அன்பு ஒன்றே உலகின் மதம்

பகவான் சத்யசாயி பாபா 95வது பிறந்த தினம் இன்று

உலகிலுள்ள பல கோடி பக்தர்களால் நேசிக்கப்படும் பகவான் சத்திய சாயி பாபா அவர்கள் 1926ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் திகதி அவதரித்தார்.

இவரது இயற்பெயர் சத்ய நாராயண ராஜு ஆகும். இவரின் தாயார் ஈஸ்வரம்மாள். தந்தையார் ராஜு ரட்னகரம் ஆவார். பகவான் சத்திய சாயி பாபா அவர்கள் இளமைக் காலத்தில் இருந்தே ஒரு அதிசயக் குழந்தையாகத் திகழ்ந்தார்.

பாபா அவர்கள் 14 வயதாக இருக்கும் போது 1944 மார்ச் மாதம் 8ம் திகதி ஒரு சம்பவம் நடந்ததாகப் பதிவாகியுள்ளது. கொடிய விஷமுடைய கொடுக்கான் அவரைத் தீண்டியுள்ளது. பல மணி நேரமாக அவர் நினைவிழந்து இருந்திருக்கிறார். இனி மீண்டு எழ மாட்டார் என நாட்டுப்புற வைத்தியர்கள் தெரிவித்த வேளை, அவர் சில மணிநேரங்களில் எழுந்து பேச ஆரம்பித்தார். அவர் எழுந்து பேச ஆரம்பித்த பாஷையைப் புரிந்து கொள்ள முடியாத மக்கள் தேள் கடித்ததால் அவருக்கு புத்தி பேதலித்ததாக நம்பினர். ஆனால் அவர் பேசிய பாஷை சமஸ்கிருதம் என்று பின்னர் அறியப்பட்டது.

அவர் சமஸ்கிருதத்தை அதற்கு முன்னர் கற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். அப்படி இருக்கும் போது அதை அவர் எவ்வாறு பேசினார் என மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் 1940ம் ஆண்டு மே 23ந் திகதி சாய்பாபா தனது வீட்டில் இருந்த அனைவரையும் அழைத்தார். திடீரென தனது கையில் இருந்து கற்கண்டை வரவழைத்து அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். அதற்கு சாய்பாபா “நான் யார் தெரியுமா? சீரடி சாய்பாபாவின் மறு பிறவி” என்று கூறினார். அதன் மூலமே அவரை முதல் முதல் ஒரு தெய்வப்பிறவி என மக்கள் நம்ப ஆரம்பித்தனர்.

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் அவருக்கு பக்தர்கள் பெருகினர். வெளிநாட்டவரும் வேற்றின மக்களும் அவரை நாடி, நன்மைகளைப் பெற்றனர்.

சத்ய சாயி பாபா அவர்களுக்கு வெளிநாட்டு பக்தர்கள் அதிகரித்ததால் அவர்கள் நன்கொடையாகக் கொடுக்கும் பணத்தைக் கொண்டு அவர் புட்டபர்த்தியை நவீன நகரமாக மாற்றினார். மலைகள் சூழ அடிவாரத்தில் இருந்த அக்குக்கிராமத்தை ஒரு நகரமாக்கிய பெருமை அவரையே சாரும். விமான நிலையம், மருத்துவக் கல்லூரி, இலவசப் படிப்பு, பாடசாலை, பல்கலைக்கழகம், இலவச மருத்துவமனை, இலவச இருதய அறுவை சிகிச்சை என பல திட்டங்களை நிறைவேற்றினார் பாபா. பாபா இருதய அறுவை சிகிச்சை மருத்துவமனை, இதுவரை பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. குடிக்கும் நீர் என்றால் அது ஒரு கனவு என்று நினைத்திருந்த கிராம மக்களுக்கு நீர் வசதி செய்து கொடுத்துள்ளார்.

ஆந்திர அரசாங்கமே செய்ய தயங்கிய காரியம் ஒன்றை எந்த எதிர்ப்பு வந்தாலும் பரவாயில்லை என அவரே முன் நின்று செய்து முடித்தார். பல கோடி ரூபா செலவில் சுமார் 3500 கி. மீ நீளமான குழாய்களை அமைத்தார். அதனூடாக நீரை எடுத்து வந்து வரண்ட பல கிராமங்களைச் செழிப்புறச் செய்தார். விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத மக்கள் நீர் கிடைத்ததால் விவசாயம் செய்தனர். தமது வாழ்வாதாரத்தை வளப்படுத்தினர். சுமார் 5 இலட்சம் மக்கள் பல குக்கிராமங்களில் இன்று விவசாயம் செய்வது பாபாவின் நீர்ப்பாசனத் திட்டத்தினால் பயன் பெறுகின்றனர்.

