இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சவூதிக்கு இரகசியப் பயணம்

முடிக்குரிய இளவரசர், பொம்பியோ உடன் சந்திப்பு

இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு கடந்த ஞாயிற்றுக்கிழமை சவூதி அரேபியாவுக்கு பயணித்து அந்நாட்டு முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மான் மற்றும் அங்கிருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவை சந்தித்திருப்பதாக இஸ்ரேலிய அரச வானொலி மற்றும் இராணுவ வானொலி குறிப்பிட்டுள்ளன.

நெதன்யாகு அலுவலகம் மற்றும் ஜெரூசலத்தில் இருக்கும் அமெரிக்கத் தூதரகம் இந்த தகவலை உடன் உறுதி செய்யவில்லை.

எனினும் பின் சல்மான் மற்றும் பொம்பியோ கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்திப்பதற்கு ஏற்பாடான சவூதி அரேபியாவின் செங்கடல் துறைமுகப் பகுதிக்கு டெல் அவிவில் இருந்து குறுகிய பயணமாக வர்த்தக விமானம் ஒன்று சென்றிருக்கும் பயணப் பாதையை இஸ்ரேலின் ஹாரெட்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

அந்த விமானம் இரண்டு மணி நேரம் சவூதியில் தங்கி இருந்துவிட்டு நள்ளிரவுக்கு பின் அரை மணி நேரத்தில் மீண்டும் இஸ்ரேலை நோக்கி புறப்பட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைன் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படத்திய நிலையில் ஏனைய வளைகுடா நாடுகளும் அதனை பின்தொடரச் செய்யும் முயற்சியில் பொம்பியோ ஈடுபட்டுள்ளார். ஈரானுக்கு எதிராக பிராந்தியத்தில் பாரிய கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.

எனினும் இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவை ஏற்படுத்துவதை சவூதி இதுவரை மறுத்து வருகிறது. அதற்கு பலஸ்தீன தேசத்தின் அபிலாஷை முதலில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அது கூறி வருகிறது. எனினும் இஸ்ரேலிய விமானங்களுக்கு சவூதி தனது வான்பரப்பை முதல் முறை திறந்து விட்டமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...