நாட்டுக்கூத்து கலையில் நவீன சிந்தனையாளன் ஆரையூர் மூனாக்கானா | தினகரன்

நாட்டுக்கூத்து கலையில் நவீன சிந்தனையாளன் ஆரையூர் மூனாக்கானா

முத்தமிழ் என் மூச்சு, மூன்று தமிழும் செழிக்க வேண்டும், அதற்காகவே நான் வாழ வேண்டும்!

இவ்வாறான உத்வேகத்தோடு புறப்பட்டு அன்னைத் தமிழுக்குத் தொண்டாற்றி, முதுபெரும் தமிழறிஞன் என்ற புகழோடு தன் வாழ்க்கைப் பயணத்தை இனிதே நிறைவு செய்தவர்தான் மூனாக்கானா.

முத்தமிழ் என்று மட்டும் எல்லைக் கோடுபோடாமல் தமிழ் வைத்தியம், சோதிடம் ஆகிய சேவையுடன் மக்கள் பணியேற்று மக்கள் மனங்களில் நிறைந்த பெரியார் அவர். வயது மூப்படைந்தாலும் தேகக் கட்டுடல் குலையாமல் நிறைந்த தேகாரோக்கியத்துடன் தோற்றம் காட்டியதனால் காண்போரெல்லாம் 'இளந்தாரி மூனாக்கானா ஐயா' என்று அழைத்து மகிழ்ந்தார்கள்.

அவ்வாறு 96 ஆண்டுகள் மண்ணுலகில் நீண்ட வாழ்வு கண்டவர் அவர்.

தமிழர் பெரும்பதியாம் ஆரையம்பதியில் 1924.01.22 அன்று முருகப்பன்_ - தங்கம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் மூனாக்கானா.

ஈன்றோர் கணபதிப்பிள்ளை என்று பெயர் சூட்டினாலும் தனது முழுப்பெயரின் முதலிரண்டு எழுத்துக்களை ஒன்றுகூட்டி நீண்டொலிக்கும் வண்ணம் 'மூனாக்கானா' என்று நாமம் தரித்து தமிழ் இலக்கியவுலகில் கால்பதித்தார்.

ஆரையம்பதி இ.கி.மி. வித்தியாலயத்தில் கல்வி பயின்று தமிழ்மொழி ஆசானாக கல்விச் சேவைக்குள் இணைந்து ஈழத்தின் பல பகுதிகளிலும் கல்விப் பணிபுரிந்து ஈற்றில் அதிபராக மிளிர்ந்தார். அக்காலத்தே அவருக்குள் கருக்கொண்ட கலையுணர்வு கவின் கலாமன்றமாக உருக்கொண்டது. அவரது கன்னிப் படைப்பாக 'இருலேகா' என்ற நாடகம் கலைத்தாயின் முதற் காணிக்கையானது.

தொடக்கமோ வெற்றியானதால் அவர் பயணம் முனைப்புப் பெற்றது.

நாட்டுக்கூத்து:

தமிழர் கலைவடிவம் என்று பேசப்படும் நாட்டுக்கூத்து கலை வடிவத்திற்கு உயிர் கொடுத்த ஊர்களிலே ஆரையம்பதி முதன்மையானது. அண்ணாவிமார் நிறைந்த அவ்வூரிலே கூத்துக் கலரிகளுக்குக் குறைவில்லை. அதனால் அந்த மேன்மையை ஆரையம்பதி அழகேச முதலியார் எனும் புலவர்

'கலைமரபு நிலை நாட்டுக்கூத்து நெறி புரக்கும்

காவரண் ணாவியார் வாழ் ஆரையூரெம் நாடே'

என்று செய்யுள் வடித்தார்.

அவ்வூரிலே மிகப் பிரபல்யமாக விளங்கிய 'அண்ணாவி நல்லார்' என்பவர் மூனாக்கானா ஐயா அவர்களின் உறவினரானதால் வயது 5 கூட நிரம்பாத அவரது பிஞ்சு நெஞ்சில் இக்கலை ஆழமாகப் பதிந்தது. எங்கெல்லாம் சலங்கை ஒலி கேட்கிறதோ அங்கெல்லாம் முன்வரிசையில் அமர்ந்து கூத்துக் கலையைச் சுவைத்தவர்.

