இலங்கைக்கு கிழக்கே உருவான தாழமுக்கம் 'நிவர்' புயலாகிறது

கடும் மழை; கிழக்கில் கடும் காற்று; நாளை சென்னை கரைக்கு

இலங்கைக்கு கிழக்கே கடற் பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாற்றமடையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று புயலாக மாறி 25ஆம் திகதி சென்னைக்கும் காரைக்காலுக்கும் இடையில் கரையை கடக்கும் என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக உருவாகும். இந்த புயலுக்கு ‘நிவர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடற் பிரதேசம் மற்றும் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களின் பல்வேறு பிரதேசங்களிலும் 150 மில்லி மீற்றர் வரையிலான கடும் மழை பெய்யும் என்றும் அந்தப் பகுதிகளில் 70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க வடக்கில் மன்னார்,காங்கேசன்துறை கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற் பிராந்தியங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அந்த திணைக்களம் மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

அதேபோன்று புத்தளம் முதல் கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கடல் பிரதேசங்களில் கடல்சார் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அந்தத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

எவ்வாறாயினும் எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் மேற்படி தாழமுக்கம் வடக்கு கடற் பிராந்தியத்தின் ஊடாக இந்தியாவின் தமிழ்நாட்டு கரையோரப் பகுதியை நோக்கி நகரலாம் என்றும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையை நோக்கி வேகமாக புயல் சின்னம் நகர்கிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையிலிருந்து 630 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 600 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. ஏற்கனவே, சென்னையில் அவப்போது மழை பெய்து மக்களை வேதனை அளித்து வரும் நிலையில், புயல் சின்னம் சென்னையை நோக்கி நகர்கிறது என்ற தகவல் சென்னை மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...