இஸ்லாம் கூறும் எளிய தர்மம் புன்னகை | தினகரன்

இஸ்லாம் கூறும் எளிய தர்மம் புன்னகை

இஸ்லாம் கூறும் எளிய தர்மம் புன்னகை-Smile-in-Islam

புன்னகையின் சிறப்பும் அதன் பயன்களும் அதனைக் குறித்த பல மேற்கத்திய அறிஞர்களின் கூற்றுகளும் சமீப காலங்களில் புன்னகை குறித்து வெளியாகி வரும் மருத்துவ அறிக்கைகளும் அனைத்துச் சமூகங்களிலும், குறிப்பாக முஸ்லிம்களிடையேயும் வேகமாகப் பரவி வருகிறது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சமூகப் பிணைப்பை ஏற்படுத்தக் கூடிய ஓர் எளிய ஆனால் வசீகரமான உத்தியாக இப் புன்னகையைக் குறித்து இஸ்லாம் அழகிய முறையில் அறிவுறுத்தியுள்ளது.

உன் சகோதரனின் முகத்தைப் பார்த்து புன்னகை புரிவது உனக்கு நல்லறமாகும். நீ நன்மையை ஏவுவதும் தீமையைத் தடுப்பதும் நல்லறமாகும். பாதை தவறிய மனிதருக்குப் பாதையைக் காட்டுவதும் உனக்கு நல்லறமாகும். பார்வையிழந்தவருக்குப் பார்வையாக நீ ஆவதும் உனக்கு நல்லறமாகும். பாதையில் கிடக்கும் கல், முள், எலும்பு போன்றவற்றை நீ அகற்றுவதும் உனக்கு நல்லறமாகும். உனது வாளியில் உள்ள தண்ணீரை உனது சகோதரரின் வாளியில் ஊற்றுவதும் உனக்கு நல்லறமாகும்.' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம் -திர்மிதீ, இப்னு ஹிப்பான்)

அறிவுக்கு ஏற்ற சிறந்த பகுத்தறிவுச் சித்தாந்தத்தை இஸ்லாம் வழங்கியுள்ளது. ஒரு மனிதன் தனக்குச் செய்ய வேண்டிய வழிபாடுகளைப் பற்றியும் அதன் நன்மைகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ள இறைவன், அதே அளவில் பயனைப் பெற்றுத்தரும் இன்னொரு செயல் பற்றியும் கூறுகிறான். இறைவழிபாட்டின் மூலம், தான் வழங்கும் நன்மைகளைப் போன்றே ஒரு மனிதன் சக மனிதர்களுடன் அன்புடன் கலந்துறவாடுவதற்கும் கொட்டித் தருவதாக வாக்களிக்கிறான். சுருக்கமாகச் சொல்வது என்றால், சமூகத்தினுள் அழகானதொரு பிணைப்பை ஏற்படுத்தும் இறைவனின் தயாள குணத்தினை சிந்தனையாளர்கள் இதில் இருந்து அறிந்து கொள்ள இயலும்.

தர்மம் என்பதெல்லாம் ஏதோ பணவசதியும் பொருள் வசதியும் நிறைந்தவர்களுக்கு மட்டும்தான் என்கிற குறுகியக் கண்ணோட்டத்தை அடியோடு மாற்றியமைக்கிறது இஸ்லாம். ஏழை, எளியவர்களும் தம்மால் இயன்ற தர்மத்தைச் செய்து நன்மையைப் பெற முடியும் என்று நபி(ஸல்) அவர்கள் மிகவும் ஊக்கப்படுத்தியுள்ளார்கள். எந்த அடிமட்ட நிலையில் இருக்கக் கூடிய வறியவர்களும் தர்மம் செய்து நன்மையை அடைந்து கொள்ளும் வழியினை இறைவன் கூறுகிறான்:

நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள். எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 3:92)

அதே போன்று ஒருவர் விரும்பிக்கொடுக்கும் தர்மமான சதகாவை இஸ்லாம் கொடுக்கச் சொல்லி மிகவும் வலியுறுத்துகிறது. ஸதகா (தர்மம் கொடுப்பது) எனும் வார்த்தை சதக்கா (உண்மையைச் சொல்வது / உண்மையாளராய் இருப்பது) எனும் அரபிப் பதத்திலிருந்து உருவானதாகும். மனமுவந்து கொடுக்கும் தர்மமான இதை ஒவ்வொருவரும் தனது தினசரி வாழ்க்கையில் ஓர் அங்கமாக ஆக்க வலியுறுத்தியுள்ளது இஸ்லாம். நபி(ஸல்) அவர்கள் ஒருவர் முகத்தில் காட்டும் மென்மையான புன்னகையும் அவர் பிறருக்குச் செய்யும் தர்மமே என்ற அளவிற்கு அதனை வலியுறுத்தியுள்ளார்கள்.

'உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பதும் தர்மமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(ஆதாரம் - திர்மிதி 2022, 2037)

இறைவனிடமிருந்து இவ்வளவு எளிதாக நன்மையைப் பெற்றுத்தரும் ஒரு வாழ்வியல் நெறி எவ்வளவு சிறப்பானது. புன்னகை பூக்கும் இன்முகத்துடன் ஒருவர் ஒரு செய்தியைச் சொல்லும்போது அது கேட்பவருக்கு மனதில் பதியவும் சொல்வதைக் கூர்ந்து கேட்கும் ஆர்வத்தையும் அதிகரிக்கும் என உளவியல் ஆய்வொன்று குறிப்பிட்டிருக்கின்றது.

இஸ்லாம் உறுதியான சமூகப் பிணைப்பை வாழ்வில் செயற்படுத்தத் தூண்டும் மார்க்கமாகும். அன்பும் பாசமும் தான் ஒரு சமூகத்தை இணைக்கும் வலுவான சக்தியாக இருக்கும் என்பதை இஸ்லாம் பெரிதும் வலியுறுத்தியுள்ளது. இறைவன் தன் திருமறையில் கூறுவதைப் போன்று இந்தப்புன்னகை உள்ளங்களுக்கு இடையே பிணைப்பை ஏற்படுத்த வல்லது என்பதை அதைக் கடைபிடிக்கும் ஒவ்வொருவரும் உளப்பூர்வமாக கடைபிடிக்கையில் உணரலாம். மேலும், (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்) பிணைப்பை (அல்லாஹ்) உண்டாக்கினான். பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது. ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான். மெய்யாகவே அவன் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 8:63)

நபித்தோழர்கள் பலரின் அறிவிப்பிலிருந்து நபி(ஸல்) அவர்கள் புன்னகை பூக்கும் முகமாகவும், நகைச்சுவையை ரசித்து சிரித்த சம்பங்கள் பலவும் அறிய முடிகிறது. நபியவர்களின் பிரத்தியேகமான புன்னகையைக் கண்ட ஒவ்வொரு நபித்தோழரும் நபியவர்களுக்கு மிகவும் விருப்பமானவர் தான் என்ற எண்ணம் மிகைக்கும் அளவிற்கு அவர்களின் புன்னகையில் வசீகரம் இருந்தது. ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி)அவர்கள் 'நான் இஸ்லாத்தை ஏற்ற கணத்திலிருந்து புன்னகை பூக்கும் முகம் தவிர வேறெதையும் நான் நபியவர்களிடம் கண்டதில்லை. அவர்கள் என்னைப் பார்க்கும்போதெல்லாம் மெல்லிய புன்னகை பூப்பதைக் கண்டுள்ளேன் என்றும்
(ஆதாரம் -புகாரி)

அப்துல்லாஹ் இப்னு ஹாரித் (ரலி) அவர்கள் 'என் வாழ்நாளில் நபியவர்கள் அளவிற்குப் புன்னகை பூத்த இன்னொருவரை நான் கண்டதேயில்லை' என்றும் (ஆதாரம் - திர்மிதி) குறிப்பிட்டுள்ளார்கள். சக சகோதரர் ஒருவரைக் கண்டு புன்னகைப்பது ஒருவர் செய்யும் தர்மம் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே நம் குடும்பத்திலிருந்து துவங்கி, சகோதரர்களுடன், நண்பர்களுடன், அண்டை வீட்டார், உற்றார் உறவினர் ஆகிய அனைவருடனும் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்து ஊக்கப்படுத்திய கனிவுடன் கூடிய புன்னகையை முகத்தில் தவழ விடுவோம். அதன் மூலம் பிறரின் இறுக மூடப்பட்ட மனங்களையும் புன்னகை என்ற கனிவான நம் திறவுகோல் கொண்டு திறப்போம். இம்மையில் சமூகத்தில் சகோதரப் பிணைப்பை உறுதி செய்து கொள்வதுடன் மறுமையில் இஸ்லாம் வலியுறுத்திச் சொல்லியிருக்கும் புன்னகை எனும் நபிவழியைப் பின்பற்றியதன் மூலம் நிறைய தர்மங்கள் செய்த நன்மையையும் பெற்றுக்கொள்வோம்.