அவர் ஆசிரியர் கல்லூரியில் பயின்ற காலத்தில் அதுவரை கிராமப் புறங்களில் கிராமவாசிகள் ஆடிய அக்கலை நகர்ப்புறத்தில் படித்தவர்கள் பங்கேற்கும் வண்ணம் செய்து அக்கலையினை மேல் நிலைக்குக் கொண்டு சென்றவர். தரையிலே வட்டக்கலரியமைத்து இரவெல்லாம் ஆடுகிறார்கள். இதிகாசங்கள், புராணங்களையே கருப்பொருளாகக் கொள்கிறார்கள். இப்படியே தொடர்ந்தால் அதன் எதிர்காலம் எப்படியமையுமோ என்றெண்ணி அக்கலையின் மரபுகளை மீறாமல் அக்கலையை நவீனமயப்படுத்த எண்ணம் கொண்டார்.

தரையிலே வட்டக்கலரி அமைத்து ஆடிய ஆற்றுகையை மேடையிலே அரங்கம் கண்டார். சமூக வாழ்வியல் விடயங்களை கருப்பொருளாக்கினார். விடிய, விடிய நடைபெற்ற கூத்துக்கலையை ஓரிரு மணித்தியாலங்களாக மட்டுப்படுத்தினார். நகைச்சுவையால் மினுக்கினார். இவ்வாறு அவர் கண்ட நவீனத்தின் வெளிப்பாடாக வெளிவந்த படைப்புக்கள் இலட்சுமி கல்யாணம், பரிசாரி மகன்.

ஊரிலே மேடையேறிய அவர் படைப்புக்கள் பெரிய வரவேற்புக்களைப் பெற்றதனால் நாடெல்லாம் அரங்கம் கண்டு சாதனை படைத்தன. அதனால் அவரது நவீன சிந்தனை அங்கீகாரம் பெற்றது என்றால் மிகையில்லை. அதன் தொடர்ச்சியாக சூறாவளி, அலங்காரரூபன் ஆகிய கூத்துக்கள் வெளிவந்தன. மேலும் கவிதைகள், வில்லுப்பாட்டு, சிறுகதைகள், கிராமிய நடனம், ஆய்வுகள் என்றவாறு அவரது கலைப் பணிகள் விரிவுபெற்றன.

1948களில் அவரது கவிப்படைப்புகளான 'காலாகோலம்', 'புழுகுப்புராணம்' தினகரன் பத்திரிகையில் தொடராக வெளிவந்தன.

கணிதக் குறியீடான 'ழு' எனும் குறியீடு சைபர், பூச்சியம், சீறோ, நோட் என்ற வார்த்தைப் பிரயோகங்களால் பேசப்பட்டாலும் அவ்வார்த்தைகள் எதுவுமே தமிழ்ப் பதங்கள் இல்லை என்பதை அறிந்து அதற்கான தமிழ்ச் சொல்தேடி சங்ககால இலக்கியமான பரிபாடலுக்குள் தோய்ந்து 'பாழ்' என்பதே அதன் தமிழ் வார்த்தையெனக் கண்டறிந்து 'தினகரன்' பத்திரிகையில் பத்தியும் தந்தார்.

சிறுகதைகள்:

1940 இலிருந்தே 78 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருந்த எழுத்துக்களில் சம்பந்தி, குடுகுடுப்பைக்காரன், வானவில் எனும் சிறுகதைகள் சிறப்புப் பெற்றன.

அவரது படைப்புகளாக இலக்கிய நெஞ்சம், கவிதை நெஞ்சம் எனும் இரு நூல்கள் வெளிவந்தன. அத்துடன் நாடக நெஞ்சம், வில்லுப்பாட்டு நெஞ்சம், கிராமிய நெஞ்சம் என்னும் நூல்களும் வெளியிடப்படவிருக்கின்றதாக அறியப்படுகிறது.

கீதங்கள்:

16 பாடசாலைகளுக்கான கீதங்களை யாத்தவர். இன்னும் அவர் பெயர் சொல்லி அக்கீதங்கள் அப்பாடசாலைகளில் மாணவர்களால் இசைக்கப்படுகின்றன.

கிழக்கு மாகாண சபைக்கொரு கீதம் வேண்டுமென்று அச்சபை முயற்சிகளை மேற்கொண்டது. மூனாக்கானா ஐயா உட்பட பல கவிஞர்களை கல்முனைக்கு அழைத்து இயற்ற வைத்தார்கள். அக்கீதங்களுள் ஐயாவின் கீதமே தெரிவானது. ஆனாலும் இன்னும் அக்கீதம் வெளிவராமல் கிடப்பிலுள்ளதாகப் பேசப்படுகிறது.

