பயன்படுத்திய முகக்கவசங்களை பாதுகாப்பாக அகற்றுவதில் அலட்சியம்

கொரோனா தொற்றிலில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக பாவித்த முகக்கவசங்களை பாதுகாப்பாகவும், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றியும் அகற்றாது விட்டால் எதிர்காலத்தில் பாரிய ஒரு பின்விளைவை எமது மக்கள் சந்திக்க வேண்டி ஏற்படலாம்.

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு கைகளை சவர்க்காரம் மற்றும் தொற்றுநீக்கி திரவம் என்பவற்றால் கழுவுதல், முகக்கவசம் அணிதல், தும்மும் போதும் இருமும் போதும் ரிசு கடதாசி மற்றும் முழங்கையின் உட்பகுதி என்பவற்றை பயன்படுத்தல் போன்ற நடைமுறைகளை மேற்கொண்டு கிருமி தொற்றில் இருந்து பாதுகாப்பு பெறுகின்றோம். கொரோனா தொற்று சீனாவின் பகுதிகளை ஆட்கொண்ட வேளை எமது நாட்டில் கட்டுப்பாடுகளை விதித்து ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. அக்காலப் பகுதியில் முகக்கவசங்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டதோடு, அவற்றை மனப்பயம் காரணமாக மிகவும் நூதனமாக பாவித்து முடித்த பின்னர் உரிய முறையில் அகற்றவும் செய்தனர்.

ஆனால் சிறிது காலம் நாடு வழமை நிலையில் இருந்ததால் கொவிட் 19 தொடர்பான எண்ணங்கள் எம்மை விட்டு தூரச் சென்று விட்டன. இதன் காரணமாக மக்களிடையே அச்ச நிலை குறைந்து பாவித்த முகக்கவசம் கையுறை என்பவற்றை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது கண்ட கண்ட இடங்களில் போடுதல் போன்ற செயற்பாடுகள் எம்மத்தியில் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் கொரோனா வைரஸ் நோய் தீவிரமாக பரவும் என்ற எண்ணம் மக்களிடத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும். இல்லையேல் இச்செயற்பாடு மக்களை தீவிரமாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாக்கி மிகவும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்

உலகத்தில் காணப்படும் வல்லரசு நாடுகளையும் ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையிலும் தற்போது தீவிரமாக பரவி வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. முன்னர் ஆங்காங்கே தனிமைப்படுத்தல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும், தற்போது பல்வேறு இடங்களில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதை விட தற்போது கொரோனா தொற்றாளர்கள் உள்ள மாவட்டங்களில் இருந்து வருவோர்கள் தத்தமது வீடுகளையே தனிமைப்படுத்தும் நிலையங்களாக ஏற்படுத்துவதும் அதிகரித்து வருவதையும் காணக் கூடியதாக உள்ளது

கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்படுவதையும் நாம் காண்கின்றோம். இருந்த போதிலும் பொதுமக்களுக்கு போதியளவு புரிந்துணர்வு குறைவாகவே காணப்படுகின்றது. முகக்கவசங்களை பாதுகாப்பாக பாவித்து விட்டு வீதிகள் குப்பைமேடுகள் மற்றும் நீர்க்கரைகள் போன்ற இடங்களில் போடுவது அதிகரித்து உள்ளது. தற்போது கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் முகக்கவசங்கள் மலிவான விலையில் கிடைக்கப் பெறுவதனால் தாங்கள் பாவிக்கும் முகக்கவசங்களை கண்ட கண்ட இடங்களில் சுகாதார முறைகளை கடைப்பிடிக்காது வீசி வருவதனையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

பொதுமக்கள் பாவிக்கும் முகக்கவசங்களை முறையாக அகற்றுவதற்கு விழிப்புணர்வு அவசியமாக காணப்படுகின்றது. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறு பாவித்த முகக்கவசங்கள், கையுறைகள் முறையாக அகற்றப்படாது விட்டால் ஏற்படும் தாக்கத்தை மக்களுக்கு விழிப்புணர்வு செய்வதன் மூலமே சிறந்த சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து இதன் ஊடாக இந்நோயை இலங்கையில் கட்டுப்படுத்த முடியும். கைகழுவுதல், சமூக இடைவெளி பேணல், முகக்கவசம் அணிதல், தும்மும் போது ரிசுகடதாசி அல்லது முழங்கையை மடித்து பாதுகாப்பாக இருமல் தும்மல் போன்ற செயற்பாடுகள் அன்றாட வாழ்வில் சிறப்பான முறையில் கடைப்பிடிக்கப்படும் போது தாம் பாவிக்கும் முகக்கவசங்களை முறையாக அகற்றுவதற்கும் அதன் மூலம் ஏற்படும் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பதற்குமான விழிப்புணர்வுகளை ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படுவது காலத்தின் கட்டாயத் தேவையாக தற்போது காணப்படுகின்றது.

இதனை முறையாக அகற்றுவதற்கு சுகாதாரத்துறை அதிகாரிகளின் ஆலோசனைகளை கடைப்பிடித்து சிறந்த வழிமுறைகளை மக்கள் பேணுதல் வேண்டும். இந்த கொடிய நோயிலிருந்து பாதுகாப்புப் பெற பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஏ.எஸ்.எம்.முஜாஹித்
சென்றல்கேம்ப் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...