தோல்வியை ஒப்புக்கொள்ள ட்ரம்ப் கூட்டணியில் அழுத்தம் அதிகரிப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனிடம் சந்தித்த தோல்வியை மாற்றும் முயற்சியை கைவிடும்படி பதவியில் உள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நெருங்கிய கூட்டாளி ஒருவரும் அவருக்கு வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் சட்டக் குழு ‘நாட்டை வெட்கிக்கச் செய்கிறது’ என்று நியூ ஜெர்சி முன்னாள் ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்ப் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து வருவதோடு, ஆதாரமின்றி தேர்தல் மோசடிக் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார். இது தொடர்பிலான டிரம்பின் சட்ட முயற்சிகளுக்கு அவரின் குடியரசு கட்சியின் பெரும்பான்மையினர் ஆதரவு அளித்து வருகின்றபோதும் அது தொடர்பிலான நிலைப்பாட்டில் இருந்து விலகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பென்சில்வேனியாவில் மில்லியன் கணக்கான மின்னஞ்சல் வாக்குகளை செல்லுபடியாக ஆக்கக் கோரும் ட்ரம்ப் பிரசாரக் குழுவின் வழக்கை நீதிமன்றம் தள்ளிவைத்தது அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக இருந்து டிரம்புக்கு ஆளுநர் என்ற வகையில் முதலாமவராக ஆதரவை அளித்த கிறிஸ்டி கூறியதாவது,

‘நான் ஜனாதிபதியின் ஆதரவாளராக உள்ளோன். அவருக்காக நான் இரண்டு முறை வாக்களித்தேன். ஆனால் தேர்தல் என்று வரும்போது பல சிக்கல்கள் இருக்கும். நாம் நடக்காத ஒன்றை தொடர்ந்து கூறிக்கொண்டிருக்க முடியாது’ என்றார்.

மேலும் சில குடியரசுக் கட்சியினரும் ட்ரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ‘தேர்தல் முடிவை மாற்றும் ட்ரம்ப் முகாமின் முயற்சிகள் நாட்டை கேலிகூத்தாக்குகிறது’ என்று மெரிலாண்ட் ஆளுநர் லர்ரி ஹோகன் சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 270 தேர்தல் சபைகளை வெல்ல வேண்டிய நிலையில் ஜனநாயகக் கட்சியின் பைடன் 306 இடங்களை வென்றிருப்பது உறுதியாகியுள்ளதோடு டிரம்பினால் 232 இடங்களையே வெல்ல முடிந்துள்ளது.

ட்ரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ளாதபோதும் வெள்ளை மாளிகை செல்வதற்கான செயற்பாடுகளில் பைடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

பைடன் தனது அமைச்சரவையை இன்று வெளியிட திட்டமிட்டுள்ளார். அதில் அனுபவம் மிக்க இராஜதந்திரியான 58 வயது அன்டோனி பிளின்கன் இராஜாங்க செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி பதவி ஏற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...