வைத்தியம், சோதிடம் ஆகிய துறைகளிலும் கூட மூனாக்கானா ஐயா கைதேர்ந்தவர். இல்லம் அமைத்திட, இல்லம் புகுந்திட, பிறந்த பிள்ளைகளின் பலாபலன்களை அறிந்திட, குறிப்பெழுதிட, கல்யாண நாள் காண அவரை மக்கள் நாடி வந்த போதெல்லாம் மனங்கோணாமல் அப்பணிகளை பெரும் மனம்கொண்டு வழங்கியவர்.

தமிழ் வைத்தியத்தைக் கூட அவர் விட்டு வைக்கவில்லை. எங்கெல்லாம் முகிலிகள் காணப்படுகின்றன என்றறிந்து அங்கெலாம் சென்று அவைகளைச் சேகரித்து தைலம் காய்ச்சி, மேலும் வகை, வகையாக மருந்துகள் தயாரித்து வைத்திருப்பார். நோய் பீடித்தவர்கள் அவரை நாடி வருவார்கள். இவ்வாறு நீண்ட நாள் பீனிச நோயாளிகள், விழிகளில் வெண்படலம் கண்டவர்கள் எல்லோரும் பரிசாரி மூனாக்கானா ஐயாவின் பரிசாரத்தால் பரிகாரம் பெற்றார்கள். நோய்க்கு மருந்து என்றதற்கப்பால் நோயாளிக்கு மருந்து கொடுத்தவர் என்றால் மிகையில்லை.

நாடி வருவோரோடு நயமான உரையாடல், இடையிடையே பளிச்சிடும் நகைச்சுவை மின்னல் கீற்றுக்கள். அதனோடு பாதி நோய் விலக்கிடுவார். அத்தனைக்கும் பணமீட்டும் பரிசாரி என்றல்லாமல் முற்றுமே இலவசம் என்ற பரிசாரியாக வாழ்ந்து மகிழ்ந்தார்.

ஆரையூரில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் கண்ணகை அம்மன் வழிபாட்டில் அதீத ஈடுபாடு கொண்டதோடு அம்மன் புகழ் பேசிடும் கவிவரிகளை யாத்து தமிழகத்திலே இசையமைத்து இறுவட்டு வெளியிட்டு அம்மன் அருள் பெற்றவர்.

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராகி அதன் வளர்ச்சியிலும் பங்கு கொண்டவர். ஆற்றிடும் அவரது தமிழ்ப் பணிகளைப் போற்றிட மட்டக்களப்பிலே பெரும் கௌரவம் வழங்கி சங்கம் பெருமை கொண்டது.

தலைக்கோல் விருது

அரச விருது, தமிழ் மன்றங்களின் விருதுகள் என்று விதம், விதமான விருதுகளால் அலங்கரிக்கப்பட்டவர் மூனாக்கானா ஐயா. என்றாலும் இந்திர விழாவிலே ஆடல் அரசி மாதவியின் அற்புதம் நிறைந்த நடனத்தில் மையல்கொண்டு மயங்கிய சோழ மன்னன் விருதுகளுக்கெல்லாம் சிகரமான அதியுயர் விருதாக மாதவிக்கு வழங்கிய தலைக்கோல் விருதினை கிழக்குப் பல்கலைக்கழகம் மூனாக்கானா ஐயாவிற்கும் சொந்தமாக்கிப் பெருமை கொண்டது. பெற்ற விருதுகளுக்கெல்லாம் பேரான பெரு விருதுபெற்று தனக்கும் தன்னை ஈன்ற மண்ணுக்கும் பெருமை சேர்த்த மூனாக்கானா ஐயா இன்றில்லை. அவர் மண்ணுக்கு விடை கொடுத்த 31ம் நினைவு நாளான இன்று அவர் பற்றிய நினைவுப் பகிர்வை வழங்குவதில் மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் பெருமை கொள்கிறது.

தமிழுக்குத் தொண்டாற்றியோர் சாவையே வென்று தமிழோடு வாழ்ந்திடுவாரே.

வே. தவராஜா


Add new comment

Or log in with...