ஊடகவியலாளரை பழிவாங்கிய சம்பவம்; ஆராய சுகாதார பணிப்பாளர் உத்தரவு | தினகரன்

ஊடகவியலாளரை பழிவாங்கிய சம்பவம்; ஆராய சுகாதார பணிப்பாளர் உத்தரவு

மருதமுனை தாய்,சேய் நலனோம்பு நிலைய குறைபாடுகள் தொடர்பில் மேலதிகாரிக்கு அறிவித்தமைக்காக ஊடகவியலாளரைப் பழிவாங்கிய குற்றச்சாட்டை உடனடியாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்

இது பற்றித் தெரியவருவதாவது,

மருதமுனையில் இயங்கி வரும் தாய், சேய் நலனோம்பு நிலையத்திற்கு தடுப்பூசி போடுவதற்கான(16.11.2020) சென்ற தாய்மார்களை கைக்குழந்தைகளுடன் காலை 11.30 வரை காத்திருக்க வைத்த சம்பவம் தொடர்பில் அன்றைய தினம் தனது நான்கு மாத குழந்தையினை அழைத்துச் சென்ற ஊடகவியலாளர் ஜெஸ்மி மூஸா கல்முனை பிராந்திய தாய், சேய் வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.பஸாலுக்கு அறிவித்துள்ளார். பிராந்திய வைத்திய அதிகாரியின் பணிப்புரைக்கமைய கல்முனையிலிருந்து ஊசி மருந்துகள் வரவழைக்கப்பட்டு குறித்த விடயம் நடந்தேறியுள்ளது.

சம்பவம் நடைபெற்ற மறுதினம் மருதமுனை தாய்,சேய் நலனோம்பு நிலையத்திற்குப் பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி சுகாதாரப் பரிசோதகர்கள் அடங்கலாக 12 பேரை அழைத்து வந்து குறித்த ஊடகவியலாளரைப் பழிவாங்கும் நோக்கில் அவரது வீட்டில் சுகாதார வேட்டை நடத்தியுள்ளார்.

அதிகாரியின் கடமைக்கு தொந்தரவற்ற முறையில் நடந்து கொண்ட ஊடகவியலாளர் இது தொடர்பில் கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு முறைப்பாடொன்றை வழங்கியதன் நிமித்தமே விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பழி வாங்கும் நோக்கில் நிகழ்வு நடந்த மறுநாள் மருதமுனையிலுள்ள தமது வீட்டிற்கு வந்தமை, தொடராகப் பாவிக்கின்ற ஆறு மீன்கள் விடப்பட்டுள்ள கிணற்றுக்குள் இறந்த குடம்பி இருப்பதாகக் கூறி பொலிஸாரை தவறாக வழி நடத்த எத்தனித்தமை, வேறு பிரதேசஙகளில் இருந்து சுகாதாரப் பரிசோதகர்களை பழிவாங்கும் நோக்கில் அழைத்து வந்தமை, அறிவுறுத்தல் ஏட்டைப் பிழையாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மணல்சேனை நிருபர்


Add new comment

Or log in with...