உலக செல்வந்தர் பட்டியல்: பில் கேட்ஸை பின்தள்ளி இலோன் மஸ்க் 2ஆம் இடம் | தினகரன்

உலக செல்வந்தர் பட்டியல்: பில் கேட்ஸை பின்தள்ளி இலோன் மஸ்க் 2ஆம் இடம்

உலகின் மிகப் பெரிய செல்வந்தர் பட்டியலில் பில் கேட்ஸைப் பின்னுக்குத்தள்ளி தொழில்நுட்பத் தொழில்முனைவர் இலோன் மஸ்க் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

மஸ்க்கின் டெஸ்லா மின்சாரக் கார் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்த பின்னர், அவரின் மொத்தச் சொத்து மதிப்பு 128 பில்லியன் டொலர் ஆனது. தற்போது உலகின் மிகப் பெரிய செல்வந்தர் என்ற பதவியைப் பெற்றுள்ளவர் அமசோன் நிறுவனத்தின் தோற்றுவிப்பாளர் ஜெப் பெஸோஸ் ஆவார்.

எஸ் அன்ட் பீ 500 பங்குச் சந்தைக் குறியீட்டில் டெஸ்லா பங்குகள் சேர்க்கப்பட்டதும், அதன் பங்கு விலை அதிகரித்தது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு 500 பில்லியனைத் தாண்டியுள்ளது. மற்ற கார் நிறுவனங்களைவிடக் குறைவான எண்ணிக்கையில் வாகனங்களைத் தயாரித்தாலும் டெஸ்லா அதிக மதிப்பைக் கொண்டுள்ளது.

கேட்ஸின் மொத்தச் சொத்து மதிப்பு 127.7 பில்லியன் டொலர். அற நிறுவனங்களுக்கு அவர் பெரிய அளவில் நன்கொடைகள் கொடுத்ததால் அவரின் சொத்து மதிப்பு சற்றுக் குறைந்தது. 2017 வரை அவர் உலகின் மிகப் பெரிய செல்வந்தர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார்.


Add new comment

Or log in with...