திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்‌ஷ விடுதலை | தினகரன்

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்‌ஷ விடுதலை

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்‌ஷ விடுதலை-Basil Rajapaksa & 3 Others Acquitted From Divi Neguma Case

- பஞ்சாங்கம், GI குழாய் வழக்கில் வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்

திவிநெகும, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட நான்கு பேர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலின்போது, ​​திவிநெகும அபிவிருத்தி நிதியத்திற்கு சொந்தமான ரூ. 2,292 மில்லியன் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட 4 பேர் மீது, குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டு, வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அதற்கமைய, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, திவிநெகும அபிவிருத்தித் திட்டத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக, திவிநெகும அபிவிருத்தித் திட்டத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜயதிலக ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ரூபா 36.5 மில்லியன் அரசாங்க நிதியைப் பயன்படுத்தி, கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது, பஞ்சாங்கம் மற்றும் GI குழாய் விநியோகித்த வழக்கில் பசில் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கப்பட்டபோது, விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை கொழும்பு மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

குறித்த வழக்கில், முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தித் திட்டத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம், கித்சிறி ரணவக்க ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்படி திவிநெகும வழக்கு கடந்த வாரம் (23) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, தனது கட்சிக்காரர், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்பு செயலணிக்கு தலைமை வகிப்பதால், பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய இருப்பதால், அவருக்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு, பசில் ராஜபக்‌ஷ சார்பில் முன்னிலையான ​​ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், குறித்த தடையை நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...