பெண் ஊழியரை தாக்கிய RDA பொறியியலாளர் கைது

அலுவலகத்தில் கடமையாற்றும் பெண் ஊழியரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உடுகம்பொல அலுவலகத்தின் பிரதான பொறியியலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகாமைத்துவ உதவியாளரான குறித்த பெண்ணை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் அதற்கு கண்டனம் வெளியிட்டிருந்தனர்.

பெண் ஒருவர் அவரது கையடக்கத் தொலைபேசியில் எடுத்துள்ள குறித்த வீடியோ உரையாடல்,

பெண்: சேர் நான் போகத்தான் போகிறேன். உங்களால் நான் உள ரீதியான பிர்ச்சினையில் உள்ளேன்.
பொறியியலாளர்: அப்படியென்றால் போ.
பெண்:  ஆம் நான் போகத்தான் போகிறேன்.
நான் அனைத்தையம் Record செய்து கொண்டு போகப்போகிறேன்.
பொறியியலாளர்: Record பண்ண வேண்டாம். நீ செய்த திருட்டு வேலைகள் எனக்கு தெரியும். நீ இங்கிருந்து போ.
பெண்:  நான் திருட்டு வேலை செய்தால் காட்டுங்கள் சேர்.
(ஆசனத்தில் இருந்து எழுந்து வந்த பொறியியலாளர் குறித்த பெண்ணை தாக்குகிறார்)
பெண்: சேர்.... எனக்கு அடியுங்கள்...
எனக்கு அடிக்கிறார்... (அழுகிறார்)
ஊழியர் 1: சேர் அடிக்காதீர்கள். பெண்களுக்கு அடிக்காதீர்கள்.
பெண்:  நம்பரொன்றை கேட்டு ஏன் என்னை வதைக்கிறீர்கள்?
ஊழியர் 1: அவர் இவளை தாக்கினார் பாருங்கள்..
பெண்:  வந்தவுடன் நம்பர் ஒன்றை கேட்டு ஏன் என்னை அடித்தீர்கள்
பொறியியலாளர்: இங்கிருந்து வெளியேறு
பெண்: நான் மனித உரிமை திணைக்களத்திற்கு போகப் போகிறேன்...
பொறியியலாளர்: என்னை Record பண்ண வராதே
(பெண் வெளியில் வருகிறார்)
பெண்: வந்தவுடன் அறக்கப் பறக்க நம்பரை கேட்டார். நம்பரை கொடுக்க 5 நிமிடங்கள் சென்றதற்காக ஏன் இவ்வாறு செய்கிறார்...
இவ்வாறான அசிங்கமான ஒருவரை ஒரு போதும் கண்டதில்லை..
நீங்கள் பார்த்தீர்கள் தானே வந்தவுடன் நம்பர் ஒன்றை கேட்டார். அந்த நம்பரை ரசிக்க மஹத்தயாவிடமிருந்து பெற்று கொடுக்கும் போது என்னை அடிக்கிறார்.
இவ்வாறு வேலை செய்ய முடியுமா தரங்க மஹத்தயா...
இதற்கு 5 நிமிடங்களும் செல்லவிலலை
நான் அதை Record செய்தேன்...

இச்சம்பவம் தொடர்பில், இன்று (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இச்சம்பவத்தை அரசாங்கம் கண்டிப்பதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்திருந்தார்.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் தனது ட்விற்றர் கணக்கில் கருத்து வெளியிட்டிருந்த நாமல் ராஜபக்‌ஷ,

இச்செயற்பாட்டை கண்டிக்கிறேன். வேலைத்தலங்களில் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள எவருக்கும் உரிமை இல்லை. வேலைத்தலங்களில் அங்கீகரிக்கப்பட முடியாத வகையில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...