உலகில் மனிதனது நோக்கங்களை இரண்டு வகையாக பிரித்து அறியலாம். முதலாவது வகை உலக வாழ்வுடன் தொடர்புடையது. தான் இந்த உலகத்தில் வாழ்கின்ற போது தனது எதிர்காலத்தை எவ்வாறு திட்டமிட்டு முகாமைத்துவம் செய்து வாழலாம் என்று இவ்வுலக வாழ்வின் நோக்கத்தை அடைவதற்காக முழு முயற்சியுடன் செயற்படுவதாகும். ஆனால் உண்மையான முஃமினின் வாழ்க்கையைப் பொருத்தமட்டில் அவன் உலக வாழ்வையும் பார்க்க மறுமையில் தான் ஈடேற்றமான வாழ்க்கையை பெற்றுக்கொள்ள வேணடுமென்பதில் அதிக கரிசனை காட்டுவான்.

அந்த வகையில்தான் ஒரு முஃமினின் இலட்சியம், நோக்கங்களில் மிகப் பிரதானமானது வானம் பூமியை விட விசாலமான சுவனத்தை அடைந்து கொள்வதாகும். இந்த சுவனத்தை அடைந்து கொள்வதற்கு உண்மையில் நாம் செய்கின்ற அமல், இபாதத்கள் மட்டும் போதுமானவை அல்ல. சுவனம் நுழைவதற்கு அல்லாஹ்வின் றஹ்மத் கிடைக்கப்பெறுவது இன்றியமையாததாகும். இதனை பல ஹதீஸ்களில் அவதானிக்க முடிகின்றது.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களைப் பார்த்து, 'உங்களில் ஒருவர் தான் செய்த அமல்கள் மூலமாக சுவனம் நுழையமாட்டார். அல்லாஹ்வுடைய றஹ்மத் இருந்தாலே தவிர என்ற கருத்தில் கூறிய போது அல்லாஹ்வுடைய தூதரே... நீங்களும் அல்லாஹ்வுடைய றஹ்மத் இல்லாமல் சுவனம் நுழைய முடியாதா? என்று ஸஹாபாக்கள் கேட்க நானும் அல்லாஹ்வுடைய றஹ்மத் இல்லாமல் சுவனம் நுழைய முடியாது என்று கூறியுள்ளார்கள்.

அந்த ஸஹாபாக்கள் அல்லாஹ்வுக்காக வாழ்ந்தார்கள். தங்களது சொத்து செல்வங்கள், தங்களது சொந்த பந்தங்களை இழந்தார்கள். அந்த ஸஹாபாக்களுக்கே இந்த நிலையென்றால் ஏனையவர்களின் நிலைமை எவ்வாறிருக்கும். அதனால் அல்லாஹ்வுடைய றஹ்மத்தைப் பெற்றுக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தப்படுவது இன்றியமையாத விடயமாகும்.

அந்த வகையில் அல்லாஹ்வின் ரஹ்மத் என்பது தொடர்பில் அல் குர்ஆனின் பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு கருத்துப்பட சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

அதாவது அல் குர்ஆனின் யூனூஸ் என்ற அத்தியாயத்தில், ' மனிதர்களே உங்கள் இறைவனிடமிருந்து நிச்சயமாக ஒரு நல்லுபதேசம் வந்திருக்கின்றது. உங்கள் உள்ளங்களிலுள்ள நோய்களைக் குணப்படுத்தக்கூடியதாகும். (அது) நம்பிக்கை கொண்டவர்களுக்கு நேர்வழிகாட்டியாகவும் ஓர் அருளாகவும் இருக்கின்றது. (இதனை) அல்லாஹ்வின் அருளாகவும் அன்பாகவும் (பாவித்து) இதற்காக அவர்கள் சந்தோஷமடையட்டும். இது அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் (மற்ற பொருட்கள்) அனைத்தையும் விட மிக்க மேலானது என்றும் (நபியே) நீங்கள் கூறுங்கள்.
(அல் குர்ஆன் 10: 57, 58)

