சமூகத்திற்கு ஆசீர்வாதமாக திகழ்ந்தவர் நாபான பேமசிறி நாயக்க தேரர்

தேரரின் இறுதி கிரியையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவிப்பு

இலங்கை ராமன்ய மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய நாபான பேமசிறி நாயக்க தேரரின் சமய ஞானம், தூய்மை, நல்லொழுக்கம் சமூகத்திற்கு ஆசீர்வாதமும் முன்மாதிரியுமாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

தேரரின் மறைவு புத்த சாசனத்திற்கும் நாட்டிற்கும் உலகெங்கிலும் உள்ள பௌத்த சமூகத்திற்கும் மற்றும் தனிப்பட்ட முறையில் தனக்கும் பெரும் இழப்பாகும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

கண்டி, குண்டசாலை எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் (22) நடைபெற்ற தேரரின் தகனக் கிரியையின் போது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

தகனக் கிரியை நடைபெறும் இடத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி, சங்கைக்குரிய நாயக்க தேரரின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

பின்னர் தேரரின் நினைவாக நினைவுப் புத்தகத்தில் விசேட குறிப்பொன்றை பதிவு செய்தார்.

பௌத்த மதத்தின் ஆழமான தத்துவத்தை சமூகமயமாக்குவதிலும், அதற்கேற்ப தனித்துவமான கலாசாரத்தை கட்டியெழுப்புவதிலும் மகா சங்கத்தினர் முக்கிய பங்கு வகித்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பௌத்த சமயத்தையும், கலாசாரத்தையும் சிங்கள இனத்தையும் பாதுகாத்த அதே வேளையில் நாட்டின் ஏனைய சமூகங்களுடனான சகவாழ்வுக்கு மகா சங்கத்தினர் வழங்கும் பங்களிப்பு மகத்தானது என்று ஜனாதிபதி கூறினார். நாபான பேமசிறி நாயக்க தேரரின் தகனக் கிரியைகள் முழுமையான அரச மரியாதையுடன் நடைபெற்றன.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை ராமன்ய மகா நிகாயவின் நிர்வாக சபைத் தலைவர் கரு ஜயசூரிய மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

எம்.ஏ.அமீனுல்லா


Add new comment

Or log in with...