அடக்கம் செய்ய அழுத்தம் கொடுக்கவில்லை; நிரூபித்தால் இராஜினாமா

கொரோனா தொற்றிய தனது உறவினர் ஒருவரை புதைப்பதற்கு அழுத்தம் கொடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதாரன தெரிவித்த குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்த நீதி அமைச்சர் அலிசப்ரி,நான் அழுத்தம் கொடுப்பதற்காக யாருக்காவது தொலைபேசி அழைப்பு கொடுத்ததாக நிரூபித்தால் இந்த நிமிடமே அமைச்சு பதவியையும் எம்.பி பதவியையும் இராஜினாமா செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார். கொரோனா தொற்றினால் இறக்கும் ஏனையவர்கள் தகனம் செய்யப்படுகையில் நான் இறந்தால் என்னை மாத்திரம் புதைப்பதற்கு நான் ஒருபோதும் நடவடிக்கை எடுக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

நாட்டின் சட்டத்திற்கமைய தற்போது முன்னெடுக்கப்படும் விடயத்தை மாற்ற முயல்கிறோமே தவிர சட்டத்திற்கு மாற்றமாக சென்று கீழ்த்தரமான செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கீழ் இருக்கும் நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

முன்னதாக உரையாற்றிய ஹேசா விதாரண எம்.பி இரத்மலானையில் கொரோனாவில் உயிரிழந்த தனது உறவினரை புதைக்க அமைச்சர் தலையீடு செய்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.முதலில் பொசிடிவ் ஆன பெண்ணுக்கு இரண்டாவது தடவை பி.சி.ஆர் பரிசோதனை நடத்தி நெகடிவ் ஆக மாற்றி அவரை புதைக்க நடவடிக்கை எடுத்ததாக குற்றஞ்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர்,...

நான் அவ்வாறு ஒருபோதும் கீழ்த்தரமான அரசியல் செய்வதற்கு வரவில்லை.அவ்வாறு செய்திருந்தால் பதவி விலகுவேன்.குற்றஞ்சாட்டிய எம்.பி பதவி விலக தயாராக என்றும் கேள்வி எழுப்பினார்.

புதைப்பது தொடர்பில் உலக நாடுகளில் காணப்படும் முன்னுதாரணப்படி இங்கும் மேற்கொள்ள முயற்சி செய்கிறோம்.அதற்காக சட்டத்திற்கு மாற்றமாக எதுவும் செய்ய முயலவில்லை என்றும் தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்ரமணியம் நிசாந்தன்


Add new comment

Or log in with...