பசில் ராஜபக்‌ஷவின் வெளிநாட்டு பயணத் தடை நீக்கம் | தினகரன்

பசில் ராஜபக்‌ஷவின் வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

பசில் ராஜபக்‌ஷவின் வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்-Divi Neguma Scam-Basil Rajapaksa Travel Ban Removed

- FCID யிலும் முன்னிலையாகத் தேவையில்லை

முன்னாள் அமைச்சரும், ஜனாதிபதி செயலணியின் பிரதானியுமான பசில் ராஜபக்‌ஷவுக்கு விதிக்கப்பட்டிருந்த, வெளிநாடு செல்வதற்கான பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்றையதினம் (23), மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க இவ்வுத்தரவை வழங்கினார்.

கடந்த 2015 காலப் பகுதியில் திவி நெகும (வாழ்வு எழுச்சி) திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூபா 2,992 மில்லியன் நிதியினை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், அவர் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் அவருக்கு பிணை வழங்கப்பட்டு, வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, தனது கட்சிக்காரர், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்பு செயலணிக்கு தலைமை வகிப்பதால், பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய இருப்பதாக, பசில் ராஜபக்‌ஷ சார்பில் முன்னிலையான ​​ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன மன்றில் தெரிவித்தார்.

இதை உறுதிப்படுத்தும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட கடிதத்தையும் மன்றில் சமர்ப்பித்தார்.

அத்துடன், குறித்த வழக்கின் பிணை நிபந்தனையாக விதிக்கப்பட்டிருந்த, 3 மாதத்திற்கு ஒரு முறை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்பிரிவில் முன்னிலையாகி கையொப்பமிட வேண்டும் எனும் நிபந்தனையை பிரதிவாதி மீறவில்லை என்பதால், அதை நீக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

குறித்த கோரிக்கை தொடர்பில், சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எவ்வித எதிர்ப்பையும் வெளியிடவில்லை.

அதனைத் தொடர்ந்து குறித்த நிபந்தனையையும், நீக்குவதற்கும் நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

அதன்படி, பசில் ராஜபக்ஷக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்குவதற்கும், குடிவரவு மற்றும் குடிவரவு கட்டுப்பாட்டாளருக்கு அதனை அறிவிப்பதற்கும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட பசில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்வதற்கு முன் நீதிமன்றத்திற்கு முற்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இவ்வழக்கின் ஏனைய பிரதிவாதிகளான, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜயதிலக்க, 'திவி நெகும' அபிவிருத்தித் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக மற்றும் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்கள்.

இதேவேளை, தங்களது கட்சிக்காரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்றும், பிரதிவாதிகளை வரவழைக்காமல், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 200 ஆவது பிரிவின் கீழ் அவர்கள் நிரபராதிகள் என விடுவிக்கப்பட வேண்டுமென, பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கோரியதோடு, எழுத்து மூல சமர்ப்பணங்களையும் தாக்கல் செய்தனர்.

குறித்த வழக்கு இம்மாதம் 25ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதுடன், சட்ட மாஅதிபரின் எழுத்து மூல சமர்ப்பணங்கள் அன்று முன்வைக்கப்படவுள்ளது.

 


Add new comment

Or log in with...