தேத்தாதீவு விபத்தில் படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் தேத்தாதீவில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியாசலை வட்டாரம் தெரிவிக்கின்றது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேத்தாதீவு கிராமத்தில் வெள்ளிக்கிழமை (20) காலை 6.30 மணியளவில் பணிஸ் வாங்குவதற்காக பிரதான வீதியை குறுக்கிட்டு கடைக்குச் சென்று திரும்பி வந்த தேத்தாதீவைச் சேர்ந்த 7 வயதுடைய மயில்வாகனம் சனுஸிகா எனும் சிறுமி மீது சிறிய ரக லெறி ஒன்று மோதியுள்ளது. பொலன்னறுவைப் பகுதியிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த லொறியே இவ்வாறு சிறுமி மீது மோதியுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி உடனடியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

சிறுமியின் உடல் நிலமையினை அவதானித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் சிறுமி சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படல் வேண்டும். அதற்காக (உயிர்காப்பு படம்) சி.ரி.ஸ்கேன் எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இது இவ்வாறு இருக்க (உயிர்காப்பு படம்) சி.ரி.ஸ்கேன் எடுக்கும் கதிரியக்கவியலாளர்கள் கடந்த 2 இரண்டரை மாதங்களாக தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு கடமைக்குச் சமூகமளிக்காமல் இருக்கின்றார்கள். சிறுமியின் தாய் தனது பிள்ளையைக் காப்பாற்றுங்கள் என கெஞ்சி மன்றாடிய நிலையில், வெள்ளிக்கிழமை காலை சுமார் 7.30 மணிக்கு எடுக்க வேண்டிய (உயிர்காப்பு படம்) சி.ரி.ஸ்கேன் முற்பகல் 10.30 மணியளவில் தான் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் (உயிர்காப்பு படம்) சி.ரி.ஸ்கேன் அறிக்கையைப் பார்வையிட்ட வைத்தியர்கள் சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் அளவிற்கு சிறுமியின் உடல் நிலை இல்லை என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சிறுமி உயிரிழந்துள்ளார்.

(பெரியபோரதீவு தினகரன் நிருபர்)

 

Add new comment

Or log in with...