எல்.பி.எல் கிரிக்கெட் திருவிழா நாளை கோலாகலமாக ஆரம்பம்

எல்லோரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்த லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு இருபது அங்குரார்ப்பண தொடர் இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் நாளை ஆரம்பமாகின்றது.

லங்கா ப்ரீமியர் லீக் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற பெரும் கேள்விகளுக்கு அப்பால் போட்டித் தொடர் நடைபெறுவது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

நவம்பர் 26ம் திகதி தொடக்கம் டிசம்பர் 16ம் திகதிவரை லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளும் ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிது.

ஆரம்பத்தில் இப்போட்டித் தொடர் சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டு மைதானம், கண்டி பல்லேகல விளையாட்டு மைதானம் மற்றும் தம்புள்ள ரங்கிரி விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் ரங்கிரி தம்புள்ள மைதானம் நீக்கப்பட்டு ஏனைய இரண்டு மைதானங்களில் போட்டி நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் இறுதியாக இடம் பெற்ற பேச்சுவார்த்தைகளில் சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச மைதானத்தில் மாத்திரம் போட்டிகள் நடைபெறும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிப்பட்டது.

அந்த வகையில் லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் ஆரம்ப நிகழ்வு நாளை 26ம் திகதி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் 5 அணிகளின் பங்கெடுப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது. இதில், கொழும்பு கிங்ஸ், தம்புள்ளை வைகிங்ஸ், காலி க்ளேடியேட்டர்ஸ், யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் என அணிகள் பெயரிடப்பட்டுள்ளன.

மொத்தமாக 23 போட்டிகள் இடம்பெறவுள்ளது. இறுதிப்போட்டி டிசம்பர் 16ம் திகதி சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச மைதானத்தில் நடைபெறும்.

லங்கா பிரீமியர் லீக் 2020 உலக விளையாட்டுத் துறையில் இலங்கையை பலப்படுத்தும் ஒரு போட்டியாகவும் உள்ளதுடன், இப்போட்டியானது இப்போதே உள்ளூர் மற்றும் சர்வதேச விளையாட்டு பார்வையாளர்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வீரர்கள், பார்வையாளர்கள் மற்றும் நாட்டின் நீண்டகால நலனை கருத்திற்கொண்டு விளையாட்டு அமைச்சு, இலங்கை கிரிக்கெட் மற்றும் எல்பிஎல் 2020 அமைப்பாளர்கள் ஒன்றிணைந்து எல்பிஎல் 2020 போட்டியை நாளை 26 முதல் டிசம்பர் 16 வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தனர்.

கொரோனா உலகளாவிய தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விளையாட்டு சுற்றுலாத் துறையை வலுப்படுத்தவும், இலங்கையை உலக வரைபடத்தில் விளையாட்டு மூலம் வலுவான நாடாக உயர்த்தவும் இந்த போட்டி ஒரு வலுவான அடித்தளமாக அமையும்.

சுகாதாரத்துறையின் ஒப்புதலுடனும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் அனுமதியுடன் இப்போட்டித் தொடர் நடை பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இளைஞர் விவகார விளையா ட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் ஒருங்கினைப்பிலும், ஆலோசனையிலும் இப்போட்டித் தொடருக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இப்போட்டித் தொடர் இடம்பெறுவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.

இதேவேளை, இச்சுற்றுத் தொடரில் பங்கேற்கம் வெளிநாட்டு வீரா்களின் தனிமைப்படுத்தல் காலம் 14 நாட்களில் இருந்து 7 நாட்களுக்கு குறைக்கப்பட்டிருந்தது. குறித்த ஏழு நாட்களும் நிறைவுற்றதன் பின்னர் உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் பயிற்சிகளை ஆரம்பிந்திருந்தனர். மேலும் குறித்த தொடரின் ஒளிபரப்பாளர்கள் அனைவரும் கட்டாய 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

அத்தோடு போட்டிகளை மைதானத்தில் பார்வையிடுவதற்காக இரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்ப ட்டுள்ள நிலையில் போட்டிகள் அனைத்தும் இந்திய தொலைக்காட்டி நிறுவனமான Sony Pictures Networks நிறுவனத்தின் விளையாட்டு அலைவரிசையில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளன. இலங்கையில் இப்போட்டிகளை ஒளிபரப்புச் செய்வதற்கான அனுமதியை ஐ.ரி.என் நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது.

போட்டித் தொடரில் விளையாடுகின்ற அணி வீரா்களின் பெயர்கள் ஆரம்பத்தில் வெளியிடப்பட்டிருந்த போதிலும் பிரபலமான வெளிநாட்டு வீரா்கள் பலர் தம்மால் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது என்று இறுதிக்கட்டத்தில் அறிவித்திருந்ததினால் பல நெருக்கடிகளை அணி நிர்வாகங்கள் எதிர்நோக்கிய போதிலும், அந்த வீரா்களுக்குப் பதிலாக புதிய வீரா்கள் பலரும் இன்று இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அதேபோன்று கொழும்பு கிங்ஸ் மற்றும் தம்புள்ள வைகிங்ஸ் அணிகளின் பயிற்றுவிப்பாளர்களும் இறுதிக்கட்டத்தில் தனிப்பட்ட காரணங்களிற்காக விலகிய போதிலும் அவர்களுக்குப் பதிலாகவும் பதிய பயிற்றுவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அங்குரார்ப்பண லங்கா பிறிமியர் லீக் சுற்றுப்போட்டித் தொடர் பல தடைகளையும், சவால்களையும், நெருக்கடிகளையும் சந்தித்து இன்று வெற்றிகரமாக ஆரம்பமாவது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கும், நாட்டுக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும்.