இலட்சக்கணக்கான மக்கள் உயிர்வாழ, சத்திர சிகிச்சைகளை இலவசமாகச் செய்துகொள்ள வசதி செய்து கொடுத்தார். இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு இலவசக் கவ்வி கொடுத்து, இலட்சக்கணக்கான மக்களுக்கு குடிக்கவும், விவசாயத்துக்கும் தண்ணீர் கொடுத்து அவர்கள் வாழ்வாதாரங்களை உயர்த்தி அவர்களை வாழவைத்த ஒரு நல்ல மனிதராக பகவான் சத்ய சாயிபாபா திகழ்ந்தார்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்பர். அதனையே பாபா செய்திருக்கிறார். அவர் பல இலட்சக்கணக்கான மக்களுக்கு உதவி செய்துள்ளார்.

1950 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி புட்டபர்த்தியில் ‘பிரசாந்தி நிலையம்’ என்ற பிரமாண்டமான ஆசிரமத்தை கட்டி அவருடைய 28வது பிறந்த நாளில் திறந்து வைத்தவர் அவர். 1957 ஆம் ஆண்டு பிரசாந்தி நிலைய வளாகத்தில் இலவச மருத்துவ மனையை திறந்து வைத்தார்.

1968 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி ஆந்திரா மாநிலத்தில் உள்ள அனந்தபூரில் மகளிர் கல்லூரி ஒன்றை திறந்து வைத்தார். 1968 ஆம் ஆண்டும் மும்பையில் ஆன்மீகம் மற்றும் சமூக சேவைக்காக தர்மஷேத்ரா என்ற சத்ய மந்திரை நிறுவினார்.

1972 ஆம் ஆண்டு ஆன்மீக மற்றும் சமூக பணிகளை நிர்வகிக்க ஸ்ரீசத்ய சாய் சென்ட்ரல் டிரஸ்ட்டை நிறுவினார். இவ்வாறாக 1973 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் சிவம் மந்திரையும் 1981 ஆம் ஆண்டு புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய் பல்கலைக்கழகத்தையும் தொடங்கினார். இவ்வாறாக அவர் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது பணிகளை செய்துகொண்டே வந்தார்.

“பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினுள் இருக்கும் ஆன்மாவுக்குள்ளும் கடவுளின் பிரதிநிதித்துவம் இருக்கிறது என்பதை அவர்களை உணர்ந்து வைத்து கடவுளை சென்றடையும் வழியின் மூலம் அவர்களை சகோதரத்துவம் என்ற பிணைப்பின் கீழ் ஒரே குடும்பமாக இணைப்பதே என் குறிக்கோள். அதற்காக நான் வருகை தந்துள்ளேன்” என்று கூறிய பகவான் அவர்கள் உண்மை, நேர்மை, அமைதி அன்பு மற்றும் அஹிம்சை ஆகிய ஐந்தும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதற்கான வழி. கடவுளிடம் அன்பு செலுத்துதல், தவறு செய்ய அஞ்சுதல் மற்றும் ஒழுக்கநெறிகளை கடைப்பிடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

“ தன்னலமற்ற சேவை செய்வதன் மூலம் பாவங்களில் இருந்து விடுபட முடியும். மனிதனுக்குச் செய்யும் சேவை கடவுளுக்குச் செய்யும் தொண்டு. எல்லா மதங்களும் சிறு சிறு நதிகளாகும் எல்லா நதிகளும் போய்ச் சேருவது கடலில்தான். கடலில் சேர்ந்து விட்டால் பின்பு அது நதியல்ல. இந்த நியதிதான் ஸ்நானம்!இது எல்லா மதங்களையும் ஆட்கொள்கிறது. ஆகவே இவ்வுலகில் ஒரே ஒரு மதம். அது தான் அன்பு மதம்” என்று கூறி, இக்கோட்பாட்டை உலகறியச் செய்து உலகில் உள்ள எல்லா இன மக்களையும் அரவணைக்க வந்தவர் பகவான் ஸ்ரீ சத்யசாயி பாவா அவர்கள்.

1999 ஆம் ஆண்டு மதுரையில் ஆனந்த நிலைய மந்திரை அமைத்தார். 2001 ஆம் ஆண்டு ஏழைகள் இலவசமாக சிகிச்சை பெறும் விதத்தில் பெங்களூரில் நவீன பல்நோக்கு கூட்டுறவு வைத்தியசாலையை அமைத்தார்.

2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி மூச்சுத் திணறல் காரணமாக புட்டபர்த்தியில் உள்ள மருத்துவமனையில் சத்யசாயி பாபா சேர்க்கப்பட்டார்.

2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பகவான் சத்ய சாயி பாபா ஜீவசமாதி அடைந்தார். அவர் ஜீவ சமாதி அடைந்து விட்டாலும் அவரது பெயரால் அமைக்கப்பட்ட சமய சமூக சேவை நிறுவனங்களின் சேவைகள் தொடரப்பட்டு வருகின்றன.

அவரது திருநாமத்தால் அமைக்கப்பட்டுள்ள பகவான் சத்ய சாயி பாபா நிலையங்களில் இன்று 23 ஆம் திகதி அவரது ஜனன தினத்தையொட்டி பூஜைகளும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. உலகெங்குமுள்ள அவரது பக்தர்கள் பகவானின் ஜனன தினத்தை பிரார்த்தனைகளுடன் இன்று அனுட்டிக்கின்றனர்.


Add new comment

Or log in with...