கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மக்கள் வழங்க வேண்டிய ஆதரவு | தினகரன்

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மக்கள் வழங்க வேண்டிய ஆதரவு

கொழும்பு உட்பட நாட்டின் சில இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டு வருகின்றனர். மேல் மாகாணத்தில் கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளாவோரின் அதிகரிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், கொழும்பு மாவட்டத்தில் தொற்று பரவல் அதிகரிப்பு இன்னுமே கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

அதே போன்று கிழக்கிலும் சில இடங்களில் கொரோனா தொற்று பரவுதலில் சமீப தினங்களாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனால் அப்பிரதேசங்கள் கடுமையான கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று ஏற்படாமல் மக்கள் ஒவ்வொருவரும் தங்களை எவ்வாறு காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென சுகாதார திணைக்களம் உட்பட அரசாங்க நிறுவனங்கள் ஒவ்வொன்றுமே தொடர்ச்சியாக சுகாதார அறிவுறுத்தல்களை வெளியிட்டு வருகின்றன. தனியார் சமூகநல நிறுவனங்களும் மக்களுக்கு சுகாதார முன்னெச்சரிக்ைககளை வழங்கி வருகின்றன. அதேசமயம் கொவிட்19 தொற்று ஏற்பட்ட பகுதிகள் முடக்கப்பட்டு, தொற்றாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். கடுமையான பாதிப்புக்கு உள்ளானோருக்கு பாதுகாப்பான முறையில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டும் வருகின்றது.

ஆனாலும் கொரோனா தொற்றை திருப்திகரமான முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதென்பது சிரமம் நிறைந்ததாகவே உள்ளது. புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்ைக அதிகரிப்பில் இன்னுமே வீழ்ச்சி நிலைமை ஏற்படவில்லை. எனவே கொரோனா தடுப்பு நடவடிக்ைககளை மேலும் கடினமாக்க வேண்டிய நிலைமைதான் உருவாகியுள்ளது.

கொரோனா தொடர்பில் எமது மக்கள் மத்தியில் இன்னுமே போதுமான விழிப்புணர்வு உருவாகவில்லை என்றுதான் சுகாதாரத் தரப்பு வட்டாரங்கள் தொடர்ச்சியாக குறை கூறி வருகின்றன.

கொரோனா தொற்றின் பாதக விளைவுகள் மற்றும் அத்தொற்றில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான வழிமுறைகள் தொடர்பாக உச்சகட்ட அளவில் விழிப்புணர்வு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் அவற்றை பெரும்பாலான மக்கள் இன்னுமே பொருட்படுத்தியதாக இல்லையென்பதுதான் பொதுவாக குற்றச்சாட்டாக இருக்கின்றது.

நாம் அன்றாடம் வீதிகளில் காண்கின்ற காட்சியை இதற்கான உதாரணமாகக் கொள்ள முடியும்.முகக்கவசம் அணிந்தபடி அனைவரும் நடமாடுவதையே நாம் காண்கின்றோம். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் முக்கவசத்தை உரியபடி அணிந்து கொள்கின்றனரா என்பதுதான் இங்கு ஆராயப்பட வேண்டியதாகும். எமது மக்களில் கூடுதலானோர் முகக்கவசத்தை வெறும் சம்பிரதாயத்துக்காகவே அணிந்து கொள்வதாகத் தெரிகின்றது. அது முகத்தில் இருந்தால் போதுமென்றே பலரும் நினைக்கின்றனர். பொலிஸாரின் பார்வையில் இருந்து தப்பிக் கொள்வதே முக்கியமென்று நினைத்தபடிதான் ஏராளமானோர் முக்கவசத்தை அணிந்து கொள்வதைக் காண முடிகின்றது.

அதிகளமானோர் முக்கவசத்தை தாடையில் மாத்திரமே அணிந்து கொள்வதைக் காண முடிகின்றது. வாய், மூக்கு ஆகிய முக்கிய அங்கங்கள் இரண்டையும் மூடிக் கொள்ளாத நிலையிலேயே பலரும் முகக்கவசத்தை அணிந்து திரிகின்றனர். முகக்கவசமானது எவ்வாறு ஒருவருக்கு கொரோனாவிடமிருந்து பாதுகாப்புத் தருகின்றது என்ற விளக்கம் சற்றேனும் இல்லாதவர்களாக பலரும் வீதியில் நடமாடித் திரிவதை நாம் காண்கின்றோம்.

கொரோனாவில் இருந்து பாதுகாப்புப் பெறுவதில் முகக்கவசம் முக்கிய சாதனம் ஆகும். மற்றையவரிடம் இருந்து வருகின்ற நோய்க் கிருமியானது எமது உடலுக்குள் நுழைவதை முகக்கவசம் பெருமளவில் தடுத்து நிறுத்துகின்றது. அதே போன்று நாம் ஒருவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தால் எம்மிடமிருந்து தொற்றுக் கிருமிகள் மற்றையவரின் உடலுக்குள் செல்வதை எமது முகக்கவசம் தடுக்கின்றது. எனவே மற்றவர்கள் நோய்த் தொற்றில் இருந்து பாதுகாக்கப்படுகின்றனர்.

கொரோனா போன்ற பெருந்தொற்றைப் பொறுத்த வரை நாம் எம்மையும் பாதுகாத்தபடி, மற்றவரின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அப்போதுதான் கொவிட்19 தொற்றில் இருந்து எமது சமூகத்தையும், ஒட்டுமொத்த நாட்டையும் காப்பாற்ற முடியும். கொரோனா தொற்றைப் பொறுத்த வரை ஒட்டுமொத்த சமூகத்தின் நலன் தொடர்பாக சிந்தித்துச் செயற்படுவதே எமக்கும் எம்மைச் சார்ந்தவர்களுக்கும் நன்மையைத் தருமென்பதை நாம் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்வது பிரதானமாகும்.

முகக்கவசம் மாத்திரமே பாதுகாப்புத் தருமெனக் கூறுவதற்கில்லை.கொவிட்19 தொற்றில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான சுகாதார ஆலோசனைகளை இனிமேல் மக்களுக்கு புதிதாகக் கூற வேண்டிய அவசியமில்லை. ஊடகங்களில் நாளும் பொழுதும் இவைதான் பிரதான ஆலோசனைகளாக அமைந்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் உரியபடி கடைப்பிடிப்பதை மக்கள் அலட்சியம் செய்யலாகாது.


Add new comment

Or log in with...