சூறாவளியை எதிர்கொள்ள தயார் நிலையில் அனர்த்த முகாமைத்துவ பிரிவு | தினகரன்

சூறாவளியை எதிர்கொள்ள தயார் நிலையில் அனர்த்த முகாமைத்துவ பிரிவு

யாழ். அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தினால் யாழில் ஏதாவது அனர்த்தம் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளதென யாழ்.மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

தாழமுக்கம் காரணமாக விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இன்று (நேற்று) தொடக்கம் 24, 25 ஆம் திகதி வரை அவதானமாக மீனவர்களை கடலுக்குச் செல்லும் படியும் அதே நேரத்தில் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் சற்று உக்கிரமடைந்து புயலாக மாறக்கூடிய நிலை காணப்படுவதனால் அவதானமாக செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே மீனவர்கள் மிக அவதானமாக தங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுத்தல் அவசியம்.

அனர்த்த முகாமைத்துவ பிரிவினுடைய அறிவுறுத்தலையும் வளிமண்டலத் திணைக்களத்தினுடைய அறிவுறுத்தலையும் பின்பற்றி தங்களுடைய தொழில்செயற்பாடுகளை செயற்படுத்தப்படுத்தல் வேண்டும்.

கடல் குழப்பமாக இருப்பதனால் குறிப்பாக நெடுந்தீவுக்கான கடல் பயணமும் கடல் குழப்பம், கடும் காற்றின் காரணமாக தடைப்பட்டிருப்பதாக பிரதேச செயலாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் படகுப் போக்குவரத்தின் நிலமையினை அனுசரித்து செயற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.

கிழக்கு கடற் பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தால் வட பகுதியில் ஏதாவது அனர்த்தம் ஏற்படுமாக இருந்தால் அதனை எதிர்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தங்களுடைய பிரதேசத்தில் ஏதாவது இடர்பாடுகள் ஏற்படுமாயின் உடனடியாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினரை தொடர்பு கொள்வதன் மூலம் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றார்.

பருத்தித்துறை விசேட, சுண்டுக்குளி நிருபர்கள்


Add new comment

Or log in with...