நல்லாட்சியில் மாவீரர் நினைவேந்தல் ரணில் TNAக்கு வழங்கிய நன்றிக்கடன்

- அதுவொரு படுமுட்டாள்தனமானது என்கிறார் தினேஷ் குணவர்தன
- எமது அரசில் ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது

எமது நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். எனவே, இங்கு அவர்களை நினைவுகூர அனுமதி இல்லை.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை வெளிநாடுகள் தடை செய்திருந்தாலும் அங்கு வாழும் தமிழர்கள் மாவீரர் நாளை பகிரங்கமாக நினைவுகூருகின்றார்கள் என்பதற்காக இங்கு நாம் அனுமதி வழங்க முடியாது. இங்கு மாவீரர் நாள் நிகழ்வை நடத்த கடந்த நல்லாட்சியில் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை படுமுட்டாள்தனமாகும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அது ஆட்சியில் இருக்கும் தம்மைக் காப்பாற்றி வந்தமைக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ரணில் அரசு வழங்கிய நன்றிக் கடனாகும். நாட்டின் சட்டத்தை மீறி நீதிமன்றத் தடையுத்தரவுகளை மீறி மரணித்த விடுதலைப்புலிகளை நினைவு கூருவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் நிகழ்வை இலங்கையில் நடத்த நாம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம். தடைகளை மீறித் தமிழ் மக்கள் மாவீரர்களை இங்கு நினைவுகூர முடியாது. அவர்கள் விரும்பினால் வெளிநாடுகளுக்குச் சென்று மாவீரர்களைச் சுதந்திரமாக நினைவேந்தலாம். அங்கு அவர்களுக்குத் தடைகள் இருக்காது என தெரிவித்தார். இலங்கையிலிருந்து தப்பிச் சென்று வெளிநாடுகளில் அடைக்கலம் கோரி அங்கு வாழும் சில முன்னாள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோரின் தாளத்துக்கு இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் மக்களும் ஆடுகின்றார்கள்.


Add new comment

Or log in with...