காசாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு மழை | தினகரன்

காசாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு மழை

முற்றுகையில் உள்ள காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதோடு உயிர்ச் சேதங்கள் இடம்பெறவில்லை என்று பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்றுக் காலை காசாவின் மேற்கு, கிழப்பு மற்றும் தெற்கு பகுதிகளில் இஸ்ரேலிய போர் விமானங்கள் உக்கிர ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.

சூரியோதயத்திற்கு முன்னர் இடம்பெற்ற இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்ட தீப்பிழம்புகளை காண முடிந்ததாக பார்த்தவர்கள் விபரித்துள்ளனர்.

பலஸ்தீன பகுதியில் இருந்து வீசப்பட்ட ரொக்கெட் குண்டுகளுக்கு பதில் நடவடிக்கையாகவே காசாவில் ஆட்சி புரியும் ஹமாஸ் இலக்குகள் மீது தாக்கியதாக இஸ்ரேல் இராணுவம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை மாலை காசாயில் இருந்து இஸ்ரேல் மீது ரொக்கெட் குண்டு வீசப்பட்டதை அடுத்து தெற்கு இஸ்ரேலிய நகரான அஷ்கெலோனில் சைரன் ஒலி எழுப்பப்பட்டது.

கடந்த வாரமும் இவ்வாறான ரொக்கெட் தாக்குதல்களுக்கு பதில் நடவடிக்கையாக காசா பகுதி மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...