அஜித் தோவால், மரியா திதி - கமல் குணரத்ன இடையில் விசேட சந்திப்பு | தினகரன்

அஜித் தோவால், மரியா திதி - கமல் குணரத்ன இடையில் விசேட சந்திப்பு

அஜித் தோவால், மரியா திதி - கமல் குணரத்ன இடையில் விசேட சந்திப்பு-Ajit Doval-Mariya Didi-Kamal Gunaratne Meets

இலங்கை வந்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் மற்றும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா தீதி ஆகியோருக்கும் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கும் இடையில் விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

கொழும்பில் தனித்தனியே இடம்பெற்ற இந்த சந்திப்புக்களின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பாக சிநேக பூர்வ கலந்துரையாடல்  இடம்பெற்றன. 

இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கிடையில்  கொழும்பில் நடைபெற்ற 4ஆவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கடல்சார் கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர மற்றும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் கொழும்புக்கு வருகை தந்துள்ளனர்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் மற்றும் இலங்கை  பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவிற்கும் இடையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறை, புலனாய்வு தகவல் பகிர்வு மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான வழிகள் ஆகியவை தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இதேவேளை,  அண்மையில் MT New Diamond எண்ணெய்க் கப்பல் விபத்துக்குள்ளான போது இந்திய தரப்பினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்கு பாதுகாப்புச் செயலாளர் நன்றி தெரிவித்தார்.

புதுடில்லியில் ஒரு முன்னணி சிந்தனைக் குழுவான  விவேகானந்தா சர்வதேச  மையத்தின் ஸ்தாபக பணிப்பாளராக உள்ள இவரினால் ‘தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் தொடர்பான  விடயங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.

இந்தியாவின் உயர்ந்த பாதுகாப்பு விருதான கீர்த்தி சக்கர விருதை 1980ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டுள்ள அஜித் தோவால், இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராக 2014ம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி முதல் செயற்பட்டு வருகின்றார்.

இதேவேளை, மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா தீதி மற்றும் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற  மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவிற்கும் இடையில் இடம்பெற்ற  சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சினேக பூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போதும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறை, புலனாய்வு தகவல் பகிர்வு மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான வழிகள் ஆகியவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவை வலுப்படுத்த தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாக பாதுகாப்புச் செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் மற்றும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா தீதி ஆகியோருக்கும் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கும் இடையில் தனித்தனியே இடம்பெற்ற இந்த சந்திப்பை நினைவு கூறும் வகையில் ஒருவருக்கொருவர் நினைவுச் சின்னங்களை பரிமாறிக் கொண்டனர்.

ஸாதிக் ஷிஹான்


Add new comment

Or log in with...