளவுமில்லை, அதற்கு எந்த பங்களிப்பினையும் செய்யவுமில்லை.

நாங்கள் எந்தவொரு யுத்த குற்றமும் மேற்கொள்ளவில்லை என்று யுத்த விசேட நிபுணர்கள் ஆறு பேர் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் சேர் டெஸ்மென்டி சில்வா, சேர் ஜெப்ரி நைஸ், பேராசிரியர் மைக்கல் கேன், பேராசிரியர் மைக்கல் நியுட்டன் மற்றும் ரொட்னி டிக்சன் கியு சீ ஆகியோருடன் மேஜர் ஜெனரல் ஜோன் கோம்ஸ் ஆகியோர் இதனை பரணகம ஆணைக்குழுவுக்கு மிகத் தெளிவாக அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்".

தமிழில்: றிசாத் ஏ காதர்
(ஒலுவில் மத்திய விசேட நிருபர்)


Add new comment

Or log in with...