புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சுகளுக்கு விவாதம்

நிதி ஒதுக்கீடுகள் இருக்குமா? அநுர குமார எம்.பி சபையில் கேள்வி

புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சுக்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் குழுநிலை விவாதம் நடத்தவோ நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? என்பதை அரசு அறிவிக்க வேண்டுமென ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், பல தடவைகள் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியுள்ளார்.20 ஆவது திருத்தத்திற்கு முன்னரே அவர் பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்டார். பாராளுமன்ற அனுமதியின்றி அரச நிதியை செலவிட்டார்.கடன் எல்லை தொடர்பில் பாராளுமன்ற அனுமதி பெற வேண்டும்.69,000 கோடிக்கு மேல் கடன் பெறப்பட்டுள்ளது.

அரசியல் கலாசாரத்தை மாற்றுவதாக அவர் உறுதியளித்தாலும் அவ்வாறு நடக்கவில்லை.உயர் பதவிகளுக்கு உறவினர்களை நியமிப்பதில்லை என்று கூறினாலும் அது மீறப்பட்டுள்ளது. குழுநிலை விவாதம் நடைபெறும் நிலையில் புதிய அமைச்சுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அந்த அமைச்சுக்கள் குறித்தும் விவாதம் நடைபெறுமா?அவற்றுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? வர்த்தமானியில் அறிவிக்கப்படாத நிறுவனங்கள் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.கடந்த காலத்தில் பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதியாக இருந்த போது பிரதி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஜனாதிபதி தனக்குக் கீழ் அமைச்சுக்களை கொண்டு வந்தாலும் பாராளுமன்றத்தில் பதில் வழங்க பிரதி அமைச்சர் நியமிக்கப்படவில்லை.

புதிதாக தொழில்நுட்ப அமைச்சு 20 ஆம் திகதி உருவாக்கப்பட்டுள்ளது.மக்கள் பாதுகாப்பிற்கும் அமைச்சர் இல்லாததால் அதுவும் ஜனாதிபதியின் கீழ் வருகிறது.பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூறாத ஜனாதிபதியின் கீழ் 32 நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஆஸ்பத்திரியில் இறக்கும் ஒருவருக்கு கொவிட் தொற்றியிருப்பது உறுதியானால் சடலம் உறவினர்களுக்கு வழங்கப்படாமல் ஆஸ்பத்திரியினாலே தகனம் செய்யப்படுகிறது. சவப்பெட்டிக்கு 20 ஆயிரம் ரூபா பெறப்படுகிறது. ஹம்பாந்தோட்டை 400 ஏக்கர் சீன தொழிற்சாலையில் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 33 பேரை கைது செய்துள்ளது.இவர்கள் சிறுபதவி வகிப்போராகும். இவர்கள் தான் நாட்டிலுள்ள ஊழல்பேர்வழிகளா? ஆணைக்குழுவினால் 08 பேருக்கு வழக்கு தொடரப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...