இந்த வசனங்களுக்கு இஸ்லாமிய அறிஞர்கள் விளக்கமளிக்கும் போது இந்த இடத்தில் வருகின்ற 'றஹ்மத்' என்ற சொல் அல்குர்ஆனையே குறிக்கின்றது என்ற கருத்தில் விளக்கமளித்துள்ளார்கள். அல்குர்ஆனது நாம் அறியாத விடயங்களை எல்லாம் எமக்கு கற்றுத் தருகின்றது. எமக்கு சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டுகின்றது. இதன் மூலம் எம்மை நரகை விட்டும் பாதுகாக்கின்றது. அதன் விளைவாக அல்லாஹ்வின் மாபெரும் றஹ்மத்தாக அல் குர்ஆன் விளங்குகின்றது.

அதேநேரம் அல் குர்ஆனின் 'அஸ்ஸுமர்' என்ற அத்தியாயத்தின் 53 வது வசனத்தில் வருகின்ற றஹ்மத் என்ற சொல் பாவமன்னிப்பு, தவ்பா ஏற்றுக் கொள்ளப்படுதல் என்ற அர்த்தங்களில் இடம்பெற்றுள்ளது. ஒரு மனிதன் தவறுகள் செய்து விட்டு இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருகின்ற போது அல்லாஹ் அவனது றஹ்மத்தினால் அவற்றை மன்னித்து பாவங்களை அழித்து விடுகிறான்.

மேலும் அல் குர்ஆனில் இடம்பெறும் யூஸுப் (அலை) அவர்கள் தொடர்பான அத்தியாயத்தில், 'அன்றி நான் (தவறுகளிலிருந்து) தூய்மையானவன்' என்று என்னை பரிசுத்தம் செய்துகொள்ளவில்லை. ஏனென்றால் என் இறைவன் அருள் புரிந்தாலன்றி மனிதனின் சரீர இச்சை, பாவம் செய்யும் படி தூண்டக்கூடியதாகவே இருக்கின்றது. நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாவும் இருக்கின்றான் (என்றார்).
(அல் குர்ஆன் 12:53)

இதன்படி பாவங்கள் செய்வதிலிருந்து மனிதன் பாதுகாக்கப்படுவதும் அல்லாஹ்வின் றஹ்மத்தில் உள்ள விடயமாகும்.

மேலும் அல் குர்ஆனின் 'மர்யம்' என்ற அத்தியாயத்தில், '(நபியே) உங்களது இறைவன் தன் அடியார் ஸக்கரிய்யாவுக்கு புரிந்த அருள் (இங்கு) கூறப்படுகின்றது'
(அல் குர்ஆன் 19:02)

இந்த வசனம் ஸகரிய்யா (அலை) அவர்கள் முதியவராக இருந்தும் பிள்ளை கிடைக்காத சந்தர்ப்பத்தில் இறைவனிடம் தனக்கு ஒரு பிள்ளையைத் தருமாறு பிரார்த்தனை செய்தார்கள். அந்த சந்தர்ப்பத்தில் யஹ்யா (அலை) அவர்களை அன்பளிப்பாக வழங்கி அவரது பிரார்த்தனையை அல்லாஹ் நிறைவேற்றினான். எனவே நாம் கேட்கின்ற பிரார்த்தனை அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதும் அல்லாஹ்வுடைய றஹ்மதில் உள்ளதாகும்.

அத்தோடு அல் குர்ஆனின் சூரா பகராவில் 218 வது வசனத்தில் வருகின்ற றஹ்மத் என்ற பதம் சுவர்க்கம், அல்லாஹ்வின் கருணையை எதிர்பார்த்தல் என்ற கருத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு அல்லாஹ்வின் ரஹ்மத் தொடர்பில் அல் குர்ஆனில் பல வசனங்கள் வந்துள்ளன.

அவை பல்வேறுபட்ட அர்த்தங்களில் இடம்பெற்றிருப்பதை அவதானிக்கலாம். இவ்வர்த்தங்கள் யாவற்றையும் ஒன்று சேர்த்து நோக்கும் போது அல்லாஹ்வுடைய றஹ்மத் என்பது அவனிடமிருந்து கிடைக்கின்ற எல்லாவிதமான சிறப்புகள், அபிவிருத்திகளையும் குறிக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். ஆகவே அல்லாஹ்வுடைய றஹ்மதை அடைந்துகொள்வதற்காக முயற்சிப்போம்.


Add new comment

Or log in with...