கொழும்பு கிங்ஸ் அணியின் தலைவராக அஞ்சலோ மெத்தியுஸ், கண்டி டஸ்கர்ஸ் அணியின் தலைவராக குசால் ஜனீத் பெரேரா, ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணித் தலைவராக திஸார பெரேரா, காலி க்ளேடியேட்டர்ஸ் அணியின் தலைவராக சஹீட் அப்ரிடி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தம்புள்ள வைகிங்ஸ் அணியின் தலைவர் இந்த நிமிடம் வரை நியமிக்கப்படவில்லை.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரா் திலிண கண்டம்பியும்,காலி க்ளேடியேட்டர்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும்,விக்கட் காப்பாளருமான மொயின் காண் நியமிக்கப்பட்டுள்ளார்.

கண்டி டஸ்கர்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஹஸான் திலகரத்னவும், கொழும்பு கிங்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக தென்ஆபிரிக்க கிரிக்கெட் அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரா் ஹேர்சல் கிப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தம்புள்ள வைகிங்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரா் ஒவைஸ் சாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, லங்கா பிறிமியர் லீக் சுற்றுப்போட்டிக்கான கிரிக்கெட் வர்ணனையாளர்களாக ரஸல் ஆர்னோல்ட், ரொசான் அபேசிங்க, அமீர் சொகைல்,டெரன் கங்கா,மைக் ஹைஸ்மென்,மிக்மி ஆர்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கொழும்பு கிங்ஸ் அணியின் விபரம்

அஞ்சலோ மெத்தியுஸ் , அண்ட்ரோ ரஸல்ஸ், , மன்பிரிட் சிங் கோணி, இசுறு உதான, தினேஸ் சந்திமால்,அமில அப்பொன்சோ,ரவிந்தர்பால் சிங்,அசான் பிரியஞ்சன், துஸ்மந்த சமீர, ஜெப்ரி வெண்டர்சே,திக்ஸிலா டி சில்வா, தரிந்து கௌசால், லஹிறு உதார, ஹிமேஸ் ராமநாயக்க, காலன பெரேரா, தரிந்து ரட்நாயக்க, நவோட் பரணவிதான, ஹைஸ் அஹமட்,கரீம் கான் சாதீக், லூரி இவன்ஸ்,டேனியல் வெல் டுறும்மன்ட்

தம்புள்ளை வைகிங்ஸ் அணியின் விபரம்

தசுன் சாணக்க, சமீட் படேல், நிரோசன் திக்வல்ல, லஹிறு குமார, ஒசாத பெர்னாண்டோ, கசுன் ராஜித,போல் ஸ்ட்ரலிங்,தஹிறு மதுசங்க, உபுல் தரங்க, அஞ்சலோ பெரேரா, ரமேஸ் மெண்டிஸ், புலின தரங்க, அசான் பண்டார,டில்சான் மதுசங்க,சசிந்து கொலம்பகே, , சமியுல்லா சின்வாரி, அன்வர் அலி,சுதீப் தியாகி,அப்தாப் ஆலம்

காலி க்ளேடியேட்டர்ஸ் அணியின் விபரம்

சஹிட் அப்ரிடி, மொகமட் அமீர்,ஹஸ்ரதுல் ஹசாய்,தனுஸ்க குணதிலக்க,பானுக ராஜபக்ஸ, அகில தனஞ்சய,மிலிந்த சிறிவர்த்தன,,அஸாம் கான், லக்ஸான் சந்தகன், சிஹான் ஜெயசூரிய,அசித பெர்னாண்டோ,நுவான் துஸார, முகம்மட் சிராஸ்,தனஞ்ச லக்ஸான், சானக்க றுவன்சிறி,சகன் ஆராச்சி,துவிந்து திலகரத்ன,சட்விக் வோல்டன்,அஸ்கான் அலி, அப்துல் நஸீர்,வக்காஸ் மக்சூட்

யாழ்ப்பாணம் ஸ்டாளியன்ஸ் அணியின் விபரம்

திஸார பெரேரா, வனிந்து ஹசரங்க, சுகைப் மலீக்,உஸ்மான் சின்வாரி,அவிஸ்க பெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா, சுரங்க லக்மால்,பினுர பெர்னாண்டோ, மினோட் பானுக, சதுரங்க டி சில்வா,மகேஸ் திக்சன,சரித் அசலங்க,நுவிந்து பெர்னாண்டோ,கனகரட்னம் கபீல்ராஜ்,தெய்வேந்திரம் டினோசன்,விஜயகாந் வியாஸ்காந், ஜோன்ஸன் சார்ல்ஸ்,கைல் அபோர்ட்,டொம் மூர்ஸ்,டுவான் ஒலிவர்,பிரபாத் ஜெயசூரிய,செபஸ்தியன்பிள்ளை விஜயராஜ்

கண்டி டஸ்கர்ஸ் அணியின் விபரம்

குசால் ஜனீத் பெரேரா, பிரண்டன் டைலர், குசால் மெண்டிஸ், நுவான் பிரதீப், சீகுக பிரசன்ன,அசல குணரத்ன,நவீன் உல் ஹக், கமிந்து மெண்டிஸ்,டில்றுவன் பெரேரா,பியோமல் பெரேரா,கவிஸ்க அஞ்சுல,லசித் எம்புல்தெனிய,லஹிறு சமரகோன்,நிசான் மதுசங்க,விஸ்வ பெர்ணான்டோ,சமிக்க எதிரிசிங்க,இசான் ஜெயரத்ன, இர்பான் பதான்,ரஹ்மானுல்லா குர்பாஸ்,முனாப் படேல்,சுகைல் தன்வீர்,கெவின் கொட்டிக்கொட

(அட்டாளைச்சேனை விசேட நிருபர்)


Add new comment

Or log in with...