கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்கத் தீர்மானம் | தினகரன்

கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்கத் தீர்மானம்

கிளிநொச்சியில் இதுவரை காலமும் காணப்பட்ட கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாகப் பிரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாகாண மற்றும் மாவட்ட உயரதிகாரிகள், ஓய்வுப்பெற்ற கல்வி அதிகாரிகள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட ஆய்வு கூட்டத்தின் போதே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பளை என நான்கு கோட்டக் கல்வி பிரிவுகளாகவும் கிளிநொச்சி கல்வி வலயம் என ஒரு கல்வி வலயமாக 104 பாடசாலைகளுடன் 32028 மாணவர்கள் 2035 ஆசிரியர்கள் 28 உயர்தர வகுப்புக்களை கொண்ட பாடசாலைகள் என இயங்கி வருகிறது.

எனவே கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதன் முன்னேற்பாடாக மாகாண, மாவட்ட மட்ட உயரதிகாரிகள் இத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

அதனடிப்படையில் கிளிநொச்சி கரைச்சி கல்வி கோட்டத்தை தனியாக ஒரு வலயமாகவும், பளை, பூநகரி, கண்டாவளை ஆகிய மூன்று கல்விக் கோட்டங்களையும் இணைத்து ஒரு வலயமாகவும் உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக மாணவர்களின் எண்ணிக்கையினை அடிப்படையாக கொண்டு இவ்விரண்டு வலயங்கள் உருவாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கரைச்சி கல்வி கோட்டத்தில் 18323 மாணவர்களும், ஏனைய மூன்று கோட்டங்களிலும் 13705 மாணவர்களும் தற்போதுள்ளனர். மேலும் பளை, பூநகரி, கண்டாவளை ஆகியவற்றின் மையப்பகுதியான பரந்தன் பகுதியில் புதிய வலயக் கல்வி அலுவலகம் ஒன்றை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி குறூப் நிருபர்


Add new comment

Or log in with...