பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நடத்த தடை!

பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நடத்த தடை!-Remembering-Maveerar-in-Public-Places-Prohibited-Jaffna-Magistrate-Court

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு

- பருத்தித்துறை நீதிமன்றின் கட்டளை நாளை
- மல்லாகம் நீதிமன்றில் அனுமதி

மாவீரர் தினம் அனுஷ்டிக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று (25) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன் வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்ட 37 பிரதிவாதிகளும், பொது மக்களை ஒன்று திரட்டி மாவீரர் தினம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் 37 பேரிற்கு எதிராக, மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இந்த கட்டளையை வழங்கியுள்ளது.

முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி ஊர்காவற்துறை நீதிமன்றங்கள் குறித்த தடையுத்தரவை விதித்த சூழ்நிலையில், கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை 106ஆம் பிரிவின் பொதுத் தொல்லை என்ற வியாக்கியனத்தின் கீழ் இந்த விண்ணப்பங்களை பொலிஸார் தாக்கல் செய்திருந்தனர்.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் நினைவேந்லை நடத்துவதற்கு தடை கேட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ. சுமந்திரன், சட்டத்தரணிகள் வி. மணிவண்ணன், க. சுகாஷ், மாநகர சபை உறுப்பினர்கள் வரதாசா பார்த்திபன், மயூரன் உள்ளிட்ட 37 பேருக்கு எதிராக தடைக் கட்டளை வழங்குமாறும் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து உயிரிழந்த உறுப்பினர்களை நினைகூருவதற்காக நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

குறித்த, மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் கட்டளை வழங்கவேண்டும் என்று பொலிஸார் விண்ணப்பத்தில் கேட்டிருந்தனர்.

அத்துடன் கொவிட்-19 தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தையும் பொலிஸார் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

அதனடிப்படையில் வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன்போது வழக்கின் பிரதிவாதிகளான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், கே.சுகாஷ் உள்ளிட்டோர் முன்னிலையாகி தமது ஆட்சேபனையை முன்வைத்தனர்.

தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, ஏனைய பிரதிவாதிகள் சார்பில் மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா முன்னிலையாகி நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

இந்த நிலையில் வழக்கு இன்றுவரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று (25) முற்பகல் 11.00 மணிக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ. பீற்றர் போல் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

வழக்குத் தொடுநரான பொலிஸார் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மூத்த பிரதி மன்றாடியார் அதிபதிகள் பிரபாகரன் குமாரரட்ணம், ஹரிப்பிரியா ஜயசுந்தர மற்றும் மூத்த அரச சட்டவாதி ஜனக பண்டார ஆகியோர் முன்னிலையாகினர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து உயிரிழந்தவர்களை நினைவுகூர அனுமதியளிக்க முடியாது என்று தமது சமர்ப்பணத்தை முன்வைத்தனர்.

பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, மற்றும் பல சட்டத்தரணி ஆகியோர் தமது சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தார்கள்.

போரில் உயிரிழந்த வீரர்கள் உறவுகளை நினைவேந்துவது மரபு என பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் சமர்ப்பணம் செய்தனர்.

இருதரப்பு சமர்ப்பணங்களும் சுமார் 3 மணித்தியாலங்கள் இடம்பெற்றது.

இந்த நிலையில் வழக்கின் கட்டளையை இன்று மாலை 3 மணிக்கு நீதிமன்றம் வழங்கியது.

அதற்கமைய, பிரதிவாதிகள் 37 பேரும் பொது மக்களை ஒன்று திரட்டி மாவீரர் தின நிகழ்வுகளை நடத்தக்கூடாது என்ற உத்தரவை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்த அனுமதியுங்கள் என்ற மனுவை நிராகரித்து, நியாயாதிக்கத்திற்குள் இந்த வழக்கை விசாரணை செய்ய முடியாது என்று தள்ளுபடி செய்துள்ளது.

ஆயினும், மல்லாகம் நீதிமன்றம் வைரஸ் தொற்று ஏற்படாதவாறு சமூக விதிகளை பின்பற்றி சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப அனுஷ்டிக்கலாம் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது.

வழக்கின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிவாஜிலிங்கம்,

நாங்கள் 10 கட்சிகள் 10 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இந்த பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் எவ்வாறு நினைவேந்தல் செய்ய முடியும், எவ்வாறு எமது இனம் எதிர் கொள்ள வேண்டும். எவ்வாறு நினைவேந்தல் செய்ய முடியும் என்ற அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் வேண்டுகோள்களையும் அரசுக்கான எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று எமது கட்சி பிரதிநிதிகள் ஒன்றுகூடி தீர்மானிப்போம்.

நீதிமன்ற கட்டளைகளினால், எமது மது போராட்டம் எமது பயணம் தடைப்படும் என கருதினால், வரலாறு அது அவர்களுக்கு புரிய வைக்கும் என்றார்.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா, யாழ். விசேட நிருபர் - மயூரப்பிரியன்)


பருத்தித்துறை நீதிமன்றின் கட்டளை நாளை

பருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரால் மீளவும் விண்ணப்பங்கள் செய்யப்பட்ட நிலையில் கட்டளைக்காக நாளைய தினம் திகதியிடப்பட்டுள்ளன.

இன்று முற்பகல் தாக்கல் செய்யப்பட்ட இந்த விண்ணப்பங்கள் பிற்பகல் மன்றில் அழைக்கப்பட்ட நிலையில் , கட்டளைக்காக நாளைய தினம் திகதியிடப்பட்டது.

இந்த விண்ணப்பங்கள் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி ஆகிய 3 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பிரதிவாதிகளாக முன்னர் தாக்கல் செய்யப்பட்டு மீளப்பெறப்பட்ட விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டவர்களின் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதேவேளை, முன்னதாக 3 விண்ணப்பங்கள் கடந்த வியாழக்கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மீளப்பெறப்பட்டிருந்தன.என்பது குறிப்பிடத்தக்கது

(யாழ். விசேட நிருபர் - மயூரப்பிரியன்)


Add new comment

Or